மாற்றுத்திறனாளிகளை கவர்ந்த ‘மாயோன்’!

டிசம்பர் 3ஆம் தேதி, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுவதால், சிபிராஜ் நடிப்பில் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'மாயோன்' படத்தின் டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. மாற்றுத் திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது
இது தொடர்பாகப் படத் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறுகையில், “ நாங்கள் எப்போதும் நினைவாற்றலையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக 'மாயோன்' படத்தின் டீசரை பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்தியேக ஒலி குறிப்புடன் உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம்.
நாம் அனைவரும் நம்முள் பல 'இயலாமை'களையும், 'அச்சங்'களையும் கொண்டிருக்கிறோம். சிலருக்கு இவை இயல்பாக இருக்கும். பலருக்கு இவை பலரால் வழங்கப்பட்டதாக இருக்கும் அல்லது சமூகத்தின் வாயிலாகக் கிடைக்கப் பெற்றதாக இருக்கும். எனவே அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரம் மற்றும் சமூகத்தை நோக்கி ஆரோக்கியமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது.
இறைவனின் பிள்ளைகளான மாற்றுத்திறனாளிகள், தங்களின் விடா முயற்சியால் விதிக்கப்பட்ட வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்தவர்கள். உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில் அவர்கள் சாதனை புரிந்திட, நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம். மாற்றுத் திறனாளிகளின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்றவகையில் பிரத்தியேக வாழ்வாதாரத்தையும், நம்முடைய சமூக கட்டமைப்பையும் உருவாக்குவதற்கு இந்நாளில் சபதம் ஏற்போம். அந்த வகையில் முதல் முயற்சியாக 'மாயோன்' படக்குழு, படத்தின் டீசரை பார்வை திறன் உள்ள மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்துகொள்ளும் வகையில் உருவாக்கி, அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.
Happy International Day of People with Disabilities!
— Double Meaning Production (@DoubleMProd) December 3, 2021
We’ve always believed in #mindfulness and an #inclusive culture. An example being the Audio Descriptive Teaser for #Maayon https://t.co/L1Q4GzcnUs
We sincerely hope all mainstream industries start being #inclusive #IDPD
எங்களைப்போல் தமிழ் திரையுலகினர், மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடையும் வகையில் தங்களது படைப்புகளை உருவாக்க வேண்டும் என்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று பணிவான வேண்டுகோளை முன்மொழிகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்
'மாயோன்' படத்தில் நடிகர் சிபிராஜ், அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் ராதாரவி, கே எஸ் ரவிக்குமார், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தப் படத்திற்கு ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் டீசருக்காக பிரத்யேக ஒலிக்குறிப்பைச் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாற்றுத்திறனாளி கலைஞரான ‘இன்ஸ்பயரிங்’ இளங்கோ உருவாக்கியுள்ளார்
மாற்றுத்திறனாளிகளும் பலனடையும் வகையிலான பிரத்யேக ஒலிக்குறிப்புடன் படத்தின் டீஸர் வெளியிடும் பணியினை, தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் இதற்கு முன்னர் வெளியான ‘சைக்கோ’ படத்திலும் கையாண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-இராமானுஜம்