கொரோனாவும் இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பும்!

health

ரகுநாத்

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், நம் கவனத்தை இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளின் பக்கம் திருப்பியுள்ளது. 21 நாட்களுக்கு பொருளாதாரமே தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் வேலையை இழந்த கோடிக்கணக்கான புலம்பெயர்ந்து பணிபுரியும் உழைப்பாளி மக்கள் கொரோனா தொற்றில் இருந்து தப்பித்துக் கொண்டாலும், பசிப்பிணியில் இருந்து தப்பிப்பது பெரும்பாடாக இருக்கும் என்றே தெரிகிறது.

புலம்பெயர்ந்து பணிபுரியும் மாநிலத்தைவிட்டு இவர்கள் வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளும் தங்களால் இயன்ற அளவுக்கு அவர்களுக்கு தங்க இடமும் உண்ண உணவும் வழங்க முயற்சி செய்து வந்தாலும், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கே புறப்பட்டனர். இவர்களுக்கு ரேஷன் அட்டை இருந்தாலும், அதை இவர்கள் போகும் ஊர்களுக்கு எல்லாம் எடுத்துச்செல்ல முடியாது. வீட்டிற்கு போனால்தான் ரேஷன்கார்டை வைத்து சாப்பாட்டிற்கு ஏதாவது வழிசெய்ய முடியும் என்பதால் அவர்கள் வீடு திரும்ப முடிவெடுத்துள்ளனர்.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் பயன்பெறும் 80 கோடி மக்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு கூடுதலாக ஐந்து கிலோ உணவுதானியம் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று அரசு நிவாரணத்தை அறிவித்தாலும், அந்த நிவாரணம் மக்களுக்கு போய் சேரவேண்டிய ஏற்பாடு இங்குள்ளதா என்பது கேள்விக்குறிதான். பொது விநியோகத் திட்டம் கூடுதல் செயல்திறனோடு செயல்படுவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை.

இதுபோன்ற நெருக்கடி நேரத்தில் ஆதார் அட்டையை காட்டினால்தான் உணவுதானியம் வழங்கப்படும்; கைரேகை அங்கீகரிக்கப்பட்டால்தான் அரசின் நிவாரணம் பெறமுடியும் போன்ற விதிகளைத் தற்காலிகமாக ஓரங்கட்டி வைக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு நிபுணர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ரேஷன் அட்டை இல்லாதவர்களும் உணவுதானியம் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

Global Hunger Index எனும் குறியீட்டின் அடிப்படையில் 117 நாடுகளை உள்ளடக்கித் தயாரிக்கப்படும் உலக நாடுகளின் தரவரிசையில் இந்தியா சென்றாண்டு 102 வது இடத்தைப் பெற்றது. இந்தியாவில் பசிப்பிணியும், ஊட்டசத்து குறைபாடும் மிகவும் மோசமாக இருப்பதை இது ஊர்ஜிதப்படுத்துகிறது. சமூக நீதிக் கோட்பாட்டை நிலைநிறுத்த அரைநூற்றாண்டுக்கு மேலாக உணவரசியலை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி வந்துள்ள தமிழகத்திலும், மக்களுக்கு உணவு போய் சேர்வதிலுள்ள இடையூறுகள் களையப்பட்டுள்ள போதும், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஊட்டசத்து குறைபாட்டால் அவதிப்படும் நிலை உள்ளது.

20 விழுக்காடு குழந்தைகளுக்கு உயரத்திற்கேற்ற எடை இல்லை. 8 விழுக்காடு குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் 15-49 வயதுப் பெண்களில் 55 விழுக்காட்டினருக்கு இரத்தச்சோகை உள்ளது. இது, தேசிய சராசரியான 53 விழுக்காட்டை விட அதிகம். இவை தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 2015-16 நமக்கு வழங்கும் தரவுகள். அனைவரையும் உள்ளடக்கிய பொது விநியோகத் திட்டம், சிறுபிள்ளைகளுக்கான ஒருங்கிணைந்த சிறுபிள்ளை மேம்பாட்டுத் திட்டம் (ICDS), பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் என சிறப்பாக செயல்படும் ஒரு முழுமையான உணவுப் பாதுகாப்பு அமைப்பு இருக்கும் தமிழ்நாட்டிலேயே இந்த நிலை என்றால், இப்படிப்பட்ட அமைப்பு இல்லாத மற்ற மாநிலங்களில் மக்களின் உணவுப் பாதுகாப்பு எப்படியிருக்கும் என்பதை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது.

இந்தியப் பொருளாதாரத்தின்மீது கொரோனா ஏற்படுத்தப்போகும் எதிர்மறைத் தாக்கங்களில் இருந்து மக்களைக் காக்க வேண்டும் என்றால் அதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் முதலில் செய்ய வேண்டியது சாதாரண மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *