மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

சசிகலா சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல்!

சசிகலா சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சார்பில், உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1991-96ஆம் ஆண்டில், அப்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது 1996ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

18 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த இந்த வழக்கில் கிட்டத்தட்ட 200 முறைக்கு மேல் வாய்தா வாங்கப்பட்டது. இறுதியாக கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்பட நால்வருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி மைக்கேல் டி குன்கா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, நால்வரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, கர்நாடக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வந்த இந்த வழக்கின் இறுதி தீர்ப்பில், வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய நான்கு வருட சிறை தண்டனையை உறுதி செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் மூவரும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மே 3ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, சசிகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு விலக்கு அளித்தது போல தனக்கும் அளிக்க வேண்டும் என்றும், வழக்கிலிருந்து தன்னை முழுமையாக விடுவிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை சசிகலா சார்பில் அவருடைய வழக்கறிஞர் செந்தில்குமார் தாக்கல் செய்தார். தண்டனை அளிக்கப்பட்டு 90 நாள்களில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என்கிற விதியின் அடிப்படையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி இளவரசி, சுதாகரன் ஆகியோரும் தனித்தனியாக மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

புதன், 3 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon