மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

மருத்துவர்களின் சமாதி போராட்டம்!

மருத்துவர்களின்  சமாதி போராட்டம்!

மருத்துவர்கள் போராட்டத்தால் இன்று மே 4ஆம் தேதி நடைபெறவிருந்த 5000 அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, மருத்துவ மாணவர்கள் சமாதி கட்டி போராட்டம் நடத்தினர்.

அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து, நீட் தேர்வு கட்டாயமாக்கியது குறித்து கடந்த, ஏப்ரல் 19ஆம் தேதி முதல் அரசு மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மே 4ஆம் தேதி இன்று 16வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பான வழக்கு நேற்று மே 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். இதையடுத்து, நீதிமன்றம் செல்வதால் தீர்வு கிடைக்காது. தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தி அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தினர் தொடர் உரிமை மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவ மாணவர்கள், உயிருடன் ஒருவரை அமர்த்தி, அவருக்கு சமாதி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணியை புறக்கணித்து அறுவை சிகிச்சை மேற்கொள்வதை நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி மே 3 மற்றும் 4 ஆகிய இரு தேதிகளில் 5000க்கும் மேற்பட்ட அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தினசரி சுமார் 5000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்வார்கள். உள்நோயாளிகளாக 2000க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். மருத்துவர்களின் இந்தப் போராட்டத்தால் 16 நாட்களாக நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 150 ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட தமிழகம் முழுவதும் 1800க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையங்களுக்கு, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுச் சென்ற நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது: ’சுகாதாரத் துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றி இந்திய மருத்துவக் கவுன்சிலில் சட்டத்திருத்தம் செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும். எங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.

திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சையை நிறுத்துவதால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் எங்களது போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon