மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

மாணவர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம்!

மாணவர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வளரிளம் பருவத்தில் ஏற்படும் ரத்தசோகை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் மாணவிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், குடற்புழு நீக்க மாத்திரை 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.

தமிழகத்தில், 37,000 அரசுப் பள்ளிகள் மற்றும் 8,402 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 57,000 பள்ளிகள் உள்ளன. அதில், 86 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

பள்ளி அருகில் இருக்கும் சில மாணவர்கள் சைக்கிளிலும், நடந்தும் பள்ளிக்குச் செல்வார்கள். தூரத்தில் இருக்கும் மாணவர்கள் பேருந்து, ரயில், வேன் போன்ற வாகனங்களின் மூலம் பள்ளிக்குச் செல்வார்கள். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்கள். எதிர்பாராவிதமாக மாணவர்களுக்கு நோய், விபத்து ஏதேனும் ஏற்பட்டால் சிகிச்சைக்காக செலவிட, ஏழைப் பெற்றோர்களால் இயலாது. எனவே, தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயசந்திரன் மற்றும் அதிகாரிகள் குழு மாணவர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளனர்.

அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படுகிறது. படிப்புக் காலம் முழுவதும், மாணவர்கள் இலவசமாக, தரமான சிகிச்சை பெறும்வகையில், தமிழக அரசே காப்பீடுக்கான தொகையை செலுத்தவுள்ளது. சட்டசபையில் பட்ஜெட் மானிய கோரிக்கையின்போது இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon