அந்நியன் மொழிமாற்றுக்கு எதிராக ஆஸ்கர் ரவிச்சந்திரன்

entertainment

இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.

அதனால், இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கும் 50ஆவது படமாக அது உருவாகவிருக்கிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் அந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் தில்ராஜு.

இந்தநிலையில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) வெளியான செய்திகளில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் இந்திப் படமொன்றை ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அந்நியன்’ படத்தின் மொழிமாற்று என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பென் ஸ்டூடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ‘அந்நியன்’ படத்தைத் தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் ஜெயந்திலால் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது…

‘அந்நியன்’ படத்தின் கதையைத் தழுவி இந்தியில் ஒரு படத்தை நீங்கள் இயக்கவிருக்கும் தகவல் அறிந்து அதிர்ச்சிக்குள்ளானேன். ‘அந்நியன்’ படத்தின் தயாரிப்பாளர் நான்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். மறைந்த எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து இந்தக் கதைக்கான உரிமையை நான் முழுத் தொகையையும் கொடுத்துப் பெற்றுள்ளேன். அதற்கான ஆவணங்களும் இருக்கின்றன. இந்தக் கதையின் முழு முதல் உரிமையாளர் நான் மட்டுமே. எனவே இந்தப் படத்தின் கதையை என்னுடைய அனுமதியின்றி தழுவுவதோ, ரீமேக் செய்வதோ முற்றிலும் சட்டவிரோதமானது.

உங்களால் இயக்கத்தில் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி பெறாத ‘பாய்ஸ்’ படத்துக்குப் பிறகு உங்கள் பெயர் உருக்குலைந்த காரணத்தால் நீங்கள் கடும் மன அழுத்தத்தில் இருந்தீர்கள் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அதன் பிறகும் நான் உங்களுக்கு ‘அந்நியன் படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினேன். அதன் பிறகு என் மூலமே நீங்கள் இழந்த இடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டீர்கள். ஆனால், அதை நீங்கள் மறந்துவிட்டு, என்னிடம் தகவல் கூட தெரிவிக்காமல் என்னுடைய வெற்றிப் படமான அந்நியன் இந்தி ரீமேக்கை இயக்குவதன் மூலம் அந்தப் படத்தின் புகழை நீங்கள் அறுவடை செய்ய முயல்கிறீர்கள். நீங்கள் சில குறிப்பிட்ட தொழில் தர்மத்தைக் கடைப்பிடித்து வந்தீர்கள் என்று நான் உறுதியாகச் சொல்வேன். ஆனால், இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் எப்படி உங்களால் இப்படிக் கீழ்நிலைக்கு இறங்க முடிந்தது குறித்து ஆச்சரியம் கொள்கிறேன்.

என்னிடம் காப்புரிமை உள்ள ஒரு கதையைச் சட்டவிரோதமாக நகலெடுப்பதால் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எதையும் தொடராமல் உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பட அறிவிப்பு வந்தவுடன், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லைகா நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. இரண்டாவதாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *