மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 டிச 2021

‘என்னுயிரே...என்னுறவே...என் தமிழே’: கமல் உருக்கம்!

‘என்னுயிரே...என்னுறவே...என் தமிழே’: கமல் உருக்கம்!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் கதர் ஆடை தொடர்பான நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்று திரும்பினார். அதன்பின் அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டு கடந்த நவம்பர் 22 ஆம் தேதி சென்னை போரூர் ஶ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கமல் நலமாக இருப்பதாக மருத்துவமனை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வந்தது.

முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலகினர் பலரும் கமல் விரைவில் குணமாகி வர வேண்டும் என வாழ்த்தினர். சில தினங்களுக்கு முன் நோய் தொற்றிலிருந்து கமல் குணமானார். இருப்பினும் மருத்துவமனையில் ஓரிரு நாள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(டிசம்பர் 4) மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”என்னுயிரே... என்னுறவே... என் தமிழே...

மருத்துவமனை வாசம் முடிந்து இன்று பணிக்குத் திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னை தன் சொந்த சகோதரன் போல கவனித்து சிகிச்சையளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும், என் மகள்களுக்கும் ஊன் உறக்கம் இன்றி உடனிருந்து கவனித்துக்கொண்ட என் அணியினருக்கும், தம்பி மகேந்திரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நான் விரைந்து நலம்பெற வேண்டுமென வாழ்த்திய இனிய நண்பர், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புத் தம்பி சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் என் நன்றிகள்.

என் ஆருயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அன்புச் சகோதரர் இசைஞானி இளையராஜா, மாறாத பிரியம் வைத்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, இனிய நண்பர் சத்யராஜ், சரத்குமார், ஸ்ரீபிரியா, உள்ளிட்ட திரைத்துறை ஊடகவியலாளருக்கும் என் நன்றிகள். என்னுடைய விடுப்பை திறம்பட சமாளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும், விக்ரம் திரைப்படக் குழுவினருக்கும், பிக்பாஸ் அணியினருக்கும் விஜய் தொலைக்காட்சி நண்பர்களுக்கும் என் நன்றிகள். நான் விரைந்து குணமடைய வேண்டுமென ஆலயங்களில், தேவாலயங்களில், மசூதிகளில் பூஜைகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடத்தியும் நேர்த்திக்கடன் செய்தும், அன்ன தானம், இரத்த தானம் உள்ளிட்ட நற்பணிகளிலும் ஈடுபட்ட என்னுடைய ரசிகர்கள் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் என்னை தன் வீட்டில் ஒருவனாகக் கருதி எனக்காக கண்கலங்கி தங்கள் பிரார்த்தனையில் எனக்காகவும் வேண்டிக்கொண்ட லட்சக்கணக்கான தமிழக மக்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.

இராமானுஜம்

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

3 நிமிட வாசிப்பு

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து! ...

9 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

சனி 4 டிச 2021