மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

மருத்துவர்களுக்கு தற்காப்புக் கலை!

மருத்துவர்களுக்கு தற்காப்புக் கலை!

தாக்குதலில் ஈடுபடும் நோயாளிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள டெல்லியில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தற்காப்புக் கலை கற்றுத் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவன (எய்ம்ஸ்) மருத்துவமனையில் பணிபுரியும் சுமார் 1500 மருத்துவர்களுக்கு மே 15 முதல் மாலை வேளையில் திக்வொண்டோ என்ற தற்காப்புக் கலை கற்றுத்தரப்படவுள்ளது.

இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் விஜய் குர்ஜர் கூறியதாவது: மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அரசாங்கம் அதை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. வரும் முன் காப்பதே சிறந்தது, இதற்கு அரசாங்கம் போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட லான்செட் மருத்துவ இதழின் ஆய்வுப்படி, இந்தியாவிலுள்ள 40 சதவிகிதத்துக்கும் அதிகமான மருத்துவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் அல்லது அவர்களது உறவினர்களால் மன அளவிலோ அல்லது உடல் அளவிலோ தாக்குதலுக்குள்ளாவதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கம் கூறுவதாவது: 75% மருத்துவர்கள் பணியில் இருக்கும்போது உடல்ரீதியாகவும் வாய்மொழி வன்முறைக்கும் உள்ளாவதாகத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் மருத்துவர்கள் மீதான, நோயாளியுடைய உறவினர்களின் தாக்குதல்களுக்கு எதிராக சுமார் 3000 மருத்துவர்கள் விடுப்புப் போராட்டம் நடத்தினர். பின் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து 15 நாட்களுக்கு ஒருமுறை கண்காணிக்கப்படும் என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவாதம் அளித்துள்ளதை அடுத்து, அனைத்து மருத்துவர்களும் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காதது, அதிக மருத்துவக் கட்டணம் போன்ற காரணங்களுக்காக மருத்துவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. எனவே, இதுபோன்ற சூழல்களில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு தற்காப்புக் கலைகளை கற்றுத் தர இந்தியாவின் சில மிகப்பெரிய மருத்துவமனைகள் முடிவெடுத்துள்ளன.

அதன்படி, முதலில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு தற்காப்புக் கலைகளில் சாம்பியன்களாக விளங்குபவர்களைக் கொண்டு தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படவுள்ளது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon