ஏன் சுஷாந்த் மரணம் மட்டும் மக்களின் கோபத்தை தூண்டியது?

entertainment

திரைப்பட சூழலில் உள்ள அரசியல், மன அழுத்தம், வாய்ப்புகள் தட்டிப்போவது, தனிப்பட்ட காரணங்கள் என ஒரு நடிகனின் தற்கொலைக்குப் பின் பல்வேறு அறியப்படாத பதில்கள் இருக்கும்.

இந்தியா போன்ற அதிக திரைப்படங்கள் உற்பத்தியாகும் தேசத்தில், ஒரு நடிகனின் மரணம் ஏற்படுத்தும் பாதிப்பு சொல்லில் அடங்காதது. இதற்கு முன், பல்வேறு கலைஞர்கள் சோககரமான முடிவை நோக்கி நகர்ந்தாலும், சுஷாந்த் சிங்கின் முடிவைப் போல வேறொரு நடிகனின் மரணம் ரசிகனின் மனதை இந்தளவிற்கு பாதித்ததில்லை எனக் கூறலாம். சுஷாந்த் சிங்கின் துயர மரணம் பாலிவுட் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இறந்த சில வாரங்களுக்குப் பிறகும், பொதுமக்களின் இதயத்தில் உள்ள கோபமும் வலியும் மறைந்து போக மறுக்கின்றன.

சுஷாந்தின் மரணம் பாலிவுட் வெளியில் இருந்து வருபவர்களை நியாயமற்ற முறையில் நடத்துவதையும், வாரிசு நட்சத்திரங்கள் அவர்களிடம் பாரபட்சம் காட்டுவதையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. சுஷாந்த் ரசிகர்கள் வாரிசு நட்சத்திரங்களையும், அவர்களின் படங்களையும் புறக்கணிக்கக் கோரி சமூகவலைதளத்தில் கோபத்துடன் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜூம் டிவிக்கு அளித்த பேட்டியில் பாலிவுட்டின் பிரபல நடிகர் மனோஜ் பாஜ்பாய், இந்த விவகாரம் குறித்து தனது பார்வையை முன்வைத்தார். சுஷாந்த் சிங்கின் மறைவு குறித்த பொது மக்களின் கோபத்தின் பின்னுள்ள நியாயத்தைப் பேசிய மனோஜ் பாஜ்பாய், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம் என்று கூறுகிறார்.

இதைப் பற்றி பேசிய மனோஜ், “கோபம் உங்களை(பாலிவுட்) நோக்கி செலுத்தப்படும்போது, மக்கள் கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்க வேண்டும். உங்கள் படம் வெற்றிபெறும்போது மட்டும் மக்கள் சரியாக இருக்கிறார்கள் என்றால், அவர்கள் கேள்விகளைக் கேட்கும்போது நீங்கள் பதிலளிப்பதும் மிகவும் முக்கியம்.

இயக்குநர் சேகர் கபூர் சுஷாந்தை மிகவும் நெருக்கமாக அறிந்திருந்தார். நானும் ‘சோஞ்சிரியா’ படத்தில் சுஷாந்துடன் பணியாற்றியிருக்கிறேன். எல்லோரும் இன்னும் அதிர்ச்சியில் தான் இருக்கிறோம். இது நடந்தது என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவருடன் தொடர்புடைய அனைவரும் இதை மோசமாக உணர்கிறார்கள். ஆனால் சுஷாந்தின் வலியை எங்களால் புரிந்து கொள்ள முடியாது” என்று கூறினார்.

பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்துப் பேசிய மனோஜ் பாஜ்பாய், “இது குறித்து நான் 20 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறேன். ஒரு தொழிலாக அவர்கள் அரைவேக்காட்டுத்தனத்தைக் கொண்டாடுகிறார்கள். தொழிற்துறையை மறந்துவிடுங்கள், ஒரு தேசமாகவே நாம் அரைவேக்காட்டுத்தனத்தைக் கொண்டாடுகிறோம். எங்கோ ஏதோ ஒரு குறை, நம் சிந்தனை செயல்பாட்டில், நமது மதிப்பு அமைப்பில் இருக்கிறது. புதிய திறமையைப் பார்க்கும்போது, அதை உடனடியாக புறக்கணிக்க அல்லது தள்ளிவிட விரும்புகிறோம். இதுதான் நம்முடைய மதிப்பீட்டு முறை” என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சுஷாந்த் குறித்து இதற்கு முன்பே பேசியுள்ள மனோஜ், “என்னால் முடிந்ததை விட 34 வயதை எட்டியுள்ள சுஷாந்த் செய்துள்ளார். நம் அனைவருக்கும் நம்முடைய உணர்ச்சிகளில் உயர்வுகளும் தாழ்வுகளும் உள்ளன. சுஷாந்த் விதிவிலக்கல்ல. நான் அவரைப் போன்ற திறமையானவன் என்று நினைக்கவில்லை. நான் அவரைப் போன்ற புத்திசாலித்தனமும், அறிவும் நிரம்பியவன் இல்லை. அவரது சாதனைகளுடன் ஒப்பிடும்போது, 34 வயது வரை எதையும் சாதித்ததாக நான் நினைக்கவில்லை. எனது சாதனைகள் மிகச் சிறியவை என்று நினைக்கிறேன். அப்படித்தான் நான் அவரை நினைவில் கொள்கிறேன். நான் அவரை ஒரு நல்ல மனிதனாக மட்டும் நினைவில் கொள்ளவில்லை” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

**-முகேஷ் சுப்ரமணியம்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *