மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

சிதைத்தது பாகிஸ்தான் ராணுவம்தான்: கோபால் பக்லே!

சிதைத்தது பாகிஸ்தான் ராணுவம்தான்: கோபால் பக்லே!

‘பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டு இந்திய வீரர்களின் உடலை சிதைத்துள்ளது. அதற்கு போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது’ என்று கூறியிருக்கிறார் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பக்லே. காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகாதி எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென ராக்கெட்டுகளை வீசியும் தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இந்திய பகுதிக்குள் சுமார் 250 மீட்டர் தூரம் வரை உள்ளே நுழைந்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், இந்திய ராணுவ இளநிலை அதிகாரி பரம்ஜீத் சிங், எல்லை பாதுகாப்பு படையின் தலைமை காவலர் பிரேம் சிங் ஆகியோர் உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்களை கைப்பற்றிய பாகிஸ்தான் ராணுவத்தினர் இருவரின் தலையை துண்டித்ததுடன், உடல்களை சிதைத்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்குத் தக்க பாடம் புகட்டுவோம் என்று இந்திய ராணுவமும் அறிவித்து உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்தச் செயலை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “இந்தியாவின் பொறுமையை பாகிஸ்தான் சோதித்துக்கொண்டிருக்கிறது. அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும்”என்று கூறியிருக்கிறார். இதையடுத்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேரில் அழைத்த இந்திய வெளியுறவுத்துறை, அவரிடம் இந்தியாவின் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அத்துடன், இந்திய வீரர்களின் உடல்களைச் சிதைத்து காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்ட பாகிஸ்தான் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தாக்குதல் நடந்த இடத்தில் படிந்திருந்த ரத்த மாதிரியை சோதனை செய்து பார்த்ததில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எல்லை தாண்டி வந்து இந்திய வீரர்களை கொன்றுவிட்டு தங்கள் பகுதிக்கு திரும்பியது நிரூபணமாகியிருப்பதாகவும் அப்துல் பாசித்திடம் இந்தியா தெரிவித்துள்ளது. இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பக்லே கூறுகையில், “கிருஷ்ணகாதியில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்தது என்பதற்கு எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. இந்த மனிதாபிமானமற்றச் செயலுக்கு காரணமான ராணுவ அதிகாரிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாங்கள் பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டு உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon