மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 மே 2022

ஐபிஎல்: மும்பையை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்!

ஐபிஎல்: மும்பையை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்!

பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடர் தற்போது பிளே ஆப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று (மே 17) நடைபெற்ற 65ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா - பிரியம் கார்க் களமிறங்கினர். அபிஷேக் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன் பிறகு கார்க் உடன் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரியம் கார்க் 42 ரன்களில் ரமன்தீப் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய திரிபாதி அரை சதம் கடந்து அசத்தினார். நிக்கோலஸ் பூரன் தனது பங்குக்கு 22 பந்துகளில் 38 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார்.

சிறப்பாக விளையாடி வந்த ராகுல் திரிபாதி 44 பந்துகளில் 76 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. மும்பை அணி தரப்பில் ரமன்தீப் சிங் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா - இஷான் கிஷன் களமிறங்கினர். இந்த சீசனில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு இருவரும் ஜோடி சேர்ந்து எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். ரோஹித் சர்மா 36 பந்துகளில் 48 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் டேனியல் சாம்ஸ் களமிறங்கினார்.

ரோஹித்தைத் தொடர்ந்து இஷான் கிஷன் 43 ரன்களில் உம்ரான் மாலிக் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு மும்பை அணி சரிவை நோக்கி சென்றது. உம்ரான் மாலிக் 15 ரன்களில் டேனியல் சாம்ஸை வெளியேற்றினார்.

ஒருகட்டத்தில் தோல்வியின் பிடியில் மும்பை இந்தியன்ஸ் அணி இருந்தது. கடைசி மூன்று ஓவர்களில் வெற்றிக்கு 45 ரன்கள் தேவைப்பட்டது. ஹைதராபாத் பந்து வீச்சாளர் நடராஜன் வீசிய 18ஆவது ஓவரில் மும்பை வீரர் டிம் டேவிட் 4 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதே ஓவரில் இறுதி பந்தில் அவர் ரன் அவுட்டானார். 18 பந்துகளில் 46 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார்.

இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளுக்குப் பிறகு ஹைதராபாத் அணி ஆறாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் அந்த அணி 12 புள்ளிகளுடன் பிளே ஆப்புக்கான வாய்ப்பிலும் நீடிக்கிறது.

டி20 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இதுவரை சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி20 போட்டிகளில் 250 விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். 223 விக்கெட்டுகளுடன் இந்தப் பட்டியலில் புவனேஸ்வர் குமார் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அதாவது பும்ராவுக்கு முன்னதாக 250 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஷ்வின் (274), யுஸ்வேந்திர சாஹல் (271), பியூஷ் சாவ்லா (270), அமித் மிஸ்ரா (262) என நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தப் பட்டியலில் பும்ரா ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

இன்று (மே 19) நடக்கும் 66ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியும் லக்னோ அணியும் மோதுகின்றன.

அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 13 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருப்பதுடன், ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருக்கும் அந்த அணி, இன்றைய ஆட்டத்தில் மோசமான தோல்வியைச் சந்திக்காமல் இருந்தாலே அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விட முடியும்.

கொல்கத்தா அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா, சாவா போராட்டமாகும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால்தான் கொல்கத்தா அணி அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் நீடிக்க முடியும்.

-ராஜ்-

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

2 நிமிட வாசிப்பு

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

9 நிமிட வாசிப்பு

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்! ...

3 நிமிட வாசிப்பு

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்!

புதன் 18 மே 2022