மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

மும்பை மருத்துவமனையிலிருந்து கெய்ரோ பெண் டிஸ்சார்ஜ்!

மும்பை மருத்துவமனையிலிருந்து கெய்ரோ பெண் டிஸ்சார்ஜ்!

உடல் பருமனைக் குறைக்க மும்பை சைஃபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குண்டுப் பெண் இமான் அகமது, இன்று காலை 10.30 மணி அளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

எகிப்து அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த குண்டுப் பெண் இமான் அகமது அப்துல்லாதி (36) கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி அலெக்ஸாண்டிரியாவில் இருந்து சரக்கு விமானம் மூலம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு, அங்கிருந்து சைஃபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கான சிகிச்சை தொடங்கியபோது அவரின் உடல் எடை 498 கிலோவாக இருந்தது.

கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி அவருக்கு ஸ்லீவ் காஸ்ட்ரெகெடோமி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர், 140 கிலோ எடையைக் குறைத்து 358 கிலோவாக இருந்தார். அதைத் தொடர்ந்து, 2 மாதத்தில் 242 கிலோ எடையைக் குறைத்து 256 கிலோ எடையுடன் இருந்தார். தற்போது அவர் 177 கிலோ எடையுடன் உள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் முபஷல் லக்டாவாலா, ’இமான் அகமதுவின் உடல் எடை 177 கிலோவாக குறைந்துவிட்டது. அவர் நன்றாக இருக்கிறார். இன்று (மே, 4) டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இதுவரை சிகிச்சைக்காக ரூ.3 கோடி செலவாகியுள்ளது. இந்தியாவில் இருந்து ரூ.65 லட்சம் நன்கொடை கிடைத்தது. அவரின் குடும்பத்தாரிடம் இருந்து நாங்கள் ஒரு பைசாகூட பெறவில்லை’ என தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், இமான் அகமதின் சகோதரி ஷைமா, ‘ எனது சகோதரிக்கு உடல் எடை குறைப்பு சிகிச்சை நிபுணரான முபஷல் லக்டாவாலா சிகிச்சை அளித்து வருகிறார். ஆனால் என் சகோதரி உடல் நிலையில் சிறிதளவுகூட முன்னேற்றம் இல்லை. இந்த விஷயத்தில் மருத்துவர்கள் மற்றும் ஊடகங்கள் தெரிவிப்பது பொய்’ என வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்த மருத்துவர், ‘இமானின் அதிகளவு உடல் எடையானது அறுவை சிகிச்சையின் மூலம் குறைக்கப்பட்டுள்ளது. அதிக உடல் எடையின் காரணமாக நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் எழுந்து அமர முடியவில்லை. அவருக்கு தீவிரமாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் குணமடைந்துவிடுவார். இமானின் சகோதரி வெளியிட்டுள்ள அவதூறு வீடியோ அதிக மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவர் கட்டாயம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, ஷைமா மீது விபி சாலை காவல் நிலையத்தில் சிகிச்சையின்போது இடையூறு செய்வதாக புகார் அளிக்கப்பட்டது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon