மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 30 மா 2020

ஒருவர் தவறு செய்தாலும்: சுகாதாரத் துறை எச்சரிக்கை!

ஒருவர் தவறு செய்தாலும்: சுகாதாரத் துறை எச்சரிக்கை!

கொரோனா தொற்று அதிகரிக்கும் வீதம் கட்டுக்குள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், சமூக விலகல்தான் அதற்கு முன்னெச்சரிக்கை தீர்வு என பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு மருந்துகளை வீட்டிலேயே டோர் டெலிவரி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் அரசிதழில் வெளியிடப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தற்போதைய நிலவரம் குறித்து விளக்கச் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் இன்று (மார்ச் 26) செய்தியாளர்களை சந்தித்தார்.

“கடந்த 24 மணி நேர நிலவரப்படி 42 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 4 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 649 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்த லவ் அகர்வால்,

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவை அதிகரிக்கும் விகிதம் கட்டுக்குள் தான் இருப்பதாகவும், சமூகமும் அரசும் கூட்டாக இணைந்து செயல்படவில்லை என்றாலோ, வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றவில்லை என்றாலோ சமூகப் பரவல் தொடங்கிவிடும் என்றும் எச்சரித்தார். ஆனால் சமூக விலகல் மற்றும் சிகிச்சையை நாம் சரியாக பின்பற்றினால் அது இந்தியாவில் ஒருபோதும் நடக்காது என்று அவர் குறிப்பிட்டார்.

தங்களின் வேண்டுகோளை ஏற்று 17 மாநிலங்கள் கொரோனா தடுப்பு மருத்துவமனைக்கான பணிகளைத் துவங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “ஒரு குடிமகன் தவறு செய்தாலும், அவரைச் சுற்றியுள்ளவர்கள் அதன் விளைவுகளைச் சுமப்பார்கள். ஆகவே, தயவுசெய்து கவனமாக இருங்கள். வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 64,411 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் இப்போது இரண்டாவது கட்டத்தில் இருந்துகொண்டிருக்கிறோம். நோயாளிகளின் தொடர்புகளை அடிப்படையாக வைத்து கண்காணித்து வருகிறோம்” என்றும் தெரிவித்தார்.

எழில்

வியாழன், 26 மா 2020

அடுத்ததுchevronRight icon