மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: பிரேமலதா!

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: பிரேமலதா!

தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சி விரைவில் கவிழ்ந்து ஜனாதிபதி ஆட்சி ஏற்படுவது உறுதி என்றும், அதையொட்டி பொதுத் தேர்தலும் நடைபெறும் என்று பிரேமலதா கூறியுள்ளார்.

தேமுதிக மகளிரணித் தலைவர் பிரேமலதா நேற்று மே 3ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக-வில் உள்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. கட்சி மற்றும் ஆட்சிப் பதவியை காப்பாற்றிக் கொள்வதிலேயே அதிமுக எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் குறியாக உள்ளனர். மேலும், முதல்வர் பதவி யாருக்கு? பொதுச் செயலாளர் பதவி யாருக்கு? என்று அவர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இரண்டாக உடைந்த அதிமுக இனி ஒருக்காலும் இணையாது. இணைவதற்கான வாய்ப்பும் இல்லை. இரட்டை இலை சின்னம் குறித்து இரு அணியினரும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ள வேளையில் அவர்கள் இருவருக்கும் இரட்டை இலை சின்னம் நிச்சயமாகக் கிடைக்காது. இதனால் அதிமுக இனி அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வர முடியாது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று அவரது சமாதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக தியானம் செய்த பிறகு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஞானம் பிறந்துள்ளது. 75 நாள்களாக ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, அவருக்கு ஞானம் வரவில்லை. முதல்வர் பதவி பறிபோன பிறகுதான் ஞானம் பிறந்ததுபோல், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை தேவை என்கிறார். மணல் கொள்ளை கும்பலிடம் இவருக்கிருந்த தொடர்பை மறைக்கும் வகையில் பொதுமக்களை நேரில் சந்திக்கச் சுற்றுப்பயணம் என்று அறிவித்திருப்பது முழுமையான நாடகமாகும்.

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வரும். அதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடந்த சோதனையின் முடிவு என்னாச்சு? அவரது வீட்டில் சிக்கிய சொத்துக்குவிப்பு பத்திரங்கள் பற்றிய உண்மை நிலையை மக்களுக்குப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மேலும், ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கார் டிரைவர் மரணம் போன்றவற்றில் மர்மம் உள்ளது. இதில் காவல்துறை டி.ஜி.பி. விசாரணை சரியான பாதையில்தான் போகிறது என்கிறார். ஆனால், அந்தப் பங்களாவில் என்ன கொள்ளை போனது? எதற்காகக் கொலை நடந்தது? வெறும் கைக்கடிகாரம் மற்றும் கண்ணாடி பொருள்கள் மட்டும்தான் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவிப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

நீட் தேர்வு மூலம் தரமான கல்வி கிடைக்கும் என்று நாங்கள் ஏற்கெனவே கூறி வருகிறோம். நீட் தேர்வை அரசியலாக்க விரும்பவில்லை. கடந்த 2011, 2016இல் திமுக ஆட்சிக்கு வரமுடியாமல் தடுத்தது தேமுதிக-தான். தற்போதைய ஆட்சி தைரியமில்லாத ஆட்சி. இது, விரைவில் கவிழ்ந்து தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வரும். அடுத்த ஜுன் மாதம் ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு தினமும் முக்கிய செய்தி வரும்” என்று அவர் கூறினார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon