மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

படம் நன்றாக இருந்தா உடனே விமர்சனம் எழுதுங்க - உதயநிதி கெஞ்சல்!

படம் நன்றாக இருந்தா  உடனே விமர்சனம் எழுதுங்க - உதயநிதி கெஞ்சல்!

உதயநிதி ஸ்டாலின், ரெஜினா, சூரி, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சரவணன் இருக்க பயமேன்'. எழில் இயக்கியுள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். மே 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.

நேற்று (3/5/2017) இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் லிவிங்ஸ்டன் பேசும்போது, "எல்லாப் படங்களையும் நான் திரையரங்கில்தான் பார்க்கிறேன். படம் நன்றாக இருந்தால் பத்து தடவை வரை பார்ப்பேன். மற்றவர்களைப் பார்க்க பரிந்துரை செய்வேன். நல்லா இல்லைன்னா திட்டிக்கொண்டே வருவேன். தியேட்டர் டிக்கெட், கேண்டீன் விலை எல்லாம் குறைத்தால் நிறைய மக்கள் படம் பார்க்க வருவார்கள்" என்று பேசினார்.

சூரி பேசும் போது "இதுநாள் வரை பரோட்டா சூரியாக எனக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்திருந்தார் சுசீந்திரன். அதை உடைத்து எனக்கு 'புஷ்பா புருஷன்' என்ற புதிய அடையாளத்தைக் கொடுத்தவர் சுசீந்திரனின் குரு எழில். என் மனைவிதான் அந்த அடையாளத்தால் ரொம்ப வருத்தப்படுகிறார். உதயநிதி நல்ல மனசுக்காரர். என் அப்பா இறந்தபோது பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்துவிட்டு, மதுரை வரை வந்து என் அப்பாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். அந்த அளவு நட்புக்கு மரியாதை கொடுக்கக் கூடியவர்" என்றார்.

"10 வருடங்களுக்கு முன்பு தமிழ்ப் படங்களுக்கு வரிவிலக்கு சட்டத்தைக் கொண்டு வந்த கலைஞருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாகுபலி மாதிரி படங்கள் ஏன் தமிழ் நாட்டில் எடுக்கப்படுவதில்லை? என ஆதங்கமாக இருக்கிறது. நாட்டில் விவசாயிகள் பிரச்சனையை பிரதமர் மோடி கண்டு கொள்ளவில்லை. ஆனால் சத்குரு விழாவில் கலந்து கொள்கிறார். முடியும் போது ஒலிக்க வேண்டிய தேசிய கீதத்தைத் திரையரங்குகளில் படம் ஆரம்பிக்கும் முன்னர் போடுகிறார்கள். அதுவும் தமிழில் கூடத் தேசிய கீதத்திற்கு அறிவிப்பு இல்லை. இதை எந்த ஒரு மாநில கட்சியும் கண்டு கொள்ளவில்லை" என்று பேசினார் மன்சூர் அலிகான்.

"இது தான் கதையா? என்ற ரீதியில் ஒரு மெல்லிய கதையை சொல்வார் இயக்குநர் எழில். ஆனால், படம் பார்க்கும்போது மிகவும் பிரமாதமான படமாக எடுத்து வைத்திருப்பார். அப்படி நான் நினைத்த படங்களும் சூப்பர் ஹிட். அந்த மாதிரி இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும். என் கைப்பேசியை எடுத்துப் பார்த்தால் என் மனைவியை விட யுகபாரதியின் மொபைல் நம்பருக்குத் தான் அதிகம் பேசியிருப்பேன். அவருடன் தான் அதிக பாடல்கள் பணியாற்றியுள்ளேன், அது ஒரு நல்ல அனுபவம்" என்றார் இமான்.

இயக்குநர் எழில் பேசும்போது, "இமான் ஒரு உணவுப்பிரியர். பாடல் பதிவுக்கு முன்பு அவருக்குப் பிரியாணி ரெடி பண்ணிருவேன். இமானும், யுகபாரதியும் சேர்ந்து விட்டால் சூப்பர் ஹிட் பாடல்கள் வந்து விடும். நம் முன்னோடி இயக்குநர்கள் எல்லோரும் மிகவும் திறமையானவர்கள், புத்திசாலிகள். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு சிறப்பான அனுபவம். இப்போது இருப்பவர்கள் சினிமா வரலாற்றை, நம் மூத்த இயக்குநர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். அது தவறு, மாற வேண்டும்" என்று பேசினார்.

உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "எம்புட்டு இருக்கிறது ஆசை பாட்டைப் பத்தி எல்லோரும் பேசுனாங்க. அந்தப் பாட்டு அவ்ளோ பெரிய அளவு பேசப்படறதுக்கு முக்கிய காரணம் ரெஜினா தான். 'கெளரவ் படம்', 'பொதுவாக எம்மனசு தங்கம்' தொடர்ந்து மூன்றாவதாக ஒப்பந்தமான படம் தான் 'சரவணன் இருக்க பயமேன்'. ஆனால், இப்படம்தான் முதலில் வெளியாகவுள்ளது. காரணம் எழில் சாரின் வேகம். இந்தப் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் செய்யுங்கள். நன்றாக இல்லை என்றால் மூன்று நாள்கள் கழித்து எழுதுங்கள்" என்று பேசினார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon