மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

பாஜக-வுடன் கூட்டணி : அதிமுக எம்.எல்.ஏ.!

பாஜக-வுடன் கூட்டணி : அதிமுக எம்.எல்.ஏ.!

மத்திய அரசுடன் சுமுகமான நிலையிருந்தால்தான் தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற முடியும் என்பதால், பாஜக-வுடன் அதிமுக கூட்டணி வைப்பது நல்லது என்று அதிமுக அம்மா கட்சி எம்.எல்.ஏ., கனகராஜ் கூறியுள்ளார்.

கோவை மாவட்டம், சூலூர் தொகுதி அதிமுக அம்மா கட்சி எம்.எல்.ஏ.,வான கனகராஜ், கடந்த மாதம் கல்குவாரியில் இறந்த தொழிலாளர்கள் சாவு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் பிரச்னைக்குரிய குவாரியை மூடாவிட்டால் சசிகலா அணியிலிருந்து ஓ.பி.எஸ். அணிக்கு மாறுவேன் என்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து, அவரது கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்குவாரியை மூட உத்தரவிட்டார். இதேபோல், கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்திலும் மக்களோடு மக்களாக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்துப் போராடினார். அப்போது பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி மதுக்கடை திறக்கப்பட்டால் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்வேன் என்று ஆளும் தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். மேலும் ஆளும் கட்சிக்குள்ளே இருந்துகொண்டு இவர் அநீதிக்கும், அக்கிரமத்துக்கும் எதிராகக் குரல் கொடுத்ததால் இவர்மீது ஊடகங்களின் பார்வையும், பொதுமக்களின் பார்வையும் பதிந்தன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில் பொதுமக்களுக்கு தாராளமாக பணம் கிடைக்கும் என்று இவர் கூறியபடியே மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, எம்.எல்.ஏ., கனகராஜ் இன்று மே 4ஆம் தேதி கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொடநாடு பங்களாவில் போதிய காவலர்கள் இல்லாத காரணத்தாலேயே கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. முன்னாள் முதலமைச்சர் வாழ்ந்த கொடநாடு பங்களாவில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, இதில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் அதற்குப் பின்னாலிருக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் விரைவில் கைதுசெய்ய வேண்டும். அதிமுக-வில் தற்போது குழப்பமான சூழ்நிலை நிலவிவரும்நிலையில், விரைவில் ஓ.பி.எஸ்.அணியினரும் எடப்பாடி அணியினரும் இணையும் காலம் வரும். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதை விரும்பாத சிலர் இதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். ஓ.பி.எஸ். அணி விடுத்துள்ள 2 கோரிக்கைகளும் நிறைவேற வாய்ப்புள்ளது. எனவே, 2 அணிகளும் விரைவில் ஒன்றுசேர்ந்து இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம் என்று அவர் கூறினார்.

மத்திய அரசுடன், மாநில அரசு இணைந்து செயல்பட்டால்தான் மாநிலத்தில் வேகமாக வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற முடியும். அந்தவகையில் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொள்வது நல்லதுதான் என்று கூறினார்.

சூலூரை அடுத்த பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் வறட்சியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டநிலையில், அவரது குடும்பத்துக்கு கனகராஜ் எம்.எல்.ஏ. தனது ஒரு மாத சம்பளம் ரூ.55 ஆயிரத்தை வழங்கி ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon