மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

வாய்ப்புக் கிடைத்தால் ரீ-எண்ட்ரி கொடுப்பேன் : சக்திமான்

வாய்ப்புக் கிடைத்தால் ரீ-எண்ட்ரி கொடுப்பேன் : சக்திமான்

எல்லோர் வீடுகளிலும் டி.வி. இருக்கிறதோ, இல்லையோ... சக்திமான் ஸ்டிக்கர்கள் சுவர், பீரோ, ஜன்னல் என எல்லா இடங்களையும் ஆக்கிரமித்திருக்கும். சக்திமான் பெயரைச் சொல்லியே பல பிராண்டுகள் கல்லா கட்டிக்கொண்டிருந்தன. 2000க்குப் பிறகு, ஸ்பைடர்மேன் ரசிகர்களான இந்தியக் குழந்தைகளுக்கு எல்லாம் முன்னோடியே இந்த சக்திமான்தான்.

சூப்பர் ஹீரோ பாத்திரங்கள் குழந்தைகளை வெகு எளிதாக ஈர்த்துவிடும். அதை இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் சோதனை முயற்சியாக செய்து பெரும் வெற்றியும் பெற்றது இந்தத் தொடர். சக்திமான் வந்து தங்களைக் காப்பாற்றுவார் என நம்பி உயரமான கட்டடங்களில் இருந்து குதித்து இறந்த குழந்தைகளின் சோகமான கதைகள் எல்லாம் இந்த தொடருக்குப் பின்னணியில் இருக்கின்றன. இந்த ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் யுகத்தின் பரபரப்பிலும் சக்திமான் திரும்ப ஒளிபரப்பாகப் போகிறது என சந்தோஷப்பட்டவர்கள் இருக்கிறார்கள். சக்திமான் ஹீரோ முகேஷ் கன்னா ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டிகளிலிருந்து சில சுவாரசியமான தகவல்கள்.

‘சக்திமான் நாடகம் 7 வருஷமா தூர்தஷன் டி.வி-யில் போட்டிருக்காங்க. அந்த ஏழு வருஷத்தை நான் என்னோட வாழ்க்கையில மறக்கவே முடியாத நாள்களாகக் கருதுகிறேன். நிறைய மொழிகள்ல அந்த நாடகம் டப் ஆச்சு. என்னோட புகழும் அந்த நாடகத்தில் நடிச்சதால் ரொம்பவே அதிகமா உயர்ந்துச்சு. அந்தக் காலகட்டத்தில் எனக்கு வந்த பட வாய்ப்புகள் எல்லாத்தையுமே 'சக்திமான்' எனும் சூப்பர் ஹீரோ பாத்திரத்துக்கு சிக்கல் வருமே என்கிற ஒரே காரணத்தால் ஒதுக்கிட்டேன். தொடர் ஒளிபரப்பான ஏழு வருஷமும் முழுக்க முழுக்க சக்திமான் நாடகம்மேல மட்டுமே கவனம் செலுத்தினேன். அந்த நாடகத்துக்கு நானும் ஒரு தயாரிப்பாளர்.’

‘சில மாதங்களுக்கு முன்பு மறுஒளிபரப்புக்கு பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருந்தது. அதே தூர்தர்ஷன் சேனல்ல போடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருந்தாங்க. அப்புறம் ஸ்டார் ப்ளஸ்ல போடலாமான்னு பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருந்தது. எனக்கோ ஆரம்பிச்ச இடத்துலேயே போய் நிக்கணுமான்னு ஒரு பக்கம் யோசனையா இருந்துச்சு. இன்னோருபக்கம், அந்த கேரக்டருக்காக 10 கிலோ எடையைக் குறைக்கணும். அந்த ரோல் என்னைத் தவிர வேற யாராலேயும் பண்ண முடியுமான்னு எண்ணம் வர ஆரம்பிச்சது. அப்புறம் அதற்கான ட்ரெண்டும் இப்போ இருக்கும் குழந்தைகளைக் கவரும்விதத்தில் இருக்குமான்னு யோசிச்சதால் அந்த பிளானும் ட்ராப் ஆகிடுச்சு.

இப்போதும்கூட ஸ்கூல், காலேஜ் ஆண்டு விழாக்கள்ல என்னை கெஸ்ட்டா கூப்பிடுவாங்க. குழந்தைகள் இருக்கும் விழாக்களில் கலந்துகொள்ளும்போது எல்லோரும் சக்திமான்னுதான் என்னை அடையாளம் சொல்றாங்க. அது மட்டும் இல்லாம கோரஸா 'சக்திமான்... சக்திமான்...'னு சவுண்ட் கொடுப்பாங்க. அதை கேட்கும்போதெல்லாம் சக்திமானாதான் என்னை நானே ஃபீல் பண்ணிக்குவேன். இந்த மகிழ்ச்சியே எனக்கு போதும்னு அடுத்த கட்டத்தைப் பற்றி பெருசா எதுவும் யோசிச்சுப் பார்க்கல. இவை எல்லாத்தையும்விட சக்திமான் நாடகம் ஹிட் ஆனது நாங்கள் யாருமே கொஞ்சம்கூட எதிர்பார்க்காத விஷயம். அது தானாகவே நடந்த ஒரு அதிசயம். இப்போ டிரெண்டுக்கு அப்போ பண்ண மாதிரியே சக்திமான் பண்ணா, நல்லா இருக்காது. பாகுபலிக்கே சவால் விடுற அளவுக்கு சக்திமானுக்கு புதுப்புது விஷயங்கள்ல அப்டேட் ஆகணும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா, நிச்சயம் சக்திமான் ரீ-எண்ட்ரி கொடுப்பான்’ என்று கூறியுள்ளார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon