மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

தமிழகத்தில் அக்டோபரில் கொரோனா உச்சம்!

தமிழகத்தில் அக்டோபரில் கொரோனா உச்சம்!

தமிழகத்தில் அக்டோபர் நடுப் பகுதியில் கொரோனா உச்சத்தை அடையும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக மார்ச் 7ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மஸ்கட்டிலிருந்து தமிழகம் திரும்பிய ஒருவருக்கு நடத்தப்பட்ட சோதனையில்தான் கொரோனா உறுதியானது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 1,072 பேருக்கு கொரோனா உறுதியானது. தமிழகத்தில் மொத்தமாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது.

மக்கள்தொகை அதிகம் கொண்ட சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகலாம் என்று சென்னையைச் சேர்ந்த ஐசிஎம்ஆரின் அங்கமான தேசிய தொற்றுநோயியல் மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தின் கொரோனா பாதிப்பு 50,000த்தைத் தாண்டும் என்று எச்சரித்துள்ளது. இதுவரை 18,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சென்னையில், 13 நாள்களில் இரட்டிப்பாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வரும் ஜூன் இறுதிக்குள் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் எனவும், சென்னையில் குறைந்தபட்சம் 71,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்றும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. அதற்குள் சென்னையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 748 ஆக இருக்கும் என்று பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அப்போதுதான் நாம் உச்சத்துக்குச் செல்ல தொடங்கி இருப்போம் என்று கூறும் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர், பல்கலைக்கழக கணிப்பின்படி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் உச்சத்தை எட்டும் எனவும், அதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாகவே சென்னையில் உச்சத்தை எட்டிவிடும் எனவும் கூறுகிறார்.

மேலும், “ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் கொரோனா பாதிப்பு ஜூலை மாத பாதியிலேயே அதன் உச்சத்தை அடைந்து அதாவது 3.5 கோடி பாதிப்புகளை ஏற்படுத்தி சுகாதாரத்துறையை கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும்” என்றும் குறிப்பிட்டார்.

“அரசின் நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு உச்சத்தை எங்களால் தாமதப்படுத்த முடிந்தது. எனினும், கொரோனாவை எதிர்கொள்ள எங்கள் உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளங்களைத் தயார் செய்து வருகிறோம். குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என கொரோனா பாதிப்படையக்கூடிய மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் கவனம் செலுத்த விரும்புகிறோம்” என்று சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

எழில்

தகவல்: டைம்ஸ் ஆப் இந்தியா

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon