மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

ஏவுகணை பரிசோதனை : தயார்நிலையில் அமெரிக்கா!

ஏவுகணை பரிசோதனை : தயார்நிலையில் அமெரிக்கா!

வடகொரியாவுடனான மோதல் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்க அரசு கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்துள்ளது.

அமெரிக்காவின் கடும் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளும் அணு ஆயுதச் சோதனைகளும் நடத்தி வருகிறது. இந்நிலையில், எந்நேரமும் அணுகுண்டு சோதனை நடத்துவோம் என வடகொரியா அரசு, கடந்த மே 1ஆம் தேதி எச்சரிக்கை விடுத்தது. இதனால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்குமிடையே கடும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கொரிய தீபகற்பகத்துக்கு அமெரிக்க போர்க்கப்பல்கள் விரைந்தன. இதனால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த மே 2ஆம் தேதி அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளிக்கையில், வடகொரிய அதிபர் கிம்ஜாங்-உன் மனநிலை சரியில்லாதவர்போல இருக்கிறார் என்று கூறினார். மேலும் கிம்ஜாங்-உன் மிக இளம்வயதில் பதவிக்கு வந்தவர் என்றும், ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளிலேயே தனது உறவினர்களைக் கொல்ல உத்தரவிட்டவர் என்றும் குற்றம்சாட்டினார். மேலும் வடகொரிய அதிபர் கிம்ஜாங்- உன்னை சந்திப்பதற்கு தகுந்த சூழ்நிலை அமைந்தால் அவரை நேரில் சந்தித்து பேசத் தயார் என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதிபரின் பேச்சுவார்த்தை ஒருபக்கம் இருந்தாலும், வடகொரியாவுக்கு எதிரான போர் நடவடிக்கையை எடுக்கும்விதமாக, நேற்று மே 3ஆம் தேதி இரவு கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அமெரிக்கா சத்தமின்றி பரிசோதனை செய்தது. நேற்றிரவு 12.05 மணியளவில் இந்த ஏவுகணை பரிசோதனை, ஃபுளோரிடா அருகே உள்ள வான்டென்பெர்க் விமானப் படைத்தளத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

வடகொரியா தொடர்ந்து போர் மிரட்டல் விடுத்து வருவதற்கு பதிலடி தரும்வகையில், அமெரிக்கா இந்த ஏவுகணை சோதனையை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 6,800 கிலோமீட்டர் தொலைவு வரை கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடிய இந்த ஏவுகணையால், அணு ஆயுதம் உள்ளிட்டவற்றை எளிதாகச் சுமந்துசெல்ல முடியும். மேலும் பல ஏவுகணை சோதனைகள் மற்றும் வெடிகுண்டுகள் பரிசோதனையை நிகழ்த்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon