மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

முல்லைப் பெரியாறு : கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

முல்லைப் பெரியாறு :  கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பாகக் கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தமிழக அரசு மனு மீது பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இந்த அணை அமைந்துள்ள இடம் கேரளாவுக்கும், அணை தமிழகத்திற்கும் உரியதாகும். தமிழக பொதுப்பணித்துறை இந்த அணையைப் பராமரித்து வருகிறது. 1895 ஆம் ஆண்டு இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி மற்றும் உயரம் 155 அடி ஆகும். இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தேக்கடி வன சரணாலயம் உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை, சுண்ணாம்பு சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்ட அணையாகும். மெட்ராஸ் மாகாணத்திற்கும் தண்ணீரை திருப்பி விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு 'பெரியாறு திட்டத்தின்' கீழ் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திற்கும் திருவிதாங்கூர் மகாராஜாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 1886 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட இந்தப் பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்து கொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து அந்தப்பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்தது. பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். இந்தத் திட்டத்திற்கு தலைமைப் பொறியாளராக இருந்த வாக்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இந்த அணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 1876 ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த அணைத்திட்டம் மேலும் காலதாமதம் ஆனது.

ஆங்கிலேய அரசின் ஆணைப்படி மேஜர் ஜான் பென்னிகுயிக் என்பவர் 1882-ல் அணையைக் கட்டுவதற்கான திட்டத்தைத் தயாரித்தார். இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை, இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்த கர்னல் பென்னி குக் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணைக் கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலாந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.

​அணை கட்டப்படும் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்ததால் அதனுடன் இடம், லாபப்பங்கீடு போன்றவைகளுக்கான பேச்சு வார்த்தை நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதன்படி திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு (தற்போதைய கேரளா) சென்னை மாகாணம் (தற்போதைய தமிழ்நாடு) அணையின் 155 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கும் பகுதியான 8000 ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் அணைகட்டுவதற்கும் பிற பணிகளுக்குமாக 100 ஏக்கர் சேர்த்து 8100 ஏக்கருக்கு குத்தகைப் பணம் செலுத்த வேண்டும் என்பது உட்பட 7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்குத் தமிழகம் குத்தகைத் தொகையாக 1896ல் இருந்து 1970 வரை ஏக்கருக்கு 5 ரூபாய் என்று கொடுத்து வந்தது. கேரளம், 1970 ஆம் வருடம் அந்த ஒப்பந்தத்தைத் திருத்தி, ஆண்டிற்கு 5 ரூபாய் என்றிருந்த குத்தகைத்தொகையை 30 என மாற்றி, அணையிலும் அதைச் சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளிலும் மீன் பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டது. இவ்வொப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது. இதன்படி இவ்வணையிலிருந்து 104 அடிக்கு மேலுள்ள நீர் குகை மூலம் வைகைப் படுகைக்கு திருப்பி விடப்பட்டு இப்பகுதி பாசன வசதி பெறுகிறது.

இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு 1887 செப்டம்பர் மாதத்தில் அணைக் கட்டும் பணி துவங்கப்பட்டது. இந்தப்பகுதி முழுவதும் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் பொறியாளரான மேஜர் ஜான் பென்னி குயிக் இதற்காக அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்தார். இதன்படி சென்னை மாகாணத்தின் கூடலூர் மலைப்பகுதியிலிருந்து தேக்கடி வரையும் அங்கிருந்து அணை கட்டும் பகுதி வரை கம்பிவடப் பாதைகளை அமைத்து அதற்கான பொருட்களைக் கொண்டு சென்றார். இந்த அணையின் கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பெரியாறு அணை 1893-ல் 60 அடி உயரத்திற்கும் அதன்பின்பு 1894-ல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையைச் சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு திறந்து வைத்தார்.

இந்த அணையில் இருந்து முல்லை ஆறாக வரும் நீர் தமிழ்நாடு அரசின் தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் அளிக்கப் பயன்படுகிறது. இந்த முல்லை ஆற்றின் வழியிலுள்ள கூடலூர், கம்பம், சின்னமனூர், தேனி போன்ற தேனி மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் இடைப்பட்ட பல ஊர்களின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றுகிறது. இந்த முல்லை ஆறு தேனி நகருக்குக் கிழக்குப் பகுதியில் வைகை ஆறுடன் கலந்து வைகை அணையின் ஆதாரமாகவும் விளங்குகிறது. இதன் பின்பு மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீரையும், மதுரை மாநகராட்சியின் குடிநீர்த் தேவையையும், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டிப் பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கான தனிக் குடிநீர்திட்டம் மூலம் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றி வருகிறது.

கடந்த 1979ல் மலையாள மனோரமா ஏடு, அணைக்கு ஆபத்து என்று செய்தியை பரப்பக் கேரள அரசு அணையின் மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்து விட்டது. கேரள மக்களின் அச்சம் போக்கும் பொருட்டு, தமிழகம் அந்த அணையை மேலும் வலுப்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்த பின் 152 அடி நீரைத் தேக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. தமிழகம் அணையை வலுப்படுத்திய பின்னும் கேரள அரசு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த ஒத்துக்கொள்ளவில்லை. அதையடுத்து, இந்த பிரச்னை உச்சநீதிமன்றத்துக்குச் சென்றது. உச்சநீதிமன்றம் வல்லுநர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இந்த உத்தரவை ஏற்க மறுத்து சட்டமியற்றியது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று கேரள அரசு பிறப்பித்த சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தி வந்த தலைமை நீதிபதி உட்பட 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு 2014ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி மிக முக்கிய தீர்ப்பாக முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதால், அதன் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உத்தரவிட்டது. மேலும், பெரியாறு அணையைப் பராமரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் கூறியது.

​அதையடுத்து, இதுகுறித்து, கடந்த 18.7.2014 தினத்தன்று சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ் வாசித்த அறிக்கையில்: "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தமிழக அரசு எடுத்த திடமான, உறுதியான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மற்றும் உச்ச நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு முன்பு தமிழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட வலுவான வாதங்கள் மூலம் தமிழகத்திற்கு கிடைத்த நியாயமான தீர்ப்பினையடுத்து, மத்திய அரசின் ஒத்துழைப்போடு 17.7.2014 அன்று, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு மேற்பார்வை குழு எடுத்த முடிவினை அடுத்து; அடைப்பான்கள் கீழ் இறக்கப்பட்டன. இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி; தமிழக மக்களுக்குக் குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்களுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி. இந்த நடவடிக்கை மூலம் 37 ஆண்டுகளுக்குப்பின் கிடைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வெற்றி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கிறது. இதன் மூலம், முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சனையில் தமிழக மக்களின் உரிமை நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. இது, தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு, கிடைத்த வெற்றி. "வெற்றி" என்பதை விட இது தமிழக மக்களுக்கு "வழங்கப்பட்ட நீதி" என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் கூறினார்.

அதைத்தொடர்ந்து, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து ஜெயலலிதா கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், உச்ச நீதிமன்றம் அறிவித்தபடி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதுக்கும், அணையின் பராமரிப்புக்கும் தொடர்ந்து கேரளா அரசு இடையூறு செய்து வந்தது. அதையடுத்து, இதுகுறித்து கேரளா அரசுமீது, தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசு சட்டப்போராட்டம் நடத்தி முல்லை பெரியாறு அணை உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த அனுமதி பெற்றது. அதற்குப் பிறகு தொடர்ந்து 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக 7.85 கோடி ரூபாய் அணையைப் பலப்படுத்துவதற்காக, சீரமைப்பதற்காக இன்றைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, கேரள அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை.

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளும், அணையின் பாதுகாப்பை கேரள அரசு உறுதி செய்யும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் அணை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முயற்சித்தோம். ஆனால், பராமரிப்புப் பணிகளுக்காக செல்லும் தமிழக அதிகாரிகளைக் கேரள அரசு தடுத்து நிறுத்தி வருகிறது. எனவே இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எஸ். கேகர், நீதிபதிகள் சந்திரசூட், எஸ்.கே.கவூல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மே 4ஆம் தேதி வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் இந்த மனு தொடர்பாக விளக்கமளிக்குமாறு கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை 2-ஆம் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon