மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

2,000 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு: அமைச்சர் வலியுறுத்தல்!

2,000 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு: அமைச்சர் வலியுறுத்தல்!

‘கூடங்குளம் 3 மற்றும் 4ஆவது அணு உலையில் உற்பத்தியாகும் மின்சாரத்தைத் தமிழகத்துக்கே வழங்க வேண்டும்’ என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுரங்கத் துறையின் மாநில மற்றும் யூனியன் பிரதேச அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று மே 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்துகொண்டு பேசியதாவது: “ஜெயலலிதாவின் அயராத முயற்சியால் மிக விரிவான திட்ட வரைவு உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு எரிசக்தி துறையில் கடந்த ஐந்து வருடங்களில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மின்நிலைமையை மேலும் மேம்படுத்தி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வை 2023-ன்படி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றிட தங்களது தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் ஆதரவையும் நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 2011ஆம் ஆண்டிலிருந்து மாநில மற்றும் மத்திய தொகுப்பில் புதிய மின் நிலையங்களை இயக்கத்துக்குக் கொண்டு வந்ததன் மூலமும், நடுத்தர மற்றும் நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ததன் மூலமும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம் மூலமும் கூடுதலாக 9,924 மெகாவாட் மின்சாரம் தமிழகத்தின் மின்கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களில், மாநிலத்தின் எரிசக்தி துறையில் குறிப்பிடத்தக்கக் கூடுதல் மின்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு 2016-17ஆம் நிதியாண்டில் மின் உற்பத்தியில் உச்ச உபரி நிலை அடைந்துள்ளது. மேலும், இனிவரும் வருடங்களிலும் மின் உற்பத்தியில் உபரி நிலை தொடர போதுமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டில் 200 மில்லியன் யூனிட்டாக இருந்த ஒரு நாளைய சராசரி மின் நுகர்வு 2016ஆம் ஆண்டில் 300 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது. மேலும், இந்த மின் நுகர்வு உயர வாய்ப்பு உள்ளது. மாநிலத்தின் தற்போதைய பூர்த்தி செய்யப்பட்ட மின்தேவை ஏறக்குறைய 13,500 மெகாவாட் முதல் 14,500 மெகாவாட்டாக உள்ளது. இது 15,500 மெகாவாட்டாக மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின் தேவையைப் பூர்த்தி செய்ய ஏற்றவாறு தமிழகம் தயார் நிலையில் உள்ளது.

தமிழகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது. மேலும் இந்த இடத்தைத் தக்கவைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் மொத்த சூரியஒளி மின் சக்தி நிறுவுதிறன் 1,693 மெகாவாட் மற்றும் காற்றாலை மின் நிறுவுதிறன் 7,845 மெகாவாட் ஆகும். தமிழ்நாட்டின், காற்றாலை மின் நிறுவு திறனானது இந்தியாவின் மொத்த காற்றாலை மின் நிறுவு திறனில் 28 விழுக்காடு ஆகும். மேலும் 2016-17ஆம் ஆண்டில் தமிழ்நாடு எப்போதும் இல்லாத அளவாக சுமார் 13,000 மில்லியன் யூனிட் அளவு காற்றாலை மின்சாரத்தையும், 1,644 மில்லியன் யூனிட் அளவு சூரியஒளி மின்சாரத்தையும் உற்பத்தி செய்துள்ளது. தமிழகத்திலிருந்து கிடைக்கும் உபரி காற்றாலை மின்சாரம் தேவைப்படும் மாநிலங்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏதுவாகத் தனிப்பயன் பசுமை மின் வழித்தடத்தை விரைவில் செயல்படுத்த மத்திய மின்சாரத்துறை அமைச்சர் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்..

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அலகுகள் 1 மற்றும் 2-ன் மொத்த மின் நிறுவு திறனான 2,000 மெகாவாட்டில் 1,125 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 3ஆவது மற்றும் 4ஆவது அலகுக்கான அடிக்கல்லை கடந்த 15.10.2016 அன்று ஏற்கெனவே பிரதமர் நாட்டியுள்ளார். மாநில அரசு கூடங்குளம் அணுமின் நிலையமானது சுமுகமாக மின் உற்பத்தியைத் தொடங்க எடுத்த தீவிர முயற்சிகளையும், அணுமின் நிலையம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளதால் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதையும் கருத்தில்கொண்டு அலகுகள் 3 மற்றும் 4-ன் மொத்த மின் உற்பத்தியான 2,000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கே ஒதுக்கீடு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மின்சாரத் தேவை அதிகரித்துக்கொண்டே வருவதால் செய்யூர் மிக உய்ய அனல்மின் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளி ஏல முறையை விரைந்து செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, இந்தத் திட்டத்துக்காக தனியாக ஒரு நிலக்கரி சுரங்கத்தையும் ஒதுக்கித் தர வேண்டும்” என்று அவர் பேசினார்.

புதன், 3 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon