மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

கர்ணனின் பண்டாரத்திக்கு எதிர்ப்பு!

கர்ணனின் பண்டாரத்திக்கு எதிர்ப்பு!

தமிழ் சினிமா வசனங்களில் எதுகை மோனை, பாடல்களில் அழகியலுக்காக வரலாறு தெரியாதவர்கள் வார்த்தைகளை பயன்படுத்தி விடுவார்கள்.

படம் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகும் போது புற்றீசல் போன்று சமூக ஆர்வலர்கள், சாதி ஆர்வலர்கள், சமய பற்றாளர்கள், இது எனது கதை என புறப்பட்டு வருவார்கள், சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதும் உண்டு இதுபோன்ற நெருக்கடிகள் கடந்த பத்தாண்டுகளாக தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகின்றன

அப்படித்தான் பண்டாரத்தி என்ற வார்த்தையில் தொடங்கும் பாடல் படத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பண்டாரம் என்றால் என்ன என்பதை தெரிந்துகொண்டு கர்ணன் பஞ்சாயத்தை பார்க்கலாம். பண்டாரம் அல்லது பண்டாரத்தார் என அழைக்கப் பெறுவோர் வீரசைவ குலத்தைச் சார்ந்தவர்களாவர்.

ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், வைராவிகள், புலவர், கன்னடியர், ஜங்கமர் போன்ற 19 உட்பிரிவைச் சார்ந்தவர்கள். பண்டாரம் சாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள்.

இந்த சமூகத்தினர் தமிழ்நாடு முழுவதும் பரவலாக காணப்பட்டாலும் ராமநாதபுரத்தில் ஆண்டிப்பண்டாரம் அல்லது புலவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் வீரசைவர், திண்டுக்கல் பகுதியில் பண்டாரம், மலைபண்டாரம் அல்லது ஆண்டிபண்டாரம், மதுரையில் யோகிஸ்வரர்,கன்னடியர்,தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேனி அல்லிநகரம், வீரபாண்டி, வடுகபட்டி பகுதியில் கன்னடியர் என்றும் போடிநாயக்கனுர் பகுதிகளில் ஜங்கமர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். கோவையில் ஜங்கம் அல்லது லிங்காயத் போன்ற பெயரால் தங்களை அழைத்துக்கொள்கின்றனர். இருந்தாலும் ஆண்டிபண்டாரம் அல்லது பண்டாரம் என்ற பெயரை சமூகம் கேலியாக சித்தரிப்பதால் பொதுவாக முக்கியமாக இளைய தலைமுறையினர் வீரசைவர் மற்றும் யோகிஸ்வரர் என்றே கூறிக் கொள்கின்றனர்

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து ஏப்ரல் 9 அன்று வெளியாக இருக்கும் படம் கர்ணன். படத்தின் மூன்று பாடல்கள் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

கர்ணன் படத்தின் விநியோக உரிமை, பிற உரிமைகள் தனுஷ் இதுவரை நடித்த படங்களில் அதிக விலைக்கு வியாபாரமான படமாக கூறப்படுகிறது . படம் தொடங்கப்பட்ட நாளில் சிவாஜி பேரவையினர்" கர்ணன்" என பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெயரை மாற்றக் கோரினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது படத்தின் முதல் பார்வை, விளம்பர சுவரொட்டிகள், டிரைலர்கள் என அனைத்துமே தமிழ் சினிமா ரசிகனுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தியதுடன் படம் எப்போது திரையரங்கிற்கு வரும் என ஏங்க வைத்தது இந்த சூழலில் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்ற பாடலை நீக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

."கண்டா வர சொல்லுங்க.. கர்ணனை கையோடு கூட்டி வாருங்கள்.." என்று துவங்கும் ஒரு பாடல் இப்படி வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. தமிழக அரசியல் களத்தில் "கண்டா வர சொல்லுங்க" தற்போது ஏக பிரபலம் கட்சி வேட்பாளர்களை கிண்டல் செய்வதற்கு, மீம்ஸ் உருவாக்க இந்த பாடல்வரிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கண்டா வர சொல்லுங்க நாட்டுப்புற பாடகர் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் இசையமைத்து பாடிய மெட்டு என்று சர்ச்சை எழுந்தது. தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கு உரிய நிதி உதவிகளை வழங்கிட வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.இந்த சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் பண்டாரத்தி புராணம் என்ற பெயரில் படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடல் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. தனுஷ் இதை பாடியிருந்தார்.

கிராமப்புற வாழ்வியலை இந்த பாடல் எடுத்து இயம்புவதாக இருந்த போதிலும், பண்டாரத்தி என்று குறிப்பிட்டு திரும்பத் திரும்ப அந்த பாடலில் ஒரு பெண் தொடர்பான வரிகள் வருகின்றன. இது ஒரு ஜாதி பெயராகும் இந்த பாடல் சமூகத்தில் புழக்கத்தில் வரும் போது குறிப்பிட்ட அந்த ஜாதியைச் சேர்ந்த பெண்களை இந்த பாடலை பயன்படுத்தி கிண்டல் செய்வதற்கு விஷமிகள் பயன்படுத்தக் கூடும் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வந்தது.

இதேபோன்றுதான் விக்ரம் நாயகனாக நடித்து வெளியான சாமி திரைப்படத்தில் இடம்பெற்ற "கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா.. ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா.." என்ற பாடல் வெளியானபோது ஈவ்டீசிங் செய்வோர் இந்த பாடலை அதிகம் பயன்படுத்தினர் என காரணம் கற்பிக்கப்பட்டது

பண்டாரத்திபாடலுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் சம அளவில் கிளம்பியது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள

மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பிரபு என்கிற புல்லட் பிரபு மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஜனவரி 19ஆம் தேதி கர்ணன் திரைப்படத்தின் டீஸர் மற்றும் கண்டா வர சொல்லுங்க பாடல் வெளியிடப்பட்டது. பண்டாரத்தி புராணம் என்ற பெயரிலும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சக்காளத்தி என்ற வரிகள் அதில் இடம் பெற்றுள்ளன. ஆண்டிப்பண்டாரம் என்பது பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகம். பண்டாரம் என்ற பெயரிலும் யோகேஸ்வரர் என்ற பெயர்களிலும் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அழைக்கப்படுகிறார்கள். கோவில்களில் பூ அலங்காரம் செய்பவர்களில், பெரும்பாலானோர் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களை காயப்படுத்தும் விதமாக இந்த பாடல் இடம்பெற்றுள்ளது எனவே இந்த பாடலுக்கு வழங்கப்பட்ட அனுமதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். யூடியூப் சேனல் மற்றும் திரைப்படத்தில் இருந்து இந்த பாட்டை நீக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, திரைப்பட தணிக்கை துறையின் மண்டல அலுவலர், படத்தின் இயக்குனருக்கு மாரி செல்வராஜ், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆடியோ உரிமை வாங்கியுள்ள திங்மியூசிங் நிறுவனம், யுடியூப் சேனல்(இந்தியா)ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீீீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

-இராமானுஜம்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

வெள்ளி 19 மா 2021