மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 19 ஏப் 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 43)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 43)

கொஞ்ச நேரம் ஒக்காந்து வகுப்பை கவனிக்கலாம் என்று தாத்தா சொன்னார். ஷமித்ரா தனியாகக் கிடந்த ஒரு சேரில் அமர்ந்து கொண்டாள். ஏசி 26இல் ஓடிக்கொண்டிருந்தது. இதமாக இருந்தது. வழக்கமான வகுப்பறை மாதிரி இல்லாமல், மாணவர்கள் இயல்பாகவும் ஜாலியாகவும் இருந்தார்கள். ஆசிரியரிடம் பயமே இல்லாமல் பழகிக்கொண்டு இருந்தது புரிந்தது.

ஒரு மாணவனுக்கு கணக்கில் சந்தேகம். இதுவரை மூன்று முறை சொல்லிக் கொடுத்துவிட்டான்.

‘சாரி, எனக்கு பேஸிக்காவே இது சுத்தமா புரியல. நீங்க திரும்பத் திரும்ப எதையோ விளக்கிட்டு இருக்கீங்க’ என்றான் சிறுவன்.

தாத்தாவின் கான்ஸப்ட் என்னவென்றால், 20 தடவை சொல்லிக் கொடுத்தும் புரியவில்லை என்றால், தைரியமாக புரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது மாணவனின் குறை அல்ல, ஆசிரியரின் போதாமை.

சொல்லிக் கொடுப்பவருக்கும் கவுன்ஸிலிங் கொடுத்திருக்கிறார் உலகளந்தான். நீங்க சொல்லிக் கொடுத்து பையன் புரியலைன்னு சொன்னான்னா, கோவப்படாதீங்க, உங்களை இன்னும் செழுமைப் படுத்தறான்னு அர்த்தம் என்று சொல்லியிருக்கிறார். உங்களுடைய டீச்சிங் ஸ்கில்லை அதிகப்படுத்தறான், உங்களை இன்னும் சிந்திக்கத் தூண்டுறான்னு அர்த்தம் என்றும் விளக்கியிருக்கிறார். புரிஞ்ச மாதிரி சும்மா மண்டையை மண்டையை ஆட்டிட்டுப் போனா, அது அவன் உங்களுக்குச் செய்யும் துரோகம் என்று எடுத்துரைத்து இருக்கிறார்.

வகுப்பு வேடிக்கையாகப் போய்க் கொண்டிருந்தது. தாத்தா எழுந்து மல்லிகேஸ்வரனை அமரச் சொல்லிவிட்டு அவர் நடத்த ஆரம்பித்தார். பொறுமையாக இந்தக் கணக்கு ஏன் தேவை? இது நம் வாழ்வில் எங்கு, எப்போது அப்ளை செய்யப்படுகிறது? இதை எப்படிப் போட்டு தீர்வு காண வேண்டும் என பொறுமையாக ஸ்டெப் பை ஸ்டெப்பாக விளக்கினார்.

‘சுத்தமா புரியல தாத்தா’ என்று மீண்டும் அந்தச் சிறுவன் கத்த வகுப்பறையே சிரித்தது. ஷமித்ராவுக்கும் சிரிப்பாக இருந்தது.

‘ஷமித்ரா, வா, நீ சொல்லிக்குடு’ என்றார் தாத்தா .

‘ஐயய்யோ, வேண்டாம், இப்போ என்னால முடியாது. முதல்ல ஒரு வாரம் நான் பிராக்டீஸ் பண்ணிக்கிறேன்’ என்றாள் ஷமித்ரா.

‘அதெல்லாம் இல்லக்கா, தாத்தாவை சும்மா கலாய்ச்சோம். எனக்கு நல்லா புரிஞ்சிடிச்சி, சும்மா வெளாட்டு காட்டினேன்’ என்றான் அந்தச் சிறுவன்.

மீண்டும் அனைவரும் புன்முறுவல் பூக்க வகுப்பு முடிந்தது.

மல்லிகேஸ்வரனும், தாத்தாவும், ஷமித்ராவும் மெல்ல நடந்து வெளியே வந்தனர். கேண்டீன் போகலாம் வாங்க என்று, தாத்தா அழைத்துக்கொண்டு போனார்.

கேண்டீனா என்று வியந்துகொண்டே ஷமித்ரா பின் தொடர்ந்தாள். நல்ல அருமையான ஏ.சி. கேண்டீன். அளவாக சமைத்து வைக்கப்பட்டிருந்தது. எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

ஷமித்ரா காஃபி மட்டும் எடுத்துக் கொண்டாள். தாத்தா கொஞ்சம் குக்கீஸை எடுத்து ஷமித்ரா பக்கம் நகர்த்தி, இதையும் சாப்பிடு என்றார்.

‘ஐ ஆம் மல்லிகேஸ்வரன். யூ கேன் கால் மீ, மல்லிகேஸ், மல்லி, மல்’ என்று விதவிதமாக ஆப்ஷன்ஸ் கொடுத்தான் மல்லிகேஸ்வரன்.

‘பார்க்க ஜென்டில்மேன் மாதிரி இருக்கான் இல்ல, ஆனா ஐயா பயங்கர டிரக் அடிக்ட்’ என்றார் தாத்தா.

லேசான திடுக்கிடலோடு நிமிர்ந்து பார்த்தாள் ஷமித்ரா.

‘ஐயா ஐ.டி. செக்யூரிட்டி எக்ஸ்பர்ட். வேலைல கில்லி. ஆனா சிகரட், தண்ணி, கஞ்சான்னு போய், அது பத்தாம இன்னும் மேல மேல போனார். டிரக் இன்ஃப்ளூயன்ஸிலேயே வேலையெல்லாம் நல்லா செய்வார். யார் கூடவும் பழக்கம் கிடையாது. வேலை, விட்டா ஃப்ளாட். டிரக்ஸ், டிரக்ஸ், டிரக்ஸ்’

‘அப்படியா?’

‘ஃபேஸ்புக்ல என்னோட பேஜை எதேச்சையா பாத்துட்டு காண்டாக்ட் பண்ணார். முதல் மீட்லயே கண்டுபிடிச்சிட்டேன். ஐயா பயங்கர டிப்ரஷன்ல, வெறுமைல இருந்தார். அப்புறம் கவுன்சிலிங் ஏற்பாடு பண்ணி, டிரீட்மெண்ட் குடுத்து யோகா, ஆன்ட்டி டிப்ரஸண்ட் எல்லாம் குடுத்து மீட்டெடுத்தோம். அதுல முக்கியமான விஷயம், இந்த குழந்தைங்ககூட பழகறதுதான். நான் அவங்களுக்கு கிளாஸ் எடுக்கல. அவங்கதான் எனக்கு டிரீட்மெண்ட் தந்தாங்க. இந்த அக்கப்போர்ல, ஐயாவோட கேர்ள் ஃபிரண்டு எப்பவோ பிச்சிக்கிட்டு போயிட்டாங்க’ என்றார் தாத்தா.

‘ஓ சாரி, இப்ப எல்லாத்தையும் சுத்தமா விட்டுட்டீங்களா’ என்றாள் ஷமித்ரா.

‘சுத்தமா விடல. பியர் மட்டும் உண்டு. அதுவும் எப்பவாச்சும். அப்ப மட்டும் சிகரட்’ என்று சொல்லி கண்ணடித்து தாத்தாவைப் பார்த்தான் மல்லி.

‘நான்தான் மொத்தமா விட வேணாம், நம்ம கண்ட்ரோல்ல இருக்கணும், மொத்தமா விட்டா, திரும்ப மொத்தமா அது பக்கம் போயிட வாய்ப்பு இருக்குன்னு சொல்லி வச்சிருக்கேன். லேகர் பியர்தான் அடிக்கச் சொல்லியிருக்கேன். ஐயா அப்பப்ப ஏமாத்திட்டு ஸ்ட்ராங் பியர் அடிக்கிறாருன்னு தகவல்’ என்று சொல்லிச் சிரித்தார் தாத்தா.

‘உங்களுக்கு பாய் ஃபிரண்டு இருக்காரா?’ என்று ஷமித்ராவை பார்த்துக் கேட்டான் மல்லி.

நாள் 1|நாள் 2|நாள் 3|நாள் 4|நாள் 5|நாள் 6|நாள் 7|நாள் 8|நாள் 9|நாள் 10|நாள் 11|நாள் 12|நாள் 13|நாள் 14|நாள் 15|நாள் 16|நாள் 17|நாள் 18|நாள் 19|நாள் 20|நாள் 21|நாள் 22|நாள் 23|நாள் 24|நாள் 25|நாள் 26|நாள் 27|நாள் 28|நாள் 29||நாள் 30|நாள் 31|நாள் 32|நாள் 33|நாள் 34|நாள் 35|நாள் 36|நாள் 37|நாள்38

|நாள் 39நாள் 40|

புதன், 19 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon