மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

மேம்பாலங்கள் திறப்பு விழா : முதல்வர் மதுரை பயணம்!

மேம்பாலங்கள்  திறப்பு விழா : முதல்வர் மதுரை பயணம்!

மதுரையில் உள்ள ஆரப்பாளையம், செல்லூர் ஆகிய இரண்டு இடங்களில் ரூ.30 கோடி செலவில் மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த மேம்பாலங்களை சித்திரை திருவிழாவுக்கு முன்னதாக பக்தர்கள் வசதிக்காக திறக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று வெள்ளிக்கிழமை (நாளை) இந்த மேம்பாலங்கள் திறக்கப்படுகின்றன. இதை திறந்துவைப்பதற்காகவும், மதுரை ரிங் ரோட்டில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் விழா ஆகியவற்றை இணைத்து, 25 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கும் இளைஞர் பெருவிழாவில் பங்கேற்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை (நாளை) மதியம் 12 மணிக்கு விமானம் மூலம் மதுரை செல்கிறார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

விமான நிலையத்திலிருந்து கார் மூலம் ரிங்ரோடு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு நடைபெறும் இளைஞர் பெருவிழாவில் கலந்துரையாடுகிறார். அதன்பின், அழகர்கோவில் சாலையில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகை சென்று ஓய்வெடுத்த பின்னர் மாலை 4 மணிக்கு ஆரப்பாளையத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில் இரண்டு மேம்பாலங்களையும் திறந்து வைக்கும் அவர், மதுரையில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டடங்களையும் திறந்துவைக்கிறார்.

இதைத் தொடர்ந்து, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு அங்குள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் மற்றும் பலர் பங்கேற்கின்றனர். விழா முடிந்ததும் மீண்டும் ரிங்ரோடு வரும் எடப்பாடி பழனிச்சாமி, அங்கு நடைபெறும் இளைஞர் பெருவிழாவில் பங்கேற்று கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். தொடர்ந்து 25 ஆயிரம் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகளை வழங்குகிறார். அதன்பின்னர், வெள்ளிக்கிழமை (நாளை) இரவு 8 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon