மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

அடுத்த ஆண்டு சந்திராயன் – 2: இஸ்ரோ!

ஜிஎஸ்எல்வி - எஃப் 09 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து மே 5ஆம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் தெற்காசிய நாடுகளுக்கு சேவை அளிக்கும் வகையில் ஜி சாட் - 9 என்ற செயற்கைக்கோளை தயாரித்து ஜிஎஸ்எல்வி - எஃப் 09 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தவுள்ளனர்.

அதன்படி, ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி மே 3ஆம் தேதி நிறைவடைந்து விண்ணில் செலுத்துவதற்கான 24 மணிநேர கவுண்ட் டவுன் இன்று மே 4ஆம் தேதி தொடங்கியது. தெற்காசிய நாடுகளில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிவிப்பதுடன், தொலைதொடர்பு சேவையையும் இந்த செயற்கைகோள் வழங்கும். சார்க் கூட்டமைப்பு நாடுகளில் பாகிஸ்தானைத் தவிர மற்ற 7 ஆசிய நாடுகளின் கூட்டு திட்டப்படி இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளுக்கு முதலில் சார்க் சாட் என்று பெயரிடப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் இதிலிருந்து விலகிவிட்டதால் இதற்கு தெற்காசிய செயற்கைக்கோள் என்று பெயரிடப்பட்டது என்று விஞ்ஞானி சிவன் என்பவர் கூறியுள்ளார். சுமார் 235 கோடி ரூபாய் செலவில் 2230 கிலோ எடையுடன் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைகோள் தகவல் தொடர்புக்கு உதவும் 12 கே.யு பாண்ட் கருவிகளை சுமந்து செல்கிறது. அதன்படி, சுமார் 12 ஆண்டுகள் ‘தெற்காசிய செயற்கைக்கோள்’ செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கவுண்ட் டவுன் இன்று 12.57 மணியளவில் தொடங்கியது. நாளை மே 5ஆம் தேதி மாலை 4.57 மணி அளவில் சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவாது ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

இந்த செயற்கைக்கோள் நேபாளம், பூடான், மாலத்தீவு, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளுக்கு இந்தியா பரிசாக வழங்கவுள்ளது என்று, பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை மான் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கிரண்குமார், ’மே 5ஆம் தேதி ஜிஎஸ்எல்வி - எஃப் 09 என்ற ராக்கெட் மூலம் ஜி சாட் - 9 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இஸ்ரோ சந்திராயன் - 2 ஐ அறிமுகப்படுத்தவுள்ளது என்று கூறியுள்ளார்.

இதற்குமுன், ஜி சாட் - 8 என்ற தகவல்தொடர்பு செயற்கைக்கோள், கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி பிரெஞ்சு கயானாவின் கெளரெளவிலிருந்து அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon