மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

விஜயபாஸ்கர் மனைவி ஆஜர் : தொடங்கியது விசாரணை!

விஜயபாஸ்கர் மனைவி ஆஜர் : தொடங்கியது விசாரணை!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் பறி்முதல் செய்யப்பட்ட ரூ.89 கோடிக்கான ஆவணங்கள் தொடர்பாக சம்மன் அனுப்பிய நிலையில், அவரது மனைவி ரம்யா இன்று (4.5.2017) காலை 8.30 மணிக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலின்போது பணப் பட்டுவாடா புகார் எழுந்தது. இதையடுத்து, வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரது வீடுகளில் ஏப். 7, 8 ஆகிய தேதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது விஜயபாஸ்கரின் வீட்டில் ரூ.89 கோடிக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் மற்றும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பினர். மேலும் விஜயபாஸ்கர் தந்தை மற்றும் அவரது சகோதரருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. மேற்கண்ட அனைவரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள்

இந்நிலையில், ரம்யாவை நேற்று (3.5.2017) மாலை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது வருமான வரித்துறை. நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு விஜயபாஸ்கர் மனைவி ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், ரம்யா இன்று காலை 10 மணிக்கு ஆஜராவார் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அவர் முன்னதாக இன்று காலை 8.30 மணிக்கே நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். ஊடகங்களை தவிர்க்கவே ரம்யா முன்னதாக ஆஜரானதாகத் தெரிகிறது. என்றபோதும் காலை 10.30 மணிக்கே வருமான வரித்துறை அதிகாரிகள் அலுவலகத்துக்கு வந்தனர். 11 மணிக்கு விசாரணை தொடங்கியது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், அவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர் மனைவி ரம்யாவிடம் விசாரணை நடைபெறுகிறது என்று தெரிகிறது.

ரம்யா கொடுக்கும் தகவல் போதுமானதாக இருக்கும்பட்சத்தில் அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட மாட்டார் என்றும், கூடுதல் தகவல் தேவைப்பட்டாலோ, சந்தேகம் ஏற்பட்டாலோ அவரை விசாரணைக்கு மீண்டும் அழைப்போம் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவாரிகள் மற்றும் விஜயபாஸ்கரின் நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை ரம்யாதான் நிர்வகித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே, அவரிடம் விசாரணை செய்ய வேண்டியது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon