மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

ஐ.பி.எல். 2017 : அசத்திய திரிபாதி - முன்னேறிய புனே!

ஐ.பி.எல். 2017 : அசத்திய திரிபாதி - முன்னேறிய புனே!

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற புனே அணி கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீசத் தீர்மானித்தார். இதையடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர் நரேன் முதல் ஓவரின் 6 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர், அதிரடியாக விளையாட முற்பட்ட கம்பீர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஜாக்சன் 10 ரன்களும் யூசுப் பதான் 4 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும், மணிஷ் பாண்டே 37 ரன்களும் டி கிரண்ட் ஹோம் 19 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர். சூர்ய யாதவ் சிறப்பாக விளையாடி 16 பந்துகளில் 30 ரன்களைச் சேர்த்தார். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களைச் சேர்த்தது. புனே அணி தரப்பில் உனகண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக திரிபாதி மற்றும் ரஹானே களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய திரிபாதி பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசினார். இவரைக் கட்டுப்படுத்த கொல்கத்தா பவுலர்கள் திணறினர். 11 ரன்களில் ரஹானே வெளியேறினாலும் திரிபாதி நின்று ரன்களைக் குவித்தார்.

கேப்டன் ஸ்மித் 9 ரன்களுடனும், மனோஜ் திவாரி 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடந்த போட்டியில் சதமடித்த ஸ்டோக்ஸ் 14 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். பின்னர் களமிறங்கிய தோனி 5 ரன்களில் வெளியேற எளிதாக வெற்றி இலக்கை அடைய வேண்டிய ஆட்டத்தில் 19.2 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திரிபாதி 52 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இதில் 9 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும். கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களில் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், சுனில் நரைன், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் புனே அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இரு அணிகளும் 11 போட்டிகளில் விளையாடி 7இல் வெற்றி பெற்று புள்ளிக்கணக்கில் சமஅளவில் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி 2வது இடத்தில் உள்ளது. புனே அணி இந்தப் போட்டியில் கொல்கத்தாவை வெற்றிகொள்ளாத அணி என்ற பெயரை அதன் சொந்த மண்ணிலேயே மாற்றிக்காட்டியது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon