மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 19 அக் 2020

ஐபிஎல்: வெற்றியைத் தொடருமா சென்னை?

ஐபிஎல்: வெற்றியைத் தொடருமா சென்னை?

டெல்லி அணியிடம் சென்ற முறை தோல்வியைச் சந்தித்த சென்னை அணி, இன்று (அக்டோபர் 17) இரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் நடக்கும் போட்டியில் டெல்லி அணியுடன் விளையாட இருக்கிறது. அணிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள டெல்லி அணியுடன் மோதும் சென்னை அணி ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த முறை ஐதராபாத் அணியுடன் விளையாடி வெற்றி பெற்ற சென்னை அணி, தன் வெற்றியை இன்றும் தொடருமா என்ற கேள்வி சென்னை ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஒருபோதும் இல்லாத வகையில் இந்த சீசனில் தடுமாற்றத்தைச் சந்தித்து வருகிறது. எட்டு ஆட்டத்தில் விளையாடி இருக்கும் சென்னை அணி மூன்று வெற்றி (மும்பை, பஞ்சாப், ஐதராபாத் அணிகளுக்கு எதிராக), ஐந்து தோல்வியுடன் ஆறு புள்ளிகள் பெற்றுள்ளது.

சென்னை அணியின் பேட்டிங்கில் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இருப்பினும் அவர்கள் ஒருசேர நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் சென்னை அணியால் நிமிர முடியும். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றல் படைத்த டோனி நல்ல பார்மில் இல்லாமல் திணறுவது சென்னை அணிக்குப் பின்னடைவாக இருக்கிறது. இதை சென்ற ஆட்டத்தில் பார்க்க முடிந்தது. பந்து வீச்சில் சாம் கர்ரன், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், பியுஷ் சாவ்லா ஆகியோர் நன்றாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை அணி ஐதராபாத்தை வென்றது. அந்த ஆட்டத்தில் சாம் கர்ரன் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டதுடன், பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோல் இந்த ஆட்டத்திலும் புதிய வியூகங்களை எதிர்பார்க்கலாம்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எட்டு ஆட்டங்களில் விளையாடி ஆறு வெற்றி, இரண்டு தோல்வியுடன் (ஐதராபாத், மும்பை அணிகளிடம்) 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஒருசேர பிரமாதமாக உள்ளது.

சென்னைக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அந்த நம்பிக்கையுடன் களம் இறங்கும் டெல்லி அணி வெற்றியைத் தொடர முயற்சி செய்யும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பழிதீர்க்க சென்னை அணி போராடும்.

ஷார்ஜா மைதானம் சிறியது என்பதால் இங்கு ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது. இங்கு முதலில் பேட்டிங் செய்வது சாதகமானது என்பதால் ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

-ராஜ்

சனி, 17 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon