மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

ஹாலிவுட்டில் சீன ஆதிக்கம்: கழுகை அச்சுறுத்தும் டிராகன்! - ஸ்பெஷல் ஸ்டோரி

ஹாலிவுட்டில் சீன ஆதிக்கம்: கழுகை அச்சுறுத்தும் டிராகன்! - ஸ்பெஷல் ஸ்டோரி

சீனா, அருணாச்சல பிரதேசத்தின் ஐந்து ஊர்களுக்குப் பெயரை மாற்றியிருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா? அதன் படை பலம் இந்தியாவைவிட உயர்ந்திருப்பதுதான். இப்படியே போனால் இந்தியாவின் பல பகுதிகளை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என ஒரு டீம் பேசுகிறது. இன்னொரு டீம், மோடி என்ன சாதாரணமானவரா? சீனாவுக்குப் பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கிறார். இந்தியர்களின் போர்த்திறமைக்கு முன்பு சீனா நிற்க முடியாது. உலக நாடுகளும் விடாது எனப் பேசுகிறார்கள். உள்ளூர் ஆட்டக்காரர்களை வெளியூர் ஆட்டக்காரர்கள் மதிக்க வேண்டியது உண்மைதான் என்றாலும், அவர்களுக்குள் நடைபெறும் இந்த வாட்ஸ்அப் வதந்திகளைப் பற்றி பேசாமல் சீனாவின் பொருளாதாரப் படையெடுப்பைப் பற்றி பார்ப்போம்.

மூன்றாம் உலகப் போர் என்ற ஒன்று தொடங்கினால் அது ஆயுத யுத்தமாக இருக்காது. பொருளாதார யுத்தமாகத்தான் இருக்கும் என உலகின் பல தலைவர்களும் சொல்லிவருகின்றனர். அது, எத்தனை உண்மை என சீனா உணர்த்தியிருக்கிறது. இன்றைய நிலவரப்படி, அமெரிக்காவின் ஹாலிவுட்டை சீனா அப்படியே விழுங்கிவிட்டது. சீனா இல்லாமல் ஹாலிவுட் இயங்காது அல்லது சீனாவைக் கருத்தில் கொள்ளாமல் ஹாலிவுட்டின் எந்தவொரு படைப்பும் தொடங்காது என்பதுதான் தற்போதைய ரியாலிட்டி. சீனாவின் 2016ஆம் வருட திரைப்பட வசூல் தொகை 6.6 பில்லியன் டாலர்கள். அமெரிக்காவின் வசூல் 11.4 பில்லியன் டாலர்கள் என்பதால் இரண்டாவது இடத்தில் இருக்கிறது சீனா. இரண்டு நாடுகளுக்குமிடையே இருக்கும் 4.8 பில்லியன் டாலர்கள் எந்தவிதத்திலும் அமெரிக்காவைக் கவலைப்படாத நிலைக்குக் கொண்டு செல்லவில்லை. ஏனென்றால், 2011 முதல் எவ்வித மாற்றத்தையும் காணாத அமெரிக்காவின் டிக்கெட் விலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், சீனாவின் டிக்கெட் விலை மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. சீனத் திரையரங்குகளின் கவுன்ட்டர்களில் நேராகச் சென்று டிக்கெட் வாங்கினால் அதன் விலை (இந்திய விலையில்) 800 ரூபாய்க்கும் மேலாக இருக்கும். ஆனால், தனியார் நிறுவனங்களின் அப்ளிகேஷன்கள் மூலம் வாங்கினால் குறைந்தபட்சம் 300 ரூபாயிலிருந்து கிடைக்கும். இதற்கு திரையரங்குகளுடன் அந்த நிறுவனங்கள் சில ஒப்பந்தங்களை வைத்துக்கொள்வார்கள். இதன்மூலம் தனியார் நிறுவனங்களும் நேராக நுகர்வோரை சென்றடைகின்றன. அதேசமயம், திரையரங்குகளுக்கும் பணம் வருகிறது. மக்களுக்கும் குறைந்த விலையில் டிக்கெட் கிடைக்கிறது. சினிமாவும் வளர்கிறது.

உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், சமீபத்தில் வெளியான Fate Of the Furious திரைப்படத்தைச் சொல்லலாம். ஹாலிவுட்டில் சம்பாதித்ததைவிட சீனாவில் இந்த அமெரிக்கத் திரைப்படம் அதிகம் சம்பாதித்திருக்கிறது. மே 1ஆம் தேதி நிலவரப்படி, உலகம் முழுவதிலும் 1 பில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ள இந்தத் திரைப்படம், சீனாவில் மட்டும் 361 மில்லியன் டாலர்களை வசூல் செய்திருக்கிறது. அதாவது, மொத்த வசூலின் மூன்றில் ஒரு பாகத்தை சீனா வசூல் செய்து கொடுத்திருக்கிறது.

ஹாலிவுட்டின் பல படங்கள் சீனாவை முற்றுகையிடுவது இன்று நடைபெறுவதல்ல; பல ஆண்டுகளாகவே நடைபெற்றுவரும் ஒன்றுதான். ஆனால், சீனா விழித்துக்கொண்டது Kung Fu Panda திரைப்படத்தில்தான். Panda கரடி சீனாவின் தேசிய விலங்குகளில் ஒன்று. அந்த Pandaவை பெருமைப்படுத்துவது சீனாவின் முக்கியக் கடமைகளில் ஒன்று. ஆனால் அந்தப் பெருமையை Kung Fu Panda படத்தை உருவாக்கியதன் மூலம் தாங்கி நிற்பது அமெரிக்காவின் DreamWorks Animation ஸ்டூடியோ. அதிலும் அந்தத் திரைப்படம் சீனாவிலேயே சூப்பர் ஹிட் ஆனது. Kung Fu Panda படம், உலகம் முழுக்க 2008ஆம் ஆண்டில் வெளியாகி 600 மில்லியன் டாலர்களை வசூல் செய்தபோது திகைத்துப் போனது சீனா. நமது கலாசாரத்தை, நமது தற்காப்புக் கலையை, நமது தேசிய விலங்கை வைத்து ஓர் அமெரிக்க நிறுவனம் எடுத்த திரைப்படம் சீனாவில் இத்தனை பெரிய ஹிட் ஆகிறது. இதை ஏன் நாம் செய்யவில்லை என நினைத்து, 2008ஆம் ஆண்டு சீனாவின் பீஜிங் மாநகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது, சீனாவின் அடுத்த முதலீடுகள் அந்நாட்டின் கிராமங்களை நவீனமயமாக்குவது என அறிவித்தனர். விளைநிலங்கள், மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களாக மாறின. மிடில் கிளாஸ் மக்கள் வெகுவாக அந்தப் புதிய தியேட்டர்களின் நாற்காலிகளை நிரப்பினார்கள். சீனாவின் புதிய ஒரு வாரிசு கொள்கையின் மூலம் வீடுகளில் தனித்துவிடப்பட்ட குடும்பத்துக்கு வெளியே செல்லக் காரணங்கள் தேவைப்பட்டன. அந்தக் காரணத்தைப் புதிய தியேட்டர்கள் தாங்கி நின்றன. 2008லிருந்து இப்போது நடைபெறுவது 10ஆவது ஆண்டு. இந்த 10 ஆண்டுகளில் ஹாலிவுட்டை மிரட்டத் தொடங்கிவிட்டது சீனாவின் திரைத்துறை. அதற்கு அவர்கள் செய்த முயற்சிகள் மிகவும் அடிப்படையானவை. ஆனால், பலமானவை.

சீன தயாரிப்பு நிறுவனங்கள், அமெரிக்க தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள். சீனாவைப் பற்றி அறிந்த அமெரிக்கர்களை திரைக்கதைக்கு அமர்த்துவதைவிட அவற்றை முழுமையாக அறிந்த சீனர்கள் குறைந்த சம்பளத்துக்குக் கிடைத்தனர். அதனால் திரைக்கதைக்குத் தேவையான ஒவ்வொரு தகவலும் மிகத் தெளிவாகக் கிடைத்தன. இப்படி ஹாலிவுட்டின் ஒவ்வொரு தொழில் ரகசியத்தையும் அங்கு வேலைக்குச் சேர்ந்து ஒவ்வொன்றாக கற்றுக்கொண்ட சீனர்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி Monster Hunt போன்ற திரைப்படங்களின் வெற்றியில் பிரதிபலித்தது. வெறும் 56 மில்லியன் டாலரில் உருவான Monster Hunt திரைப்படம் 385 மில்லியன் டாலர்களை வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, பல வசூல் சாதனைகளை சீனாவில் முறியடித்தது. இந்தத் திரைப்படத்தின் வெற்றிதான் அடுத்தடுத்த வருடங்களில் The Mermaid (2016), The Great Wall (2016) போன்ற படங்களை எடுக்க வைத்தது. The Mermaid திரைப்படம் 61 மில்லியன் டாலர்களில் உருவாகி, 550 மில்லியன் டாலர்களை வசூலித்தது. ஆனால், அதிக பணம் செலவு செய்து அமெரிக்க வியாபாரத்துக்குமாகச் சேர்த்து Matt Damon போன்ற ஹாலிவுட் நடிகர்களை வைத்து எடுத்த The Great Wall திரைப்படம் 150 மில்லியன் டாலர்களில் உருவாகி 300 மில்லியன் டாலர்களை மட்டுமே திரும்ப எடுத்தது. சீனா திரைத்துறையில் வளர்ந்துவிட்ட நாடாக இருந்தாலும் இதுபோன்ற சில தவறுகளை செய்தது. அப்படி இருந்தாலும், சீனாவை நம்பி ஹாலிவுட் மாறிவிட்டதை Fate Of The Furious போன்ற திரைப்படங்கள் காட்டின.

Fast And The Furious திரைப்படம் ஆரம்பகாலத்திலேயே சீனாவில் முக்கிய இடத்தைப் பிடித்தது. அந்த திரைப்படத் தொடரின் மூன்றாவது பாகத்தை சீனாவின் டோக்கியோ நகரத்தை மையமாக வைத்து எடுத்து Fast And The Furious அமெரிக்க நிறுவனத்தின் புராடக்ட் என்பதை மறக்கடித்தார்கள். Transformers போன்ற உலகளவில் சாதனை படைத்த திரைப்படங்களும் தங்களது கதையில் சீனாவை அடிப்படையாகக் கொண்ட கேரக்டர்கள் மற்றும் ரோபோர்ட்களை வைத்து எடுத்தனர். Transformers: Age of Extinction திரைப்படத்தில் முக்கால்வாசி திரைப்படம் சீன நகரங்களில் இடம்பெறும். Drift என்ற Autobot சீனர்களின் Knight எனப்படும் பாதுகாவலர்களின் வடிவத்தில் இருக்கும். இப்படி சீனாவை முக்கியக்களமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் அதிகமாக அதிகமாக ஹாலிவுட்டின் மிகப்பெரிய படைப்பாளிகள் மற்றும் வியாபாரிகள் சீனாவை நோக்கிச் சென்றனர். 10 வருடங்களுக்கு முன்பு சீனாவைப் பற்றி நாங்கள் யோசித்ததுகூட இல்லை. ஆனால், இப்போது சீனா இல்லாமல் ஹாலிவுட்டே இல்லை என்ற நிலை வந்துவிட்டது என்று Paramount Picturesஇன் முன்னாள் தலைமை தயாரிப்பு அதிகாரி ஆடம் குட்மேன் தெரிவித்திருக்கிறார். இவர், சமீபத்தில் சீனாவின் LeEco நிறுவனம் தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநராக பதவியேற்றவர்.

ஹாலிவுட்டின் உதவியின்றி சீனாவின் இத்தனை பெரிய வளர்ச்சி சாத்தியமாகியிருக்க முடியாது என்பதை இன்று சீனாவின் பின்பு செல்லும் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அமெரிக்காவின் நூறு வருட சினிமா அனுபவத்தின் ஒவ்வொரு கற்களையும் படித்து அவற்றைத் தங்களது அடிப்படைகளாக அப்படியே வைத்துக்கொண்டு, தங்களுக்கான படங்களை எடுப்பதில் சீனா முனைப்போடு இருக்கிறது என்று சீனாவின் கலாசார மற்றும் பொழுதுபோக்கு அமைப்பின் நிதியில் இயங்கும் SK Global Filmsஇன் இயக்குநர் ஜான் பெனோட்டி திட்டவட்டமாகக் கூறுகிறார். அது எப்படி அமெரிக்காவின் அடிப்படையைக் கொண்டு சீனா இயங்குகிறது?

ஹாலிவுட்டின் அடிப்படை என்பது ஹீரோயிஸம், ரொமான்ஸ், அட்வென்ச்சர் ஆகியவற்றை மையப்படுத்தியது. இவை மூன்றும் கலந்திருக்கும் திரைப்படங்கள் வசூலில் சாதனை படைப்பதாகவும், தனித்தனியாக முழுநீளப் படமாக உருவாகுபவை உலக விருதுகளைப் பெறுவதில் சாதனைகள் படைப்பதாகவும் இருக்கின்றன. சில சமயங்களில், இரண்டு விதங்களிலும் வெற்றி பெறக்கூடிய திரைப்படங்கள் உருவாகும். ஆனால், சீனாவின் டார்கெட் வசூல் மட்டும்தான் என்பதால் இந்த ஹீரோயிஸம், ரொமான்ஸ், அட்வென்ச்சர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவற்றைப் பேசும் கதாபாத்திரங்களை அசாதாரணமானவர்களாகக் காட்டி சூப்பர் ஹீரோ படங்களை எடுத்து வருகின்றனர். இப்போது மார்வெல் மற்றும் DC காமிக்ஸ் ஆகியவை எப்படி தங்களது சூப்பர் ஹீரோக்களின் படங்களை தனித்தனியாக எடுத்து, பிறகு அவெஞ்சர்ஸ் என்ற பெயரில் ஒரே படமாக எடுக்கிறார்களோ அப்படி, தங்களது நாட்டின் தனிப்பட்ட சூப்பர் ஹீரோக்களையும் உலக அரங்கில் வைக்க வேண்டும் என்பதுதான் இவர்களது ஒரே டார்கெட்டாக இருக்கிறது. இந்தப் படங்கள் தோற்றுவிடாமல் இருக்க தங்களது நாட்டில் சினிமாவின் வளம் உயர வேண்டும். சீனப்படம் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஓங்கி நிற்க வேண்டும். அதை முதலில் செய்வதற்காகத்தான் நிலங்களை அழித்து சினிமா தியேட்டர்களை கட்டச் சொன்னார்கள். இப்போது தியேட்டர்கள் ரெடி, சினிமா வேண்டுமல்லவா? அதற்கான தயாரிப்பு 2014இல் தொடங்கியது.

மூன்று வருடங்களில் அப்படி என்ன சாதனைகளை செய்தது சீனா? ஹாலிவுட் எப்படி வியந்துபோய் நிற்கிறது? நாளை(05.05.17) காலை 7 மணி அப்டேட்டில் தொடரும்...

குறிப்பு: WallStreet Journal-இல் Erich Schwartzel எழுதிய ஹாலிவுட்டின் புதிய ஸ்கிரிப்ட் என்ற கட்டுரையிலிருந்து தரவுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

- சிவா

புதன், 3 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon