மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 டிச 2021

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

தெலுங்கு,மலையாள மொழி சினிமாவில் டிசம்பர் 2 அன்று இரண்டு முக்கியமான திரைப்படங்கள் வெளியானது.

மலையாளத்தில் மோகன்லால் நடித்திருக்கும் மரைக்காயர், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்திருக்கும் அகண்டா. இரண்டுமே அந்தந்த மொழி மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்கள். மரைக்காயர் தமிழ் உள்பட பல மொழிகளில் வெளியானது. ஆனால் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள்தான் அதிகம் கிடைத்து வருகிறது. படைப்பு ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை மரைக்காயர் தவறவிட்டதோடு, எதிர்பாராத தோல்வியையும் சந்தித்துள்ளது.

தெலுங்கு மொழியில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான அகண்டா ரசிகர்களை ஒட்டு மொத்தமாகத் திருப்தி செய்துள்ளது. பாலகிருஷ்ணாவின் ஹீரோயிசத்தை அடுத்த தளத்துக்கு பொய்யாப்பட்டி ஸ்ரீனு கொண்டு சென்றிருக்கிறார் என தெலுங்கு ஊடகங்கள் பாராட்டியுள்ளன.

இதில் பாலகிருஷ்ணா அகோரியாக நடித்துள்ளார். பாலகிருஷ்ணா படம் என்றால் அதில் லாஜிக் இருக்காது அதனை ரசிகர்களும் எதிர்பார்ப்பது இல்லை. கைதட்டி ரயிலை நிறுத்துவது, கைக்கு ஒன்றாக சுமோவை சுழற்றி வீசுவது, காலை சுழற்றி புயல் வரவழைப்பது என அவரது சாகசங்கள் திரையில் விரியும்போது, அதைப் பார்த்து ஜாலியாக ரசிக்க ஆந்திரா, தெலுங்கானாவில் பெரும் திரளான ரசிகர்கள் உள்ளனர்.

இந்தப் படத்திலும் அவர் சூலாயுதத்தை நிலத்தில் குத்தினால் நாலு பேர் தெறித்து விழுகிறார்கள். அதனால் என்ன... ஹீரோயிசம் இருக்கிறதா இல்லையா. ரசிகர்களுக்கு அது போதும். அகண்டாவின் இன்னொரு விசேஷம் தமனின் இசை. சில திரையரங்குகள் எங்கள் சவுண்ட் சிஸ்டத்தால் தமனின் இசையைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்று செய்தியே வெளியிட்டுள்ளன.

இவை எல்லாமுமாகச் சேர்ந்து அகண்டாவை பிளாக் பஸ்டர் ஹிட்டாக்கியுள்ளது. கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் தெலுங்கு சினிமா சந்திக்கும் முதல் பிரம்மாண்டமான வெற்றி இது. தெலுங்கு திரையுலகமே நடிகர் பாலகிருஷ்ணாவை கொண்டாடுகிறது.பொய்யாப்பட்டி ஸ்ரீனு இதற்கு முன் பால கிருஷ்ணா நடித்துள்ள சிம்ஹா, லெஜென்ட் படங்களை இயக்கியுள்ளார், இரண்டுமே ஹிட். அகண்டா இந்த கூட்டணியின் ஹாட்ரிக் வெற்றி. 61 வயதாகும் பாலகிருஷ்ணா தெலுங்கு மக்கள் தங்கள் பிரச்சினைகளை மறந்து தங்களைப் பரவசப்படுத்தும் கதாநாயகனாகக் கொண்டாடி வருகின்றனர்.

-அம்பலவாணன்

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

3 நிமிட வாசிப்பு

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து! ...

9 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

சனி 4 டிச 2021