மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

பசுக்கள் மீது ஆசிட் வீசும் கிராமம்!

பசுக்கள் மீது ஆசிட் வீசும் கிராமம்!

கடந்த சில காலமாகவே, நாடு முழுவதும் பசு பாதுகாப்பு என்ற போர்வையில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மனிதனைக் கொன்றால்கூட தண்டனை தாமதமாக கிடைக்கும்நிலையில், பசுவை கொன்றவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை வழங்கப்பட்டு வந்தது. அதாவது, பசு காவலர்களே அவர்களை துன்புறுத்தி கொன்றுவிடுவார்கள். இவ்வாறு பசுவை மையமாகக் கொண்டு நடக்கும் அரசியல் அனைத்தும் நாம் அறிந்ததே.

ஆனால் ஹரியானாவில் உள்ள கிராமம் ஒன்றில் பயிர்களை மேயும் பசுக்கள் மீது ஆசிட் வீசும் கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ளது ஃபரிதாபாத் மாவட்டம். வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியில் விவசாயம் நடைபெறவில்லை. இந்த மாவட்டத்தில் உள்ள போபானி என்ற கிராமத்தில் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர் செய்துள்ளனர்.

இந்நிலையில், பயிர்களை மேயும் கால்நடைகள் மீது அந்த கிராம மக்கள் ஆசிட் ஊற்றி வருகின்றனர். ஆசிட் ஊற்றப்பட்ட மாடுகள் காயத்துடன் அப்படியே சுற்றித் திரிகிறது. அவற்றுக்கு சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை. இதில் அதிகமாக பாதிக்கப்படுவது காளைகள்தான்.

இதுகுறித்து தகவலறிந்த விலங்குகள் நல ஆர்வலர்களும், கால்நடை மருத்துவர்களும் அந்த கிராமத்தில் முகாம் அமைத்து, பசுக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த ஆசிட் வீச்சால் பசுக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சில பசுக்களின் உள்ளுறுப்புகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காளை ஒன்று சாலையில் காயங்களுடன் கத்திக்கொண்டே இருப்பதாக தொலைபேசி வாயிலாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொண்டு நிறுவனத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து, இந்த கொடூரச் செயல் வெளியே வந்துள்ளது. ஆனால் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யவில்லை.

இதுகுறித்து பாவ் என்னும் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர் ரவி துபே, ‘எங்களுக்கு ஷாம்பு என்னும் காளை குறித்த தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றோம். எங்களைக் கண்டதும் ஷாம்பு ஓடத் தொடங்கியது. பின்னர், அந்தக் காளைக்கு சப்பாத்தி கொடுத்து, அதை லேசான கயிறால் கட்டினோம். பின்னர் சிகிச்சை அளிக்கத் தொடங்கினோம். தற்போது அந்தக் காளை குணமாகி வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மட்டும் சுமார் ஆறு மாடுகள் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு, மார்ச் மாதம் ஹரியானா மாநிலத்தின் கால்நடைத் துறை ‘நேஷனல் டெய்ரி’ என்னும் திட்டத்தின் மூலம் நாட்டு மாடுகளை இனம் காணவும், பாதுகாக்கவும் ஒவ்வொரு மாட்டுக்கும் 12 இலக்கங்கள் கொண்ட அடையாள எண் வழங்கப்படும். மேலும் புகைப்படம், வயது, உடல் அமைப்பு, நிறம், இனம் போன்ற குறிப்புகள் அடங்கிய அடையாள அட்டை ஒவ்வொரு மாட்டின் கழுத்திலும் தொங்கவிடப்படும். சுமார் 3.5 லட்சம் மாடுகளுக்கு பிரத்யேக எண் வழங்கப்படும். அதற்கான பணிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பசுக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அரசின் அலட்சியப்போக்கையே காட்டுகிறது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon