மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 25 பிப் 2021

கொரோனா குணமடைவோர் விகிதம் அதிகரிப்பு!

கொரோனா குணமடைவோர் விகிதம் அதிகரிப்பு!

மின்னம்பலம்

கொரோனா இறப்பு விகிதம் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நான்காவது முறையாக வரும் மே 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,06,750 ஆக அதிகரித்துள்ளது. 3,303 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரேனாவுக்கு பலியாகி உள்ளதாகவும், 5,611 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று (மே 20) செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால், “கொரோனா பாதிக்கப்பட்டுள்ள 1,06,750 நபர்களில் 61,149 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2.94 சதவிகிதம் பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 சதவிகிதம் பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 42,298 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர் என்பது நமக்கு திருப்திகரமான செய்தியாக உள்ளது” என்று தெரிவித்தார்.

“உலகின் மொத்த மக்கள்தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 62 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 7.9 பேர் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர்” என்று குறிப்பிட்ட லவ் அகர்வால், உலகம் முழுவதும் 4.2 லட்சம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாகவும், இதுவே இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 0.2 சதவிகிதம் மட்டுமே இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார். மற்ற நாடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 10,000க்கும் அதிகமாக இருப்பதாகவும், இந்தியாவில் அந்த நிலைமை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், “முதல்கட்ட ஊரடங்கு தொடங்கியபோது குணமடைவோர் விகிதம் 7.1 சதவிகிதமாக இருந்தது. இரண்டாவது ஊரடங்கின்போது அது 11.42% ஆக இருந்தது. படிப்படியாக உயர்ந்து மூன்றாவது ஊரடங்கில் 26.59 சதவிகிதமாக அதிகரித்து, இன்று 39.62 சதவிகிதமாக உள்ளது” என்றும் தெரிவித்தார்.

எழில்

வியாழன், 21 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon