மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 அக் 2020

பாடலதிகாரம் 4: நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி!

பாடலதிகாரம் 4: நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி!

உஷா பாரதி

புதுப்புது அர்த்தங்கள் – புதிய பரிமாணம்

ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும் என் மேல் ஒரு போர் தொடுக்க

எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு மானே வா உனை யார் தடுக்க

தனது திருமண உறவில் ஒரு முழுமையற்ற மனநிலை ஆணுக்கோ, பெண்ணுக்கோ ஏற்பட்டால், இயல்பில் அவர்களுக்கான தேடல் தொடரும். அந்தத் தேடலில் ஒரு உறவு மலர்ந்தால் அதை உலகம் எப்படி பார்த்தால் என்ன? அது அவர்கள் இருவருக்குமான தேடல். அவர்களுக்கான அழகியல் என்பதை இந்த ஒரு பாடல் நமக்கு உணர்த்திவிடும்.

காதல், காதலின் வழித்தோன்றும் காமம். அல்லது,

காமத்தின் வழி தோன்றும் காதல்... சமூகம் என்ன சொன்னால் என்ன?

எங்களுக்கான வாழ்வை வாழ்ந்து முடித்துவிட வேண்டும் என்ற மனநிலையிலுள்ள ஆணும், பெண்ணும் பாடும் பாடலிது.

புதுப்புது அர்த்தங்கள் என்ன சொல்கிறது? அதீத அன்பும், அளவுக்கதிகமான சந்தேகமும் உள்ள ஒரு பெண்ணுடனான வாழ்வில் மூச்சுத்திணறி வெளியேறும் பாரதி, இதேபோன்று வேறொரு சூழலில் தனது கணவனை விட்டு வெளியேறும் கௌரி – இருவருக்குமிடையிலான நட்பு, உறவாக மாறுகிறது. ஆனால், இறுதியில் இருவரும் அவரவர் இணையருடன் சேருவதாக கதை முடிகிறது.

இருந்தாலும், படத்தின் முடிவு இயல்பானதா? கறந்த பால் மடி புகுமா என்ற கேள்வி நம்முள் எழுகிறது. அது ஏன், கணவனும் மனைவியும் சேர்வதுதான் மங்கலமா?

இந்தப் படம் நமக்குள், இப்படியான பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

விலக்க இயலாத நெருக்கமும் விளக்க முடியாத இடைவெளியும் கொண்ட கணவன் மனைவி உறவு தனியிருவருக்கு உரிய ஒன்று. அந்த உறவுக்கென மரபு சார்ந்த சில நியதிகளும் விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதுவே பொருந்தாத உறவாக, மூச்சுமுட்டும் சூழலுக்குத் தள்ளப்படும்போது, அதிலிருந்து விலகுவதும், மற்றொரு துணை தேடுதலும் இயல்பு.

இதில் இருவேறு பக்கங்கள் உள்ளன. அந்த இயல்பை அடையும் இருவரும் அவர்களது வாழ்க்கையை சமூகத்தின் யதார்த்தத்தில் முறைபடுத்திக் கொண்டால் சில கால சிக்கல்களைக் கடந்து அவர்களது பாதையில் அவரவர் விருப்பப்படி பயணிக்க முடியும்.

ஆனால், தனக்கான தேடல் ஓப்பீட்டளவில் நிறைவேறிய சூழலில், சமூக காரணிகளின் பொருட்டு இருவரும் விலகி அவர்களது குடும்பத்திற்குள் தவிர்க்கமுடியாமல் சென்றால், அதனை இந்த உலகம் எவ்வாறு பார்க்கிறது? ஆணுக்கு பெரிசா இதில் எந்த பாதிப்பும் வந்துடாது. ஆனால், அதுவே ஒரு பெண் எனில், தரங்கெட்டவ. ஒழுக்கங்கெட்டவ என்ற பட்டப்பெயருடன் தனது காலத்தை கழிக்க வேண்டும். அதேபோல், வெளியேறி சென்ற ஆணின் மனைவிக்குக் கிடைக்கும் அறிவுரை - நீ சரியா இருந்தா அவன் இப்படி போயிருப்பானா? ஆண் பெண் இருவருக்குமான உறவு சிக்கலில் ஒருவரை மட்டும் கேள்வி கேட்கும் ஒரு சமூகத்தில்தான் நாம் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம்.

சமீபத்தில் என் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். மிக இளவயதிலேயே திருமணம் முடித்தவர். கல்லூரி செல்லும் இரண்டு பிள்ளைகள். பொருந்தா திருமணம், அதன் நீட்சியில் தனது வாழ்க்கையை கற்பாறையாக மாற்றிக்கொண்டவர். பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் இத்தகைய உறவு சிக்கல்கள் இருக்கிறது என்பதை அவர்கூறிய அத்தருணத்தில் என்னால் ஆழமாக உணர முடிந்தது.

நிலவும் சமூகச்சூழல் ஆணுக்கான சுதந்திர வெளியை அளித்திருந்தாலும், அவர்களுக்கான தேடலிலும் காமம் தாண்டிய தேவைகள் உள்ளன. ஆனால், அன்றைய உரையாடலில் அவர் சொன்ன இறுதி வாக்கியம் என்னை நிறைய யோசிக்க வைத்தது. அவர் சொன்னார்... "சமீபத்தில் ஒரு பெண்ணை சந்தித்தேன். நெடிய உரையாடல்கள், கருத்துப் பகிர்வுகள். அவர்களுடனான என்னுடைய உறவின் ஆழம் என்னால் உணர முடிகிறது. என்தேடல் முடிந்தது" என்று அவர் கூறினார்.

அவர் சொன்ன அந்தத் தோழியும் எனக்கு அறிமுகமானவரே. அவர் கணவரை இழந்து தனியாக வாழ்பவர். அவருக்கும் கல்லூரிப் படிக்கும் பெண் இருக்கிறாள்.

அந்தப் பெண்மணி சொன்னார்.. "எனக்கான தேடலில் எனக்கு இவர் சரியா இருப்பாருன்னு தோணுச்சு. அதுக்குமேல பெரிசா எதுவும் யோசிக்கல. ஆனால், இந்த உறவுக்கு என்ன பெயர் கொடுக்கறதுன்னு எல்லாம் எனக்கு தெரியலைப்பா. எங்க வாழ்க்கையை நினைச்சா புதுப்புது அர்த்தங்கள் படம்தான் ஞாபகம் வருது"ன்னு

சொன்னார்.

இரு நபர்களுக்கிடையேயான சில நிர்ணயங்களுக்குள் வாழ்வதும் ஒரு வாழ்க்கை, சில நியதிகளை மீறி வாழ்வதும் ஒரு வாழ்க்கை. இதனை உடலாக மட்டும் சுருக்கிப் பார்த்திட முடியாது. தேடலின் ஆழமும், அன்பும் இந்த உறவின் அடுத்தகட்ட பரிமாணத்தை தீர்மானிக்கின்றன. குடும்பம், சுற்றம் மற்றும் சமூகத்தின் மரபுடைத்தலுக்கான தீர்மானகரமான நிலைமட்டுமே அவர்களது வாழ்க்கையை அவர்கள் வாழ்வதற்கான உந்துசக்தியாக மாறுகிறது.

இந்தப் பாடலில் எனக்கு பிடித்த சில வரிகள்

பெண் குரல்:

தினந்தோறும் இரவில் நடு ஜாம நிலவில் நான்தானே அதைக் கேட்டிருந்தேன்

ஆண் குரல்:

அரங்கேற்றந்தான் ஆகாமல்தான் அலைபாயும் என் ஜீவந்தான்

பெண் குரல் :

ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும் என் மேலே ஒரு போர் தொடுக்க

ஆண் குரல்:

எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு மானே வா உனை யார் தடுக்க

பெண் குரல் :

பரிமாறலாம் பசியாறலாம் பூமாலை நீ சூடும் நாள்

ஆண் குரல்:

மாது உன் மீது எப்போது என் மோகம் தீராதோ சொல் பூங்கொடியே

பெண் குரல்:

வா வா என் தேவா செம்பூவா என் தேகம் சேராதோ உன் கைகளிலே

ஆண் குரல்:

குருவாயூரப்பா குருவாயூரப்பா

நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

கட்டுரையாளர் குறிப்பு

உஷா பாரதி

ஜனசக்தி, குங்குமம், சன் டிவி போன்ற அச்சு, காட்சி, இணைய ஊடகங்களில் பணிபுரிந்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளர். எந்த சட்டகத்துக்குள்ளும், வரையறைக்குள்ளும் தன்னை பொருத்திக்கொள்ளாதவர்… தனக்கான தேடலில் பயணிக்கும் மனிதநேயமிக்க பெண்ணிய சிந்தனையாளர்.

இப்படியா செய்வார் விக்ரம் ? கடும் கோபத்தில் மணிரத்னம்

3 நிமிட வாசிப்பு

இப்படியா செய்வார் விக்ரம் ? கடும் கோபத்தில் மணிரத்னம்

விஜய், கமலுக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் தேர்ந்தெடுத்த ஹீரோ !

3 நிமிட வாசிப்பு

விஜய், கமலுக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் தேர்ந்தெடுத்த ஹீரோ !

இந்த வார ஓடிடி ரிலீஸ் புதுப் படங்கள்!

4 நிமிட வாசிப்பு

இந்த வார ஓடிடி ரிலீஸ் புதுப் படங்கள்!

ஞாயிறு 4 அக் 2020