மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 20 அக் 2020

சிறப்புக் கட்டுரை : ரிப்பன் பிரஸ் சாது. சைவ இரத்தின செட்டியார் - 1841-1901

சிறப்புக் கட்டுரை : ரிப்பன் பிரஸ் சாது. சைவ இரத்தின செட்டியார் - 1841-1901

கடந்த நூற்றாண்டில் சித்தாந்த சைவர்களுக்கும் அத்வைத வேதாந்திகளுக்கும் ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்ற முதற் குறளை அடிப்படையாகக் கொண்டு நீண்ட தத்துவப் போர் இடையறாது நடந்து வந்தது. முதற் குறள் அத்வைதத்தை குறித்தே பேசுகிறது என்று வேதாந்திகளும், அதை சித்தாந்திகளும் மறுத்து மறுப்பு, மறுப்பின் மறுப்பு, மறுப்பின் மறுப்புக்கு மறுப்பு என்ற தொனியில் விவாதங்கள் நடந்தேறின. சித்தாந்திகள் மற்ற எழுத்துகளுக்கு அகரம் நிமித்தம் காரணமென்றும், அங்கணமே உலகுக்கு பகவன் மாசற்ற நிமித்த காரணமென்றும் கூறி அத்வைதிகளை எதிர்கொண்டனர். அத்வைதிகளோ, எழுத்துகளுக்கு அகரம் முதற் காரணமென்றும் உலகுக்கு பகவன் முதற் காரணமென்றும் கூறி சித்தாந்திகளின் வாதங்களை மறுத்தனர். இந்த விவாதம் தமிழ் மற்றும் வடமொழித்தன்மை குறித்தும் இலக்கணத்தைப் பற்றியும் திராவிட வேர்ச்சொல் குறித்தும் பல விஷயங்களை தத்துவார்த்தமாக விளக்கி பெரிய நூலாகிப் போனது.

இதே முதற்குறள் குறித்து நாத்திகவாதிகளும் சமணர்களும் வள்ளுவம், தம் தத்துவம்சார்ந்த நூலென உரிமை கொண்டாடி வருவதும் தெரிந்ததே. சோமசுந்தர நாயகர் 'சித்தாந்த சேகரம்' என்ற நூலில் முதற் குறள் குறித்து அத்வைதிகள் மறுத்து எழுதுகிறார். இந்த நூலுக்கு மறுப்புத் தெரிவித்து ‘ஆரியன்’ என்ற புனைபெயரில் ‘திருவள்ளுவர் முதற்குறள்’ என்ற 8 பக்கம்கொண்ட நூலை ஒருவர் எழுதுகிறார். ‘ஆரியன்’ எழுதிய மேற்கூறிய நூலை மறுத்து மறைமலையடிகள் ‘முருகவேள்’ என்ற புனைபெயரில் ‘முதற்குறள் வாத நிராகரணம்’ என்ற நூலை வெளியிட அதன்பின்பு, அதே ‘ஆரியன்’, 'துவித மத திரஸ்காரி' என்ற புனைபெயரில் மேற்கூறிய நூலை மறுத்து 250 பக்கம்கொண்ட ‘முதற்குறளுண்மை’ அல்லது ‘முதற்குறள் வாத நிராகரண சத தூஷணி’ என்ற நூலை வெளியிடுகிறார்.

முதற்குறள் வாத நிராகரணத்தின் நூறு தூஷணத்தின் தொகுதியடங்கிய நூல் என்ற பொருளில் வெளிப்படும் இந்த நூலாசிரியரின் பல புனைபெயர்கள் ‘ஆரியன்,’ ‘துவித மத திரஸ்காரி’ என்பன. இப் புனைபெயர்களுக்கு சொந்தக்காரர் 'ரிப்பன் பிரஸ்' சாது. சைவ இரத்தின செட்டியார் (1842-1901) இப் புனைபெயர்களை மட்டுமல்லாமல் ‘ஓர் இந்து’, ‘நண்பன்’, ‘நியாயவாதி’ , ‘ஓர் பிரம்மவாதி’, ‘அத்வைத சித்தாந்தி’ போன்ற பல புனைபெயர்களோடு தத்துவ விசாரம் செய்பவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய 24 நூல்களை சாது.சைவ இரத்தின செட்டியார் படைத்துள்ளார். சென்னை நகரைச்சுற்றி அக் காலகட்டத்தில் பல்வேறு மடங்களில் வேதாந்த சிரவணம் செய்துகொண்டிருந்தவர்களுக்கு இரத்தின செட்டியாரின் நூல்களை அடிப்படையாக வாசிப்பது ஒரு வழக்கமாக இருந்துவந்துள்ளது என்பது, பல்வேறு வேதாந்த ஆளுமைகளின் வரலாற்றிலிருந்து தெரிய வருகிறது. தமிழ் சூழலில் சாது.இரத்தின செட்டியார் ரிப்பன் பிரஸ் அச்சாபிஸ்காரர் என்ற பொருளில் மட்டுமே சுருக்கப்பட்டுவிட்டார்.

1841ஆம் ஆண்டு சிவசங்கரன் செட்டியாருக்கும், முனி அம்மைக்கும் மகனாக சென்னையில் பிறந்தார். தமிழ் மட்டுமே பயின்ற இரத்தின செட்டியார், குயப்பேட்டை ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள், திருக்குறள் சாமியார் கிருஷ்ணானந்த அடிகள் ஆகியோரிடம் வேதாந்த பயிற்சியை மேற்கொண்டவர். மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் குருநாதர் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளிடமும், வடலூர் இராமலிங்க சுவாமிகளிடமும் நன்கு பழகியவர்.

அத்வைதிகளுடைய கொள்கைகளைத் தாங்கி ப்ரம்ம வித்யா, ப்ரமாவதீன், சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளில் சாது. சைவ இரத்தின செட்டியார், நடுக்காவேரி சீனிவாச சாஸ்திரி மற்றும் சேதுராம பாரதி ஆகியோர் வாதிட்டு வந்தனர். சித்தாந்த சைவர்கள் சார்பாக சூளை சோமசுந்தர நாயகர், சபாபதி பிள்ளை, யாழ்ப்பாணம் செந்தில் நாதையர், வேங்கடரமண தாசர், மறைமலையடிகள் போன்றோரின் கருத்துகளை ஞானாமிர்தம், நகை நீலலோசனி, ஸஜ்ஜன பத்திரிக்கை, இந்து சாதனம் போன்ற இதழ்களில் வெளியாகின. 1894ஆம் ஆண்டு சென்னை முத்தியால்பேட்டை தம்புச்செட்டி தெருவில் அன்றைய சென்னை மாகாண கவர்னர் ரிப்பன் பிரபுவை பெருமைப்படுத்தும்விதமாக 'ரிப்பன் பிரஸ்' என்ற பெயரால் அச்சகத்தை நிறுவி, அதன்மூலம் திருமந்திர விசாரணை, அத்வைத தூஷண நிக்கிரகம், பேத வாத திரஸ்காரம், அவைதிக சைவ சண்டமாருதம், தத்துவவாதம், வேதாந்த சங்கை நிவாரணம், சங்கராச்சாரியார் அவதார மகிமை, வேதாந்த தீபிகை போன்ற பல்வேறு நூல்கள் சித்தாந்த சைவர்களின் வெளியீடுகளுக்கு மறுப்பாக தத்துவ விசாரம் செய்து எழுதி பதிப்பித்தார் சாது. சைவ இரத்தின செட்டியார்.

இந்து மாணவர்களின் மத மாற்றத்தை தவிர்க்கவேண்டி, சென்னை தங்கச் சாலை தெருவில் அமைந்துள்ள இந்து தியாலஜிக்கல் உயர்பள்ளி நிறுவனத்தை தொடங்கியவர் குஜராத்தைச் சேர்ந்த சிவசங்கர பாண்டையாஜி. இப் பள்ளியைத் தொடங்க பல்வேறு ஆலோசனைகளை வழங்கியவர் சாது. இரத்தின செட்டியார் .இதே சமயத்தில் ஆங்கிலேயர்கள், பாதிரிமார்கள் துணையுடன் தீவிரமாக மதமாற்றம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. இரத்தின செட்டியார் இப்பள்ளியில் தலைமை தமிழ் பண்டிதராக வேலைக்குச் சேர்ந்து தனது மூப்பு வயதுவரை வேலை செய்து பல்வேறு ஆளுமைகளை உருவாக்கியவர். இலக்கண, இலக்கிய தர்க்க வேதாந்தி கோ.வடிவேல் செட்டியார் இரத்தின செட்டியாரின் தலைமை மாணவர் ஆவார்.

சிந்தாதிரிப்பேட்டையில் பலசரக்குக் கடை வியாபாரம் நடத்திவந்து கொண்டிருந்த கோ.வடிவேல் செட்டியார், தணியாத தமிழார்வம் கொண்டு இரத்தின தேசிகரிடம் சரணடைந்து தமிழ் இலக்கியங்களின் வேதாந்த பயிற்சியையும் மேற்கொண்டு பிற்காலத்தில், வேதாந்த சங்கம் நிறுவி மிகப்பெரிய வேதாந்தியாக திகழ்ந்தவர். ஆரம்ப காலங்களில் கோ.வடிவேல் செட்டியார் மிடுக்கான நடையில் நூல் ஒன்றை எழுதி, தனது குருவிடம் ஆசி பெறுவதற்காக இரத்தின செட்டியாரிடம் தந்துள்ளார். அந்த நூலின் சில பக்கங்களை திரும்பிப் பார்த்து வடிவேல் செட்டியாரிடம் ‘இந்த நூலை நீரே படித்துக்கொள்ள எழுதினீர்களா, இல்லை மற்றவர்களும் படித்துப் பயன்பெற எழுதியுள்ளீர்களா?’ என்று கேட்க வடிவேல் செட்டியார் திகைத்துவிட்டார். மேலும் இரத்தின செட்டியார், ‘சிறிதளவே கல்வி அறிவுடைய பாமரர்களும் படித்து தெரிந்துகொள்ளும்வகையில்தான் நூல் எழுத வேண்டும். நீர் எழுதிய நூல் மிக மிக கடினமானது. பண்டிதர்கள்கூட படிக்க முடியாத இந்த நூலை உடனே எரித்துவிடு’ என்று கூறியதோடல்லாமல், தீப்பெட்டி ஒன்றையும் கொடுத்துவிட்டார். வடிவேல் செட்டியார் உடனடியாக குருதேவரின் வாக்கைக் காப்பாற்ற தான் எழுதிய நூலை தீக்கிரையாக்கிவிட்டார்.

இரத்தின தேசிகரின் மற்றுமோர் மிக முக்கியமான சீடர் வியாசர்பாடி மடத்தில் துயில் கொண்டிருக்கும் கரபாத்திர சிவபிரகாச சுவாமிகள். இரத்தின செட்டியாரின் வாக்குக்கிணங்க சாதுக்கள் தங்குவதற்கு ஆசிரமம் அமைத்து வடமொழி, தென்மொழி, கற்பிப்பதற்காக அன்றைய காலத்தில் தமிழ் குருகுலம் பல்கலைக்கழகம் போன்று செயல்பட்டது. இரத்தின தேசிகர், தான் படித்துக் கொண்டிருந்த ‘ரிபு கீதை’ என்ற நூலை கரபாத்திர சிவபிரகாச சுவாமிகளுக்கு வழங்கினார்.

கரபாத்திர சிவபிரகாச சுவாமிகள் தனது குருதேவர் அன்பளிப்பாக வழங்கிய ‘ரிபு கீதை’ என்ற நூலை பாதுகாத்து, தனது சீடனாக விளங்கிய, தாழ்த்தப்பட்டோர் உலகின் ஆன்மிக ஞானஒளியைப் பரப்பிய சிதம்பரம் நந்தனார் மடத்தை நிறுவிய சகஜானந்தருக்கு அளித்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

சென்னை வண்ணையம்பதி (வண்ணாரப்பேட்டை) ல.நாராயண தேசிகர், தமது வேதாந்த அனுபவங்களைத் தொகுத்து ‘அனுபவானந்த தீபிகை’ நூலை பதிப்பித்து வெளியிட இரத்தின செட்டியாரை அணுகியுள்ளார். அச்சமயம், நாராயண தேசிகரை நிற்கவைத்து உலகம் சத்தா? அசத்தா? போன்ற பல்வேறு கேள்விகளைக் கேட்டிருக்கிறார். தன்னை சரியாக இரத்தின செட்டியார் அனுமானிக்கவில்லை என்று கருதி, கிறிஸ்தவ அச்சுக் கூடத்துக்குச் சென்று தனது நூலை வெளியிட்டுள்ளார். நூலின் அரங்கேற்றத்தில் பங்கு கொண்ட சில தமிழ்ப் புலவர்கள் நாராயண தேசிகரின் நூலை பெருமைப்படுத்தும்படி இரத்தின செட்டியாரிடம் அறிவுறுத்தியபின்பு இந்த நூலை அச்சிடாமல்போனது குறித்து மிகவும் வருத்தமடைந்துள்ளார்.

இரத்தின செட்டியாருடைய ரிப்பன் பிரஸில் வேலை செய்யும் அச்சுக்கோர்ப்புத் தொழிலாளி, புதிதாக வெளிவந்துள்ள புத்தகத்தை யாருக்கும் தெரியாமல் களவாடிவிட்டு மூர் மார்க்கெட் சென்று விற்க விலை பேசினார். அச்சமயம், இரத்தின செட்டியார் நண்பர் காவல்துறை அதிகாரியாக இருந்த ஒருவர் அந்த தொழிலாளியை கையும் களவுமாகப் பிடித்து இரத்தின செட்டியாரிடம் ஒப்படைத்துவிட்டு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று ஆலோசனை செய்தார். போலீஸ்காரரை போகச் சொல்லிவிட்டு ஏன் திருடினாய் என்று புன்முறுவலுடன் கேட்க, வறுமை காரணமாக தன் குடும்பத்தை நடத்த முடியாமல் திண்டாடியதை அத்தொழிலாளி கூறினார். கணக்குப் பிள்ளையை அழைத்து என்ன சம்பளம் வழங்குகிறீர்கள் எனக் கேட்க ரூ. 15 என்றார். மிக்க வருத்தமுற்று இனிமேல் சம்பளம் ரூ.40 என்று உயர்த்தி களவாடிய தொழிலாளியை தண்டிக்காமல் வெகுமதி அளித்து தனது தயாளகுணத்தை காட்டியுள்ளார்.

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் தனது குருவாகிய இரத்தின செட்டியாரிடம் சென்று சந்நியாசம் வழங்க வேண்டினார். அச்சமயம், சந்நியாசம் ஆரிய மரபுக்கு உரியது என்றும் தமிழ்நாட்டுக்கு உரியது துறவு மட்டுமே. ஆகையால் நாம் கைக்கொள்ள வேண்டியது துறவறம் மட்டுமே; சந்நியாச வேடமல்ல என்று கூறி ஆசிர்வாதமளித்து அனுப்பினார் இல்லற ஞானி சாது.இரத்தின செட்டியார்.

சாது

இரத்தின செட்டியார் ஆரிய ஜனப்ரியன், ஆரிய பரிபாலினி ஆகிய இதழ்களில் ஆசிரியராக இருந்துள்ளார். ஹிந்து ட்ராக்ட் சொசைட்டி என்ற அமைப்பையும் நிறுவி பல்வேறு துண்டு பிரசுரங்களை வெளியிட்டவர்.

தமிழகத்தில் அத்வைதத்தை வளர்த்த தனிப்பெருமை தத்துவராயரில் தொடங்கி தமிழ்வழி வேதாந்தம் ஒருவாறாக பரிணமித்து, பார்ப்பனர் அல்லாதாரும் அத்வைதக் கொள்கையை தெள்ளத் தெளிவாக புரிந்துகொண்டு வேதாந்த சிரவணம் செய்துகொண்டு சாதிமத வேறுபாடுகளைக் களைந்து ஆன்மநேய ஒருமைப்பாட்டை வளர்க்கும் பெருநெறியாக அத்வைத சித்தாந்தத்தை வளர்த்த பெருமகனாக விளங்கினார் சாது. சைவ இரத்தின செட்டியார். 08.02.1901 அன்று விகிதக கைவல்யமடைந்த(முக்தியடைந்த)போது பரிதிமாற் கலைஞர் சூரியநாராயண சாஸ்திரி, 'பாவலர் விருந்து' என்ற தனது நூலில் நண்பனை இழந்தது குறித்து இரங்கற்பா பாடியுள்ளார் .தமிழகத்தில் ராமகிருஷ்ணா இயக்க வளர்ச்சிக்கு பயன் தந்த தமிழ் நூல்களை அதிகமாக வெளியிட்டவர். சிறந்த தேசாபிமானி, மதாபிமானி.வேதாந்தியாகவும் விளங்கி விதேக முக்தியடைந்த மகான் சைவ இரத்தின செட்டியார் என பேரறிஞர் மகேசகுமார் சர்மா அவர்களால் போற்றப்பட்டார். இவரது வெளியியீடுகளால் தாம் பெரும்பயன் பெற்றதாக விடுதலைப் போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா குறிப்பிட்டுள்ளார். அவரது நினைவு தினம் இன்று.

கட்டுரையாளர் குறிப்பு:

ரெங்கையா முருகன், "அனுபவங்களின் நிழல்பாதை" நூலின் ஆசிரியர்.

புதன், 8 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon