மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

அமீரின் சந்தனதேவனைப் பாதித்த ‘கடம்பன்’!

அமீரின் சந்தனதேவனைப் பாதித்த ‘கடம்பன்’!

திரைப்படத்தில் பணம் சம்பாதித்து, அதை திரைப்படத்திலேயே செலவு செய்யும் நடிகர்கள் பலர் இருக்கின்றனர். கமல், பிரகாஷ்ராஜ் என இந்த வரிசையில் ஆர்யாவும் இணைந்தார். இதில் பல பேர் இருப்பினும் இவர்கள் தயாரித்த படங்கள் பல வெற்றியும் சில தோல்வியும் அடைந்துள்ளது. அதில் ஆர்யா தயாரித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததே தற்போது பிரச்னை. இருந்தாலும் தனக்கென்று கொஞ்சம் பிசினஸும், நல்ல சம்பளம் தரத் தயாரிப்பாளர்களும் இருப்பதுதான் நல்ல செய்தி. ‘கடம்பன்’திரைப்படம், தெலுங்கு திரையுலகத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றதன் அடிப்படையில்தான் கேத்ரின் தெரசாவைக் கொண்டு வந்திருந்தனர். ஆர்.பி.சௌத்ரிக்கும் தெலுங்கில் நல்ல பெயர் இருந்ததால் ரூ.14 கோடியை பிரச்னையின்றி செலவு செய்தார். ஆனால், ‘கடம்பன்’ வசூலித்தது எவ்வளவு?

ஓப்பனிங் வீக்-எண்ட் வரை ஒரு நாளுக்கு 171 காட்சிகள் எனச் சென்னையில் மட்டும் ரூ.48 லட்சத்தை வசூல் செய்தது. மொத்தமாக தமிழகம் முழுவதும் 4 கோடி ரூபாய் பணத்தை ரிட்டர்ன் கொண்டு வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு நாளும் தோராயமாக ரூ.70 முதல் 75 லட்சங்கள் வரை வசூல் செய்திருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் வருகிற வெள்ளிக்கிழமைக்கு முன்பு செலவு செய்த 14 கோடி ரூபாயைக் கடம்பன் திரும்ப எடுப்பது சந்தேகம்தான். அதன்பிறகு தியேட்டர்களை புதிய படங்கள் ஆட்கொள்ளும்.

ஆர்யா இந்தப் படத்துக்கு நிறைய உழைத்திருக்கிறார் என்பது அவரது தோற்றத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது. நடிப்பில் மட்டுமல்ல, இதுவரை சம்பாதித்தப் பணத்தையும் இதில் முதலீடு செய்திருக்கிறார். ஆம், கடம்பன் திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்தது ஆர்யாவின் The Show People நிறுவனம். கடம்பன் திரைப்படத்தின் டிரெய்லரிலேயே இதைக் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால், படத்தை ரிலீஸ் செய்த பணம் முழுவதுமாக ஆர்யாவுக்கும் வந்து சேரவில்லை. இதற்கு முக்கியக் காரணம்ம் சென்னை போன்ற (இதுவரை ஆர்யா படங்களுக்கு அதிகம் சம்பாதித்துக் கொடுத்த) நகரங்களில் தியேட்டரைப் பிடித்தாரே தவிர, படம் பேசும் பிரச்னையால் பாதித்திருக்கும் மாவட்டங்களில் பலவற்றை விட்டுவிட்டார்கள். ‘கடம்பன்’படத்துடன் ரிலீஸான ‘பவர் பாண்டி’ திரைப்படம் அந்தத் தியேட்டர்களை பிடித்துக்கொண்டது. ஒரு நடிகராகத் தமிழ் சினிமாவில் வெற்றிபெற 10 வருடங்கள் தேவைப்பட்ட ஆர்யா, தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் மூன்று வருடங்களையே கடந்த கன்னித் தயாரிப்பாளராக இருப்பதால், விரைவில் சரியான வகையில் தனது திரைப்படங்களைத் தயாரித்து விநியோகம் செய்து வெற்றி பெற வேண்டும். தற்போது கோலிவுட்டில் நிலவும் ஒரு டிரெண்ட் என்னவென்றால், தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கும் நடிகர்கள் சம்பளத்தில் சிறு தொகையைக் குறைத்துக்கொண்டு திரைப்படத்தின் உரிமையை வாங்கிக்கொள்வார்கள் அல்லது குறிப்பிட்ட இடங்களின் விநியோக உரிமையை வாங்கிக்கொள்வார்கள். அந்த மாதிரி ‘கடம்பன்’ படத்துக்கான தமிழ் சேட்டிலைட் உரிமையை ஆர்யாவும், தெலுங்கு சேட்டிலைட் உரிமையை ஆர்.பி.சௌத்ரியும் பிரித்துக்கொண்டார்கள். ‘கடம்பன்’ படத்தை எடுத்தவகையில் ஆர்.பி.சௌத்ரிக்குக் கிடைத்திருக்கும் ஒரே லாபம் தெலுங்கு சேட்டிலைட் உரிமை மட்டும்தான்.

இப்படிப் பல சோதனைகளுக்கு மத்தியில் ஒரு புதிய முயற்சியில் இறங்கினார் அமீர். அதுதான் ’சந்தனத்தேவன். அமீர்தான் இப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் என்றாலும், தோள் கொடுக்க தன் பேங்க் பேலன்ஸ்சையும் இறக்க முடிவெடுத்தார் ஆர்யா. பார்ட்னர்ஷிப் முறையில் பணம் தர முன் வந்தாலும், வெறும் நடிகன் என்ற பெயர் மட்டும் போதும் என்று இப்படத்தைப் பொறுத்தவரை முடிவெடுத்தும் இருந்தார் ஆர்யா. முதல் ஷெட்யூலுக்கு ஆர்யாவின் பணம்தான் செலவு செய்வதாக இருந்ததாம். ஆனால் ‘கடம்பன்’திரைப்படத்தில் ஏற்பட்ட நஷ்டம், பெரும் கடன் தோளில் ஏறிவிட்டது ஆர்யாவுக்கு. அதன் காரணமாகவே ‘சந்தனதேவன்’ படத்தின் முதல் ஷெட்யூலுக்கு அவர் தருவதாக இருந்த பணம், தற்போது யார் பாக்கெட்டில் இருக்கிறது என்பதே தெரியாமல் சைலண்ட் ஆகிவிட்டார் ஆர்யா. எல்லா பைனான்ஸ் குழப்பங்களும் சரியான பின்புதான் ’சந்தனத்தேவன்’ படப்பிடிப்பு ஆரம்பம் என்கிறார்கள் படக்குழுவுக்கு நெருங்கியவர்கள்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon