மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

ஃபேஸ்புக் வக்கிரம்,போலீஸ் அலட்சியம்,இளம் பெண் தற்கொலை !

ஃபேஸ்புக் வக்கிரம்,போலீஸ் அலட்சியம்,இளம் பெண் தற்கொலை !

சமூக வலைத்தளங்களின் பெருக்கத்திலேயே இன்றைய இளம் தலைமுறை வாழ்கிறது. முகநூல் கணக்கில்லாத ஒருவரை இன்று பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆனால், அதுவும் சமூகத்தின் அவலங்களை பலவாறாக பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு நாளும் பகிரப்படும் லட்சக்கணக்கானப் பதிவுகளில் பெரும்பாலான பதிவுகளும் பகிர்வுகளும் பெண்களைப் பற்றியது. சினிமா நடிகைகள், பிரபலங்கள் என வாழ்த்துகளையும் நல்ல விஷயங்களையும் பகிர்கிறவர்களுக்கு மத்தியில் அவதூறு பரப்பும் ஆசாமிகளும் கணிசமாகவே ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற இணைய தளங்களில் இருக்கிறார்கள். பகிரப்படும் ஆயிரக்கணக்கான செய்திகளில் அன்றாடம் சில நூறு ஆபாசப்படங்களாவது மார்பிங் செய்யப்பட்டு வருகிறது. அதை ஷேர் செய்கிறவர்களின் சகோதரிகளின் படமாக அது இல்லாதவரை, இதனால் ஏதோ ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படப் போகிறது என்பதுகூடத் தெரியாமல் ஷேர் செய்கிறார்கள், லைக் போடுகிறார்கள்.

அப்படி முகநூலில் வக்கிரத்துக்கு பலியான பெண்தான் வினுப்ரியா.

சேலம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்குனசாலை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். விசைத்தறி உரிமையாளரான தந்தை அண்ணாதுரையின் மகளான 20 வயது வினுப்ரியா, பி.எஸ்சி கெமிஸ்ட்ரி பட்டதாரி. இவர் ஃபேஸ்புகில் மைதிலி வினு பிரியா (Mythili Vinu Priya) என்னும் பெயரில் இயங்கி வந்தார்.

இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் இவரது படங்களை ஆபாசாமாக மார்பிங் செய்து அதை முகநூலில் வெளியிட்டு அதை வினுப்ரியாவுக்கே டாகும் செய்துள்ளார். இதற்கு காவல்துறை நடவடிக்கை எதுவும் இல்லாத நிலையில் இரண்டாவது படமும் இன்று வெளியானது. இந்நிலையில் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து இன்று காலை தூக்கு மாட்டி தற்கொலை செய்திருக்கிறார்.

இப்போது வினுப்ரியாவின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சம்பவ இடத்தில் இருந்த வழக்கறிஞர் பூமொழி நம்மிடம், “கடந்த 15 நாட்களாக மர்ம நபரின் தொடர் துன்புறுத்தலுக்கு வினுப்ரியா ஆளாகியிருக்கிறார். அந்த நபர் இந்த பெண்ணின் படத்தை எடுத்து ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட உடனே வினுப்ரியா மகுடஞ்சாவடி காவல்நிலையம் சென்று புகார் கொடுக்கிறார். காவல் ஆய்வாளர் புகாரைப் பெற்றுக் கொள்ளாத நிலையில் சங்ககிரி டி.எஸ்.பி-யிடம் புகார் கொடுத்திருக்கிறார். அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. லோக்கலில் உள்ள ஒரு நபரை அழைத்து விசாரித்தபோது அவர், தான் அதைச் செய்யவில்லை என்றும் அது சென்னையில் இருந்து செய்யப்படுகிறது என்று சொன்னதாகவும் தகவல்கள் வெளியானது. ஆக மொத்தம்… அந்த விவாகாரம் தொடர்பாக நடவடிக்கை எதுவும் இல்லை.

இந்நிலையில் இரண்டாவது படத்தையும் அந்த மர்ம நபர் வெளியிட அவமானம் தாங்கமுடியாத வினுப்ரியா தற்கொலை செய்திருக்கிறார். புகார் மனு இன்னும் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் அப்படியே கிடப்பில் இருக்கிறது” என்கிறார்.

அநியாயமாக அப்பாவிப் பெண்னின் உயிர் பலியாகி இருக்கிறது. வாட்ஸ் அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் திருடி, கொள்ளைக்காரி, விபச்சாரி என்று வந்து குவியும் எத்தனை புகைப்படங்களையும் செய்திகளையும் நாம் பரப்பியிருப்போம்? அப்படி வருகிற செய்திகளின் உண்மைத் தன்மையை சோதிக்க என்ன வாய்ப்பு இருக்கிறது? நமக்கு வருகிற செய்தி உண்மையா, பொய்யா என்ற கூட தெரியாமல் அதை உறுதி செய்து கொள்ளாமல் சகட்டு மேனிக்கு நம் மொபைலில் இருக்கும் எத்தனை எண்களுக்கு அந்த செய்திகளை அனுப்பி வைத்திருப்போம். அது, தெரியாமல் செய்கிற தவறு. ஆனால், நம்மைப்போல தெரியாமல் செய்கிற தவறு தான், தெரிந்தே தவறு செய்கிறவர்களுக்கான முதலீடு. அப்படி ஒரு ஆபாச வக்கிரத்துக்குத்தான் பலியாகியிருக்கிறார் வினுப்ரியா. இப்போது கொலையாளிகளை கைது செய்யாமல் வினு பிரியாவின் உடலை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டனர் பெற்றோர்.

வினுவின் தற்கொலை கடிதம்

வினு எழுதிவைத்துள்ள தற்கொலை கடிதம் மீட்கப்பட்டுள்ளது. அவர் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் “ மொதல்ல நீங்க எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க, என்னோட லைப்ஃ போனதுக்கு அப்புறம் நான் வாழ்ந்து என்ன பண்ணப் போறேன். எனக்கு வாழப் புடிக்கல்ல, என்னோட அப்பா அம்மாவே என்னை நம்பாதப்போ நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம், அவங்களே என்னைப் பற்றி கேவலமா பேசுறாங்க, சத்தியமா சொல்றேன் நான் என் போட்டோவை யாருக்கும் அனுப்பல்ல, நான் எந்த தப்பும் பண்ணல்ல.

Belive me one second sorry... sorry

by,

vinu priya, Bsc.

என்று தன் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் வினு ப்ரியா, முகம் தெரியாத எவனோ ஒருவன் வினுவின் வாழ்வில் அநியாயமாக விளையாட அதை பெற்றோரும் நம்பாத துரதிருஷ்டவசமான சூழலில் வினு தற்கொலை செய்திருக்கிறார்.இப்படியாக முடிந்து போனது அப்பாவி வினுவின் வாழ்க்கை.

சமீபத்தில் ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது பெண்ணிடம் தகாதமுறையில் நடந்துகொண்ட நபர், அவரை புகைப்படம் எடுத்ததோடு தன் நண்பர்களுக்கும் அந்தப் பெண்ணை விருந்து வைக்க எண்ணினார். தன் நண்பர்களிடம் அப்படி நடந்து கொள்ளாவிட்டால் ஆபாசப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிடப் போவதாக மிரட்ட, பாதிக்கப்பட்ட பெண் துணிச்சலாக காவல்துறைக்குச் சென்றதோடு, மான அவமானம் பற்றி கவலைப்படாமல் துணிச்சலோடு போராட, போலீஸார் ஒருகட்டத்தில் அந்த நபரை விசாரிக்க, பயந்து போன அந்த நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது அந்த வழக்கில் நீதிபதிகள் தெரிவித்த கருத்து இந்த இடத்தில் முக்கியமானது.

“இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மையையும் சூழலையும் விசாரணை செய்ததில் குற்றம் சாட்டப்பட்டவர் கடுமையான குற்றங்கள் புரிந்துள்ளது தெரியவருகிறது. எனவே, இந்த முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது. சமூக வலைதளங்கள் அனைத்தும் நமக்கு வரமாக மாறி, ஒரு அன்பான ஒற்றுமையான சமுதாயத்தை உருவாக்க வேண்டுமே தவிர, அவை நம்மை அழிப்பதற்காக மாறிவிடக்கூடாது. வாட்ஸ் அப் போன்ற வலைதளங்களில், தங்களின் புகைப்படங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளும்போது நாம் மிகவும் கவனமாகச் செயல்படவேண்டும். குறிப்பாக, பெண்கள் இதில் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

வினுவின் அப்பா

ஆம்; நீதிபதிகளின் இந்த வார்த்தைகள் முக்கியமானவை முன்ஜாமீன் வேண்டியவர் கடும் குற்றம் புரிந்தவர் என்பதை புரிந்துகொண்ட நீதிபதிகள் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறார்கள். அதேநேரம் ‘வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்கிறார்கள். ஆக, நமது அந்தரங்க புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் இன்னொரு ஆண் எடுக்க அனுமதிக்காதீர்கள். நம்பிக்கையின் அடிப்படையில் எடுக்கப்படும் படங்களுக்கு முழு நம்பிக்கையாக பெரும்பான்மையான ஆண்கள் இருப்பதில்லை. அந்த நம்பிக்கையின் தோல்விதான் பல பெண்களின் வாழ்வை சூறையாடி விடுகிறது.

திங்கள், 27 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon