மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

கூட்டணி தொடரும்: ஜி.கே. வாசன்!

கூட்டணி தொடரும்: ஜி.கே. வாசன்!

‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட ஓ.பி.எஸ். அணியுடனான கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும்’ என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமாகா சென்னை பகுதி மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தியாகராய நகரில் நேற்று (3.5.2017) நடைபெற்றது. கட்சிப் பணிகள், உள்ளாட்சித் தேர்தல், மக்கள் பிரச்னைகளுக்குப் போராட்டம் நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:

“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணியுடன் தமாகா கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணி சுமுகமான முறையில் தொடர்ந்து வருகிறது. நீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதற்காக மத்திய அரசிடம் போராட தமிழக அரசு தயங்கி வருகிறது. டெல்லியில் 40 நாள்கள் விவசாயிகள் போராடியும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் பெறப்பட்ட விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொந்தரவுகள் தரப்படுகின்றன. இந்நிலை தொடர்ந்தால் தமாகா போராட்டம் நடத்தும்” என்று ஜி.கே.வாசன் கூறினார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon