பீஸ்ட் இறுதி காட்சி குறித்து விமர்சனம்!

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் இறுதி காட்சிகள் தற்போது ஐஏஎஃப் ஒருவரின் விமர்சனத்தால் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெட்ஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் ‘பீஸ்ட்’. இந்த திரைப்படம் கடந்த மாதம் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. பின்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது. படம் வெளியான சமயத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது ஓடிடியில் வெளியாகி இருப்பதால் உலகம் முழுவதும் பல பார்வையாளர்களையும் சென்றடைந்துள்ளது. இந்த படத்தில் ரா ஏஜெண்ட் கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்திருப்பார். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளில் ஃபைட்டர் ஜெட் ஆப்ரேஷன் செய்வது போன்ற சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கும். இந்த காட்சிகள் மீது தான் தற்போது விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த காட்சிகளை பார்த்த சஜன் என்ற ஐஏஎஃப் விமானி, அந்த காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ’எனக்கு இதில் நிறைய கேள்விகள் உள்ளன’ என ட்வீட் செய்துள்ளார். இதற்கு பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
I have so many questions…. pic.twitter.com/zVafb6uAnm
— sajan (@sajaniaf) May 15, 2022
அதில் ஒரு ரசிகர், ‘’பிகில்’ படத்திற்கு பிறகு ‘பீஸ்ட்’ திரைப்படம் லாஜிக் இல்லாத காட்சிகளால் மீம் மெட்டீரியல் ஆகியுள்ளது. நடிகர் விஜய் இனி வரும் படங்களிலாவது இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். படம் சுமாராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், இப்படி கேள்வி எழுப்பி மீம் ஆக்க வேண்டாம்’ என கூறியுள்ளார்.
மேலும் இன்னொருவர், ‘என்ன காட்சி இது? இப்படி கூட லாஜிக் இல்லாமல் காட்சிப்படுத்த முடியுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மேல் இந்த காட்சியை இப்படி என்னால் யோசிக்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.