முதல் நீ முடிவும் நீ: எப்படி இருக்கு?

entertainment

தமிழ் ரசிகர்களின் விருப்பமான தளங்களில் ஒன்றாக இருக்கும் ஜீ5 தளத்தின் அடுத்த வெளியீடாக ஜனவரி 21, 2022 அன்று “முதல் நீ முடிவும் நீ” திரைப்படம் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் தமிழ்நாட்டின் சென்னையில் 90களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. பள்ளி வாழ்க்கை, காதல், பிரிவு, ரியூனியன் என விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ படம் மாதிரியான அருதப்பழசான கதைதான். ஆனாலும், அதனை சுவாரஸ்யமாக பார்வையாளனுக்கு கடத்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர் தர்புகா சிவா.

பள்ளி வாழ்க்கையைக் கடந்த ஒவ்வொருவருக்கும் அந்த நாள் ஞாபகங்கள் எப்போதும் மனதில் பசுமையாக இருக்கும். அதன் பின் கல்லூரி வாழ்க்கை, வேலை, அலுவலகம், கல்யாணம் என வாழ்க்கை கடந்துபோனாலும் ஒரு நாளாவது அந்த பள்ளி வாழ்க்கையிலேயே இருந்திருக்கலாமே என்று எல்லோருக்கும் இயல்பாக தோன்றும். அந்த அளவிற்கு பள்ளி வாழ்க்கை பசுமரத்தாணியாக மனதில் பதிவாகி இருக்கும்

வறுமை, சோகம், மகிழ்ச்சி, இழப்பு என எத்தனையோ சம்பவங்கள் நடந்திருந்தாலும் அவற்றை மீண்டும் மீண்டும் நினைத்து மனம் அசைபோட்டு மகிழ்வது அலாதியான சுகம், அதைத்தான் இந்தப் படத்தின் முதல் பாதி பதிவு செய்கிறது.

சைனீஸ், வினோத் இருவரும் நெருங்கிய நண்பர்கள். வினோத்துக்கு உடன் படிக்கும் ரேகா மீது காதல். இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி தங்கள் காதலை வளர்த்துக் கொள்கிறார்கள். பள்ளியின் ஆண்டு விழா தினத்தன்று வேறு ஒரு பெண்ணுடன் வினோத் நெருக்கமாக இருந்ததாக நினைக்கும் ரேகா, வினோத்துடன் சண்டை போட்டு தன் காதலை முறித்துக் கொள்கிறார். காலங்கள் கடக்கிறது, வினோத் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருக்கிறார். மீண்டும் பள்ளி மாணவர்கள் சந்திக்கும் நிகழ்வு முதன் முதலாக நடக்கிறது. ரேகா தனது வருங்காலக் கணவருடன் விழாவிற்கு வருகிறார். பிரிந்த நண்பர்கள் தங்கள் பள்ளி வாழ்க்கையை நினைத்துப் பேசுகிறார்கள். ரேகாவைப் பார்த்ததும் வினோத்துக்குக் காதல் தவிப்பு ஏற்படுகிறது. ரேகாவும் பள்ளிக் கால காதலை நினைத்து தவிக்கிறார். அதன்பின் என்ன என்பதுதான் மீதிக் கதை.

பள்ளி மாணவர்களாக, மாணவிகளாக, ஆசிரியர்களாக நடித்திருக்கும் ஒவ்வொருவரும் இயல்பாக நடித்துள்ளார்கள்.

சைனீஸ் ஆக ஹரிஷ், படத்தில் நடித்தவர்களிலேயே அவ்வளவு குறும்புடன், யதார்த்ததுடன் நடித்தவர்களில் இவருக்குத்தான் முதலிடம். நமது பள்ளி நண்பர்கள் குழுவில் எப்படியும் இப்படி ஒரு நண்பர் இருப்பார். எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு குணம், என்ன வேண்டுமானாலும் செய்யும் இப்படி ஒரு நண்பன் கிடைத்தால் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சிறப்பாக அமையும் என எண்ண வைக்கிறார்.

வினோத் ஆக கிஷன் தாஸ். பள்ளி மாணவராக இருக்கும் போது காதல் நாயகனாக கலக்குகிறார். காதலைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்பது போல் காதலுக்காக உருகுகிறார். பின்னர் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் ஆனதும், அவரா இவர் என பக்குவப்பட்ட நடிப்பில் ஆச்சரியப்பட வைக்கிறார்.படத்தின் நாயகி என்று ரேகாவாக நடித்திருக்கும் மீதா ரகுநாத்தை சொல்ல வேண்டுமென்றால், சினிமாத்தனம் இல்லாத இயல்பான ஒரு முகம். பள்ளி மாணவிகள் எப்படிப் பேசுவார்கள், பழகுவார்கள், நடந்து கொள்வார்கள் என பார்த்துப் பார்த்து நடித்திருக்கிறார். முத்தக் காட்சியில் கூட தைரியமாக நடித்திருக்கிறார். அப்பாவித்தனமான பெண்களிடம்தான் காதல் ஊற்றெடுக்கும் என்பதை இயல்பாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

ஆசிரியையாக நடித்திருக்கும் சிவசங்கரி, மற்ற மாணவர்களாக நடித்திருக்கும் சரண் குமார், ராகுல் கண்ணன், மஞ்சுநாத், வருண் ராஜன், சச்சின் நாச்சியப்பன், கௌதம் ராஜ், நரேன் ஆகியோரும் பள்ளி மாணவர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். கேத்தரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூர்வா ரகுநாத், அனு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அம்ரிதா மான்டரின், விக்கி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிணி ரமேஷ் ஆகியோரும் குறிப்பிட வேண்டியவர்கள்.

தர்புகா சிவாவின் இசையில் பழைய மாணவர்கள் சந்திக்கும்போது இடம் பெறும் பாடல் உணர்வு பூர்வமாய் அமைந்துள்ளது. பள்ளிக் காட்சிகளில் சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு ஒரு பள்ளியை நம் கண்முன் நிறுத்துகிறது.

இடைவேளை வரை இடம் பெற்ற காட்சிகள், வசனங்கள், நடிப்பு என ஒவ்வொன்றிலும் இருக்கும் சுவாரசியம் இடைவேளைக்குப் பிறகு இல்லாமல் போய்விடுகிறது. பழைய மாணவர்கள் சந்திப்பின்போது திரைக்கதை ஒரே இடத்தில் அப்படியே ஸ்தம்பித்து நின்று விடுகிறது. இடைவேளை வரை ஒரு படத்தை யதார்த்தமாய ரசித்தது, பின் ஒரு நாடகத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்திவிடுகிறது.

பள்ளி வாழ்க்கையை முழுதாக கடந்தவர்கள் தங்கள் பள்ளி வாழ்க்கையை அசைபோட தூண்டும் வகையில் உள்ளது முதல் நீ முடிவும் நீ படம்.

**-இராமானுஜம்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *