உண்மைக் கதையைத் தழுவி உருவான ‘ராக்கெட்ரி ’ பட டிரெய்லர்!

நடிகர் மாதவன் இயக்கி, நடித்துவரும் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
'அலைபாயுதே' படம் மூலம் தமிழில் ஹேண்ட்சம் நாயகனாக அறிமுகமானவர் மாதவன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழி படங்களில் பல ஹிட்டுகளையும், சில தோல்விகளையும் கொடுத்தவர் மாதவன். இவரின் கனவுத் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ திரைப்படம்.
விக்ரம் வேதா, இறுதிச் சுற்று என தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து அடுத்தடுத்துப் படங்களை நடித்துவருகிறார். சமீபத்தில் வெளியான மாறா படத்தைத் தொடர்ந்து மாதவனுக்கு அடுத்த ரிலீஸாக இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
படத்தின் கதை இதுதான். 1994இல் ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாகக் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். அதன் பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். குற்றமற்றவரை தேசத் துரோகியாக்கிய அவரது வாழ்க்கைப் பயணத்தை மையமாகக்கொண்டு உருவாகியிருக்கும் படமே ‘ராக்கெட்ரி’.
தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது. அதனால், மேற்கண்ட ஆறு மொழிகளிலுமே படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. இதில், ஆங்கிலத்தில் வெளியான டிரெய்லரின் வெர்ஷன் புதிதாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள வெர்ஷனில் சூர்யாவும், இந்தி, கன்னடம் மற்றும் ஆங்கில வெர்ஷனில் ஷாரூக்கானும் சிறப்புத் தோற்றத்தில் பத்திரிகையாளர்களாக நடித்திருக்கிறார்கள்.
நம்பி நாராயணன் வேடத்தில் மாதவனும், அவரின் மனைவியாக சிம்ரன் நடித்திருக்கிறார்கள். திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, ரஷ்யா, பிரான்ஸ், ஜார்ஜியா, செர்பியா உள்ளிட்ட நாடுகளில் நடத்தியிருக்கிறார்கள். தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரியளவில் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது.
- ஆதினி