மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

காலம் மாறிவிட்டதை காங்கிரஸ் அறிய வேண்டும் : பாஜக!

ஜனாதிபதியை தாங்கள் ஒப்புதலுடன்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எண்ணக் கூடாது என்று கூறியிருக்கிறது பாஜக.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 2-ம் வாரம் தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற எம்.பி.க்கள், மாநில எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள். தற்போதைய நிலவரப்படி பாராளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடத்தி வரும் பா.ஜனதா கட்சி 13 மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ளது. பா.ஜ.க.வுக்கு ஆதரவாக சில மாநில கட்சிகளும் உள்ளன. எனவே ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. எளிதில் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது.

இருப்பினும், எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஜனாதிபதி பதவிக்கு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக நிதிஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து பா.ஜ.க. தலைவர் ஜாபர் இஸ்லாம் கூறுகையில், “இந்தியாவின் ஜனாதிபதி ஆவதற்கான சரியான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் விருப்பம். மத்திய அரசு தேர்வு செய்யும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை ஆகும். இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. ஆனால் இன்னும் ஜனாதிபதி தங்கள் ஒப்புதலுடன் வர வேண்டும் என்று நினைக்கிறது. ஆனால் காலம் மாறிவிட்டது. காங்கிரஸ் பின்னோக்கி சென்று விட்டது” என்றார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon