மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

மத்திய அரசுடன் இணக்கம் காட்டும் மாநில அரசு: மு.க.ஸ்டாலின்!

மத்திய அரசுடன் இணக்கம் காட்டும் மாநில அரசு: மு.க.ஸ்டாலின்!

‘மத்திய அரசுடன் உள்ள இணக்கத்தைப் பயன்படுத்தி மாநிலத்துக்குத் தேவையான நலத்திட்டங்களைப் பெற தமிழக முதல்வர் முன்வர வேண்டும்’ என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் மே 3 ஆம் தேதி புதன்கிழமை (நேற்று) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்று இருக்கிறது. அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள்கள் என்ன என்பது பற்றியோ அல்லது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தோ செய்திக் குறிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. முதல்வராக மு.கருணாநிதி அவர்கள் இருந்தபோது நடந்த அமைச்சரவை கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டு வந்துள்ளது. அமைச்சரவை செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்.

ஆனாலும், அந்த அமைச்சரவை கூட்டத்தில் ‘மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருப்பதால் பொதுக்கூட்டங்களில் மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று முதல்வர் கேட்டுக்கொண்டதாக செய்தி வெளியாகியிருக்கிறது’. இந்தச் சுமுகமான உறவைப் பயன்படுத்தி மாநிலத்துக்குத் தேவையான திட்டங்களைப் பெற்றிருக்கிறதா எடப்பாடி தலைமையிலான அரசு என்பதுதான் எனது கேள்வி. மருத்துவர்கள் ஆகும் கனவுகளுடன் இருக்கும் மாணவர்களின் லட்சியத்தைச் சீர்குலைக்கும் வகையில் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு கூறி வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் இந்தத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளித்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு இணக்கமாக இருக்கும் மத்திய அரசிடமிருந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலை ஏன் இதுவரை பெற முடியவில்லை?

இணக்கமான, மத்திய அரசுடன் பேசி விவசாயிகளுக்கான பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய முடியவில்லை. இலங்கை பிடித்து வைத்துள்ள படகுகளைப் பேசித் திரும்ப பெற முடியவில்லை. எனவே, மத்திய அரசிடம் இணக்கம் என்பது பாஜக அரசின் வருமான வரித்துறை சோதனைகளும், அமலாக்கப் பிரிவு சோதனைகளையும் சந்திக்க வேண்டி வரும் என்பதால்தானே தவிர மக்களுக்கானது அல்ல.

இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து செம்மொழியாம் தமிழ் மொழியைப் புறக்கணிக்காதீர்கள் என்று ஏன் இணக்கமான மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க முடியவில்லை? அடுத்தடுத்து தொடரும் விவசாயிகள் தற்கொலைகள் குறித்து உச்சநீதிமன்றமே கவலை தெரிவித்தும், இணக்கமான மத்திய அரசை வற்புறுத்தி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ஏன் தள்ளுபடி செய்ய வைக்க முடியவில்லை?

ஆகவே, முதல்வர் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது உண்மையென்றால் ‘நீட்’ தேர்வு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று கிராமப்புற மருத்துவ மாணவர்கள், நகர்ப்புற ஏழை மாணவர்கள் மற்றும் போராடும் மருத்துவர்கள் ஆகியோரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மே 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (நேற்று) ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்தச் சந்திப்பையும் மத்திய அரசுடன் இருக்கும் சுமுகமான உறவையும் பயன்படுத்தி விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், ‘இணக்கமாக இருக்கிறோம்’ என்று கூறி சுயநலன்களை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளாமல், மத்திய அரசிடம் நிலுவையில் இருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு தமிழக மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆக்கபூர்வமான முறையில் செயல்பட வேண்டும்”என்று ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon