மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

தடுப்பூசியால் புற்றுநோய் வராது உயர்நீதிமன்றம் அறிவுரை!

தடுப்பூசியால் புற்றுநோய் வராது உயர்நீதிமன்றம் அறிவுரை!

நோய் எதிர்ப்பு சக்திக்காக போடப்படும் தடுப்பூசியால், புற்றுநோய் ஏற்படாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

ஈரோடு மாவட்டம், கொரம்பாளையத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (28) சுசீலா (24) தம்பதியின் மகன் அன்பரசு (6) ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது அங்கன்வாடி மையத்தில் அம்மை தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில், அம்மை ஊசி போடப்பட்ட வலது தொடையில் புற்றுநோய்க் கட்டி உருவாகியுள்ளது. சிறிய ரத்தக்கட்டுபோல் உருவாகி, நாளடைவில் புற்றுநோய்க் கட்டியாக மாறியுள்ளது. இதுகுறித்து தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கு, கடந்த மார்ச் 21ஆம் தேதி நீதிபதிகள் நாகமுத்து மற்றும் அனிதா சுமந்த் ஆகியோரது அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், குழந்தைகள் நலவாரிய ஆணையர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். மேலும் சிறுவனுக்குச் சென்னையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும், மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து அன்பரசுக்குத் தடுப்பூசி போட்டதால் புற்றுநோய்க் கட்டி ஏற்படவில்லை என்று தமிழக அரசு மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தது. தமிழக அரசு தாக்கல் செய்த மருத்துவ அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை மீண்டும் நேற்று மே 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது எய்ம்ஸ், டாடா நினைவு மருத்துவமனை மருத்துவர்கள் இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அதில் தடுப்பூசியால் புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது

இதை விசாரித்த நீதிபதிகள், "உரிய விசாரணை இல்லாமல் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தடுப்பூசியால் புற்றுநோய் ஏற்படாது. தடுப்பூசி போட்டால் புற்றுநோய் ஏற்படாது என்பது குறித்து மக்களிடம் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்

தடுப்பூசி போடுவதன் மூலம் குழந்தைகளைப் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க முடியும் என்று உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன" என்று கூறி இவ்வழக்கை முடித்து வைத்தனர்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon