uதொலைக்காட்சி படப்பிடிப்பு நிறுத்தப்படுமா?

entertainment

தமிழகத்தில் முழு ஊரடங்கின் ஒரு பகுதியாக சினிமா ஷூட்டிங்கிற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் சீரியல் ஷூட்டிங்கிற்கு மட்டும் அனுமதி வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அரசுத் தரப்பிலிருந்து, தெளிவான உத்தரவோ, அனுமதியோ இதுவரை தரப்படவில்லை.

அதே சமயத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மே 10ஆம் தேதிக்குப் பிறகும் பல்வேறு டிவி சீரீயல்களுக்கு ஷூட்டிங்குகள் நடத்தப்பட்டு வருவதால், இது எங்க போய் முடியுமோ தெரியவில்லை என்ற புலம்பல்கள் அதில் பணிபுரியும் ஊழியர்களிடமிருந்து நாலா பக்கமும் பரவியது.

எல்லா டிவி சேனல்களுமே ஷூட்டிங்கைத் தொடர்ந்து நடத்தி வருகிறது என்பதுதான் உண்மை நிலவரமாக இருக்கிறது. இதில் ஆளுங்கட்சி,எதிர்கட்சி தொலைக்காட்சி என்ற பாகுபாடு எல்லாம் இல்லை என்கிறது தயாரிப்பு நிர்வாகிகள் வட்டாரம்.

சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஒரு இடத்தில் சீரியல் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்க, அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து எதிர்ப்புத் தெரிவித்ததும், இடத்தை மாற்றிக் கொண்டு போயிருக்கிறார்கள். ஈ.சி.ஆர் பகுதியில் நடந்து கொண்டிருந்த ஒரு படப்பிடிப்பு குறித்து காவல்துறைக்குத் தகவல் வர, அவர்கள் சென்று எச்சரித்ததும், அந்த யூனிட்டும் இடத்தை மாற்றி விட்டார்களாம்.

இன்னும் சில இடங்களில் காவல் துறையினரே, வாகனங்களை வெளியில் நிறுத்தாமல் காம்பவுண்டுக்கு உள்ளே நிறுத்தி கொள்ளுங்கள். யாரும் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்து ஷூட்டிங் நடத்திக் கொள்ளுங்கள் என வாங்க வேண்டியதை வாங்கிகொண்டு, அனுமதி கொடுப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சின்னத்திரை வட்டாரத்தில் விசாரித்த போது, “ கொரோனா நெருக்கடியில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற அவசியமில்லை.

சேனல் உரிமையாளர்களின் பொறுப்பற்ற தன்மை, பேராசையே இப்படி திருட்டுத்தனமாக படப்பிடிப்பை நடத்த காரணமாகிறது. ஷூட்டிங் படப்பிடிப்பு, தொழிலாளர்கள், அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள், அவர்கள் குடும்பத்தினரை பற்றியெல்லாம் யோசிப்பதில்லை.

கடந்த வருடம் ஊரடங்கு முடிந்து ஷூட்டிங் தொடங்கிய சமயத்தில், சிலர் கொரோனா பயத்தால ஷூட்டிங் வர மறுத்தாங்க. அதனால 20 பேருக்கு மேல சீரியல்ல இருந்து தூக்கிட்டாங்க.

இப்பவும் அப்படி ஆகிடுமோன்னு பயந்து ஷூட்டிங் போக வேண்டிருக்கு. சின்னச் சின்னப் பெட்டிக்கடைகளைக் கூட திறக்க அனுமதிக்காத அரசு, நூறு பேர் வரைக்கும் கூடுற இந்த சீரியல் ஷூட்டிங் விஷயத்துல ஏன் கண்டும் காணாமல் இருக்குனு தெரியல. ஷூட்டிங்கை நம்பி சிலர் பிழைக்கிறாங்க தான்… ஆனா, அவங்களுக்குமே உயிர் முக்கியமில்லையா’’ என்கின்றனர்.

“கடந்த மே 10ம் தேதியிலிருந்து தொடர்ந்து ஷூட்டிங் நடந்து வந்ததன் விளைவு, ஒருசீரியல் தளத்தில் பெரும் விபரீதம் நிகழ்ந்திருக்கிறது. அந்த சீரியலின் ஹீரோவுக்குத்தான் முதலில் கொரோனா தொற்று இருந்திருக்கிறது.

ஆனாலும், அவரை ஷூட்டிங்கில் தொடர்ந்து கலந்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள். அவர் வேண்டாம் என மறுத்திருக்கிறார், அவருக்கு இருந்த அறிகுறிகளைப் பார்த்துவிட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் கவலையுடன் முறையிட்டிருக்கிறார்கள்.

அடுத்த சில தினங்களில் ஸ்பாட்டில் இருந்த 30 பேருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து யூனிட்டில் இருந்த சுமார் 20க்கும் மேற்பட்டவர்களை ஒரே வாகனத்தில் கூட்டிச் சென்று சத்தமில்லாமல் அனைவரையும் அவரவர் வீட்டில் இறக்கி விட்டிருக்கின்றனர். சீரியல் யூனிட் நேற்று மட்டும் ஷூட்டிங்கை நடத்தவில்லை” என்கிறார்கள்.

இதேபோல் பிரபல பார்ட் -2 சீரியலின் ஷூட்டிங்கும் தொடர்ந்து நடந்திருக்கிறது. இதில் உதவி இயக்குநர்கள் சிலருக்கு லேசான அறிகுறிகள் தெரியவந்த பிறகே ஷூட்டிங்கை நிறுத்தியிருக்கிறார்கள்.

ஒரு பிரபல சீரியலின் ஹீரோயின் தன் அம்மாவை கொரோனாவுக்கு இழந்திருக்கிறார். தமிழகத்துக்கு முன்பே மகாராஷ்டிராவில் ஊரடங்கு அமுலுக்கு வந்தபோது, இந்தி தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகள் தடைபட்டது.

உடனே யூனிட்டை கோவாவுக்கு மாற்றி, அங்கு ஷூட்டிங் நடத்தினார்கள். அதன்பின் கோவாவிலும் ஊரடங்கு தடைகள் அமலாக, எந்த மாநிலத்தில் அனுமதி கிடைக்கிறதோ, அங்கு போய் ஷூட்டிங் நடத்துகிறார்கள்.

ஐபிஎல் போட்டிகளில் செய்வது போல பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தி ஷூட்டிங் நடக்கிறது. இப்படி சட்டபூர்வமாக ஷூட்டிங் நடத்தினாலும், அதற்கும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

நடிகர், நடிகைகளையும் டெக்னீஷியன்களையும் இப்படிக் கஷ்டப்படுத்தி இதைத் தொடரத்தான் வேண்டுமா? என்று கேள்வி எழுகிறது. ஆனால், தமிழகத்தில் சட்ட விதிகளை மீறி ஷூட்டிங் நடத்துகிறார்கள்.

கடந்த ஆண்டில் கடுமையான ஊரடங்கு திடீரென அமலானதால், எல்லா சேனல்களும் பழைய சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்தன. இம்முறை அப்படிச் செய்வதற்கு முன்னணி சேனல்கள் தயாராக இல்லை.

“ஒரு சேனல் ஷூட்டிங்கை தொடர முடிவெடுத்தாலும், அது மற்ற எல்லா சேனல்களுக்கும் அப்படியே செய்ய வேண்டிய பிரஷரை ஏற்படுத்துகிறது. எல்லா முக்கியமான சேனல்களுமே இதனால்தான் தொடர் தயாரிப்பாளர்களுக்கு பிரஷர் கொடுக்கின்றன. அதனால் அவர்கள் சட்டத்தை மீறியாவது ஷூட்டிங்கை தொடர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்” என வருந்துகிறார்கள் சில தயாரிப்பாளர்கள்.

ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள், கொரோனா பரவலை நினைத்து அச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பொழுது போக்கு அம்சங்கள் தேவைதான்.

ஆனால், கலைஞர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டு, மக்களுக்கு பொழுது போக்கைக் கொடுக்க நினைப்பது சரியல்ல என்கின்றனர் சினிமா முக்கியஸ்தர்கள்.

பெப்ஸி, டிவி சேனல்கள் சீரியல் ஷூட்டிங்கிற்கு மட்டும் அரசாங்கத்திடம் அனுமதி கேட்டபோதே, ”இது ரொம்ப முக்கியமா?’’ என எல்லா தரப்பு மக்களிடம் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

“சீரியல் ஷூட்டிங்கை நம்பி இரண்டாயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு பிழைப்புக்கு வேறு வழி தெரியாது. கடந்த முறை ஊரடங்கின் போதே எல்லோரும் கஷ்டப்பட்டனர். இம்முறை அந்தக் கஷ்டம் வரக்கூடாது என்பதால்தான் அனுமதி கேட்கிறோம்” என்றார் பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி.

ஆனால், அரசின் விதிகளை மதிக்காமல் ரகசியமாக ஷூட்டிங் நடத்தி சின்னத்திரை நடிகர்கள், கலைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன டிவி சேனல்கள்

தமிழகத்தில் ஊரடங்கையும் மீறி திரைப்படப் படப்பிடிப்புகள் நடப்பதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை சாந்தினி ட்வீட் செய்துள்ளார்.

‘சித்து +2’ திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி. ‘வில் அம்பு’, ‘கவண்’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘வஞ்சகர் உலகம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ‘தாழம்பூ’, ‘ரெட்டை ரோஜா’ எனத் தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் தமிழகத்தில் மே 24ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதில் சின்னத்திரை, திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் நடிகை சாந்தினி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்னும் படப்பிடிப்புகள் நடப்பதாக நமது செய்தியை உறுதிப்படுத்தி பகிர்ந்துள்ளார்.

முழு ஊரடங்குதானே நடைமுறையில் இருக்க வேண்டும்? பிறகு எப்படி மறைமுகமாகச் சென்னையில் பல படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன? மக்களின் உயிர்தான் எல்லாவற்றையும் விட முக்கியம். நோய்த்தொற்றை நாம் கட்டுப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் என்று சாந்தினி குறிப்பிட்டுள்ளார்.

**-இராமானுஜம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *