fபடம் எடுப்பது-எதிர்ப்பது: எது அரசியல்?

entertainment

முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையில் விஜய் சேதுபதி நடிப்பதைத் தொடர்ந்து எற்பட்டுள்ள எதிர்ப்புகளும், ஆதரவும் இரு தரப்பிலும் எதிர்பாராதவை. ஆனால், நடக்கும் விவாதங்களும் சம்பவங்களும், அரசியல்-கலை என்ற இரண்டு தண்டவாளங்களின் மீதே சென்றுகொண்டிருக்கிறது. ஸ்போர்ட்ஸ் பயோபிக்காக உருவாகும் படத்தில் எதற்காக அரசியல் என்ற கேள்வியே இரு தரப்பிலும் முன்வைக்கப்படுகிறது. படத்தை ஆதரிப்பவர்கள் ‘கலையில் ஏன் அரசியலை நுழைக்கிறீர்கள்? இது சாதாரண ஸ்போர்ட்ஸ் பயோபிக்’ என்கின்றனர். ‘ஸ்போர்ட்ஸ் படம் ஒன்றை தமிழில் எடுக்கவேண்டும் என்றால், தமிழகத்தில் பேச ஸ்போர்ட்ஸ்மேன்களே இல்லையா? முரளிதரனே தான் வேண்டுமா” என்கின்றனர் எதிர்ப்பவர்கள். இதில் எது சாத்தியம் என்ற கேள்வி இங்கு எழுகிறது.

**ஸ்போர்ட்ஸ் பயோபிக்கில் அரசியலா?**

ஒரு ஸ்போர்ட்ஸ் பயோபிக் திரைப்படத்தில் பொதுவாக என்ன பேசப்படும் என்ற கேள்வியிலிருந்து இந்த விவாதத்தைத் தொடங்குவோம். ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் அல்லது வுமனைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் இந்த டிஜிட்டல் யுகத்தில், ஒரு க்ளிக் தூரத்தில் இருக்கிறது என்பதே உண்மை. அதைத்தாண்டி, ஒவ்வொரு ஸ்போர்ட்ஸ் பற்றியும் வெளியாகும் புத்தகங்களும், பயோபிக் புத்தகங்களும் அந்தத் துறையில் இருப்பவர்களைப் பற்றிய அத்தனை எக்ஸ்குளூசிவ் தகவல்களையும் கொடுத்துவிடுகிறது இவற்றைத் தாண்டி ஒரு படத்தில் என்ன சொல்லிவிடமுடியும் என்று கேட்டால், அது தான் சினிமாவின் தனித் திறன் எனலாம்.

ஒரு ஸ்போர்ட்ஸ் பயோபிக் மூலமாகவே நியூஸ்பேப்பரிலும், ரேடியோவிலும், டிவியிலும், இணையத்திலும் பெயர் வராத காலத்தில் அந்த ஸ்போர்ட்ஸ்மேன் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை வெளிக்காட்ட முடியும். இத்தனை வருடங்களாக வெளியான ஸ்போர்ட்ஸ் பயோபிக் திரைப்படங்கள் அனைத்தும் அந்த கான்செப்டில் மட்டுமே உருவாகியிருக்கின்றன. அதிலும், முத்தையா முரளிதரனின் கதையாக உருவாகும் 800 திரைப்படத்தின் டைட்டில் டீசரில், இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களையும், பாகிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவங்களையும் அனிமேஷனில் காட்டிவிட்டு, இதில் அரசியல் இல்லை என்று சொல்வது, பாஸ்வேர்டு போட்டு லாக் செய்துவிட்டால் ஃபோனிலிருந்து தகவல்களைத் திருட முடியாது என்று நினைப்பதற்கு சமம்.

**ஸ்போர்ட்ஸ் படங்கள் என்னதான் சொல்கின்றன?**

ஒவ்வொரு ஸ்போர்ட்ஸ் தொடர்பான திரைப்படமும், அக்கதையின் நாயகனாக வருபவனின் வாழ்வில் எத்தனை கதாநாயகர்கள் இருந்தார்கள், எத்தனை வில்லன்கள் இருந்தார்கள், எத்தனை சூழ்ச்சிகள் உருவாகின, அதனை எப்படிக் கடந்துவந்தான் என்பதை அடிப்படையாகவே கொண்டிருக்கும். இந்த சமூகத்தின் இத்தனை அம்சங்களையும் கடந்துவரும் ஒருவனாலேயே எந்தத் துறையிலும் சிறந்து விளங்கமுடியும் என்பதையும் இந்த உலகத்துக்கு பலரும் நிரூபித்திருக்கின்றனர். பாக்ஸிங் உலகின் கிங் எனப்படும் முகமது அலி பற்றி எடுக்கப்பட்ட ‘அலி’ எனப்படும் பயோபிக்கில் அவர் கடந்து வந்த பாதையை மட்டுமின்றி இந்த சமூகம் சார்ந்து அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் அத்தனையும் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கும்.

மதம் மாறியது; அந்த மதத்தின் அம்சங்களை ஏற்றுக்கொள்ளாத வேற்று மதப் பெண்ணை திருமணம் செய்துகொண்டது; அதற்காக அப்பாவின் எதிர்ப்பை சம்பாதித்தது; பின் அந்தப் பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு 17 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டது; மால்கம் X-ஐ சந்தித்தது, எலிஜா முகமதுவின் வார்த்தைப்படி மால்கம் X-க்கு ஆதரவளிக்காதது; மீண்டுமொரு பெண்ணுடன் காதலில் விழுந்தது ஆகிய அம்சங்களில் ஏதேனும் ஒன்று ஸ்போர்ட்ஸ் டிராமாவுக்குத் தேவையானதாக இருக்கிறதா? ஆனால், உலகம் புகழ்ந்த அந்த திரைப்படத்தில் பெரிதும் இடம்பெற்றிருந்த அம்சங்கள் இவை தான். ஸ்போர்ட்ஸ் டிராமா என்பதே, மக்களுக்கு ரிப்போர்ட் செய்யப்பட்ட விளையாட்டினைத் தாண்டி, அந்த ஸ்போர்ட்ஸ்மேனின் வாழ்க்கை என்னவாக இருந்தது என்பதை விளக்குவதாகவே இருக்கும்.

உலகமே வியந்து பார்க்கும் ஃபுட்பால் பிளேயர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் கிறிஸ்டியானோ ஜூனியர், ரொனால்டோவின் எந்தக் காதலிக்குப் பிறந்தார் என்பது இதுவரையிலும் யாருக்கும் தெரியாது. இதற்கான பதிலை ரொனால்டோவிடமிருந்து எப்படியும் பெற்றுவிடலாம் என்று அவரைப்பற்றிய பயோபிக் ஒன்றைத் தயார் செய்தனர். தன்னுடைய கதையில் வேறு யாரும் நடித்துவிடக்கூடாது என்று, ரொனால்டோவே தன்னுடைய வாழ்க்கைக் கதையை விவரித்து சொல்வதாக அந்தக் கதை அமைந்திருந்தது. ஆனால், அதிலும்கூட தன் மகனின் தாய் யாரென்று சொல்ல மறுத்துவிட்டார் ரொனால்டோ. அது அவரது மகனின் நன்மைக்காக என்று கூறினார்.

மகனின் பிறப்பையே மறைக்கும் அளவுக்கு ஒரு ஸ்போர்ட்ஸ்மேனின் மனதை இந்த சமூகம் மாற்றுகிறது என்றால் இவையெல்லாம் ஏன் என்று பதிவு செய்வது தானே ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவின் நோக்கமாக இருக்கவேண்டும். அப்படியிருக்கும்போது, முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையை படமாக்குவதாகச் சொல்லிவிட்டு, அதில் அரசியல் இருக்காது என்று சொன்னால், அது திரைப்பட ரீதியில் சினிமாவுக்கு செய்யும் துரோகமாகவும், சமூக நீதியில் முத்தையா முரளிதரனுக்கு செய்யும் துரோகமாகவும் இருக்கும்.

**அரசியல் இல்லாத ஸ்போர்ட்ஸ் டிராமா இல்லையா?**

இருக்கவே முடியாது என்பது தான் உண்மை. ஒரு துறையில் சிறந்து விளங்குவது என்பது அந்தத் துறையைப் பற்றிய புரிதல் மட்டுமாக இருந்துவிடமுடியாது என்பதற்கான உதாரணங்கள் நம் கண்முன் நிறையவே இருக்கின்றன. பொது வாழ்வில் கிடைக்கும் அனுபவங்கள் புரிதல்கள் ஆகியவற்றை தான் உழைக்கும் துறையிலும் பொருத்திப் பார்த்து மனதுக்கு சரியென தோன்றுவதை செய்வதால் மட்டுமே ஒருவன் தனித்துவம் பெறுகிறான்.

உதாரணத்துக்கு ஹாலிவுட்டில் ‘அயர்ன் மேன்’-ஆக உலாவரும் ராபர்ட் ட்வெய்ன் ஜூனியரை எடுத்துக்கொள்ளலாம். சிறு வயதிலேயே பணம், பெயர் மற்றும் புகழ் கிடைத்துவிட்டதால், போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி தன்னுடைய உடலையும், பெயரையும் கெடுத்துக்கொண்டு கிட்டத்தட்ட வாழ்க்கையையே இழந்துவிட்டார். பலகட்ட இன்னல்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் சாதித்து, இன்று உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். ஆனால், தன்னைப் போலவே வேறு எந்த இளைஞனும், இளமையைத் தொலைத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். ஸ்பைடர்மேனாக நடிக்கும் டாம் ஹோலாண்டை தன்னுடைய இள வயதுக்காரனாக நினைத்து, ஒவ்வொரு நாளும் அவரை வழிநடத்தும் ஒருவராக மாறிப்போய்விட்டார் ராபர்ட். இது, மிகச் சாதாரணமாக எல்லோரும் எல்லோருக்கும் செய்துவிடக்கூடிய உதவி அல்ல. அயர்ன் மேனின் வாழ்வில் நடந்ததைப் போலவே, முத்தையா முரளிதரனின் வாழ்க்கையிலும் ஆயிரம் இன்னல்கள் இருந்திருக்கும். அதையெல்லாம் அவர் எப்படித் தாண்டி வந்தார் என்று உலகத்துக்குச் சொல்வது தேவையில்லை என்று யாரும் சொல்லமுடியாது.

**விஜய் சேதுபதி நடிக்கலாமா, கூடாதா?**

விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கக்கூடாது என்பதற்கு ‘முரளிதரன் தமிழர்களுக்கு எதிரானவர்’ என்ற காரணம் முன்வைக்கப்படுகிறது. மேலே சொன்ன உதாரணங்களைப் போலவே, விஜய் சேதுபதிக்கும் சினிமா அனுபவம் நிறைய இருக்கிறது. பிடித்தால் மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதையும், வேண்டாம் என்றால் எப்படி தூக்கியெறிந்துவிடுவார்கள் என்பதையும் பார்த்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் அவருக்கும், ‘அவர் நடித்திருக்கிறார் அதனால் பார்ப்போம்’ என்று சினிமாவுக்கு வரும் மக்களுக்கும் படம் என்ன சொல்லிக்கொடுக்கப்போகிறது என்பது தான் முக்கியம்.

படத்தில் என்ன இருக்கிறது என்பதை கதையாகக் கேட்ட விஜய் சேதுபதி தான் இந்தக் கதையை, நம்மை ஆதரிக்கும் தமிழ் ரசிகர்களுக்கு சொல்லவேண்டுமா, வேண்டாமா என்ற முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவு என்னவாக இருந்தாலும், அதன்பிறகும் மேற்கொண்டு அழுத்தம் கொடுப்பதென்பது, இத்தனை வருடங்களாக தெற்கிலும், வடக்கிலும் தமிழர்களுக்கு என்னவெல்லாம் பிரச்சினை கொடுக்கப்படுகிறது என்று ஆத்திரமடைந்து கொண்டிருந்தோமோ, அதையே நாமும் இன்னொருவருக்கு செய்கிறோம் என்று அர்த்தமாகிவிடும். முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடித்தால் விஜய் சேதுபதிக்கு எவ்வளவு அவப்பெயர் வரும் என்று இப்போது சொல்லப்படுகிறதோ, அதே அளவு அவப்பெயர் விஜய் சேதுபதியை ஒடுக்குவதால் தமிழர்களுக்கும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

-முத்து-�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *