பாக்ஸிங் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா!

entertainment

மெல்பர்னில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான தொடரின் இரண்டாவது போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது. பொறுப்பு கேப்டனாக செயல்பட்ட ரஹானே ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றுள்ளதால் 1-1 எனும் அளவில் இந்தத் தொடர் சமநிலையை எட்டியுள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா முறையே 195 மற்றும் 200 ரன்களை எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா இந்தியாவைவிட 69 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 326 எடுத்திருந்தது. ஆட்டத்தின் நான்காம் நாளான இன்று இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 70 ரன்கள் எடுத்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

இந்தப் போட்டியில் முதல் நாளில் ஆஸ்திரேலியா 72.3 ஓவர்களில் 195 ரன்களை எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் நாளிலேயே களமிறங்கிய இந்திய அணி 36 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. இரண்டாம் நாளில் களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடினர். இரண்டாம் நாள் முடிவில், 91.3 ஓவர்களுக்கு, இந்தியா ஐந்து விக்கெட்டுகள் இழந்து 277 ரன்களைக் குவித்திருந்தார்கள். இந்த டெஸ்ட் போட்டியின் கேப்டனாக களமிறங்கிய அஜிங்க்யா ரஹானே தன் 12ஆவது சதத்தைப் பதிவு செய்தார்.

மூன்றாம் நாளான நேற்று களமிறங்கிய ரஹானே, ஜடேஜா இணை வெகு சில ரன்களிலேயே பிரிந்தது. 100ஆவது ஓவரில் ரஹானே ரன் அவுட் ஆனார். ரஹானே 223 பந்துகளை எதிர்கொண்டு 112 ரன்களைப் பதிவு செய்திருந்தார். இவர் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தபோது இந்தியா 294 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது. ரஹானேவைத் தொடர்ந்து ஸ்டார்க் வீசிய 107-வது ஓவரில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். ராஹானேவுக்குப் பக்கபலமாக இருந்த ஜடேஜா 159 பந்துகளை எதிர்கொண்டு 57 ரன்களைக் குவித்திருந்தார்.

இவர்களுக்குப் பிறகு பேட்டிங் செய்ய வந்த இந்திய பந்துவீச்சாளர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அஸ்வின் 14 ரன்களிலும், உமேஷ் யாதவ் 9 ரன்களிலும், பும்ரா மற்றும் மொஹம்மத் சிராஜ் ரன் ஏதும் எடுக்காமலும், 0 என விரைவாக பெவிவிலியன் திரும்பினார்கள். ஆக இந்தியா மூன்றாம் நாளில், 326 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. ஆஸ்திரேலியாவை விட 131 ரன்கள் கூடுதலாக அடித்து முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலியா மூன்றாம் நாளின் முடிவில், 66 ஓவர்களுக்கு 133 ரன்களை எடுத்து, ஆறு விக்கெட்டுகளை இழந்தது. மூன்றாவது நாளின் முடிவில் ஆஸ்திரேலியா, இந்தியாவை விட இரண்டு ரன்கள் கூடுதலாக எடுத்தது. நான்காம் நாளான இன்று ஆஸ்திரேலியா 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆஸ்திரேலியா சார்பில் களமிறங்கிய பேட்ஸ்மேன்களில் மேத்யூ வேட் 40 ரன்களும், மார்னஸ் 28 ரன்களையும் எடுத்தனர். மற்ற எந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களும் 20 ரன்களைத் தாண்டவில்லை.

பும்ரா, உமேஷ் யாதவ், மொஹம்மத் சிராஜ், அஸ்வின் என அனைத்து பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார்கள். ஜடேஜா மட்டும் 10 ஓவர்களை வீசி 25 ரன்களை விட்டுக் கொடுத்து இரு விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

இதற்கு முன்பு அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா எடுத்த 36 ரன்கள்தான் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் குறைந்தபட்ச ரன்கள் ஆகும்.

**ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *