மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

நீதிபதி வீட்டில் நடந்தது என்ன?

நீதிபதி வீட்டில் நடந்தது என்ன?

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் தன்னை சாதிய ரீதியாக நடத்தி வருவதாகவும், பல்வேறு நீதிபதிகள் ஊழல் பேர்வழிகளாக இருக்கிறார்கள் என்றும் பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதோடு மட்டுமல்லாமல் நீதிபதிகளை தேர்வு செய்யும் ‘கொலிஞ்ஜியம்’ தேர்வுக் குழு மீதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த கர்ணன், இதுகுறித்து பிரதமர், ஜனாதிபதிக்கும் புகார் கடிதம் எழுதினார்.

இந்த சம்பவத்தினால் நீதிபதி கர்ணன் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு சென்ற பிறகும் தொடர்ந்து நீதிபதிகளுக்கு எதிரான கருத்துகளைக் கூறிவந்தார். இந்த சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த உச்ச நீதிமன்றம் நீதிபதி கர்ணன் மீது தாமாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து கர்ணனுக்கு சம்மன் அனுப்பியது.

இதற்கு போட்டியாக நீதிபதி கர்ணனும் தனக்கு சம்மன் அனுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக பதில் சம்மன் அனுப்பினார். இந்த சம்பவத்தை எதிர்த்த நீதிபதிகள் கர்ணனை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவுவிட்டார்கள். அதற்கு கர்ணன் நேரில் ஆஜராக மறுத்தார். நேரில் ஆஜராகவில்லையென்றால் பிடி வாரண்டு உத்தரவு போடப்பட்டும் என்றார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். அதன் பிறகு கடந்த மார்ச் மாதம் 31ல் நேரில் ஆஜராகி, அவர் தரப்பு வாதங்களை முன் வைத்துப் பேசினார்.

அதன் பிறகும் பிரச்னை ஓயவில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கர்ணனுக்கு மனநிலை சரியில்லை; அதனால் அவரை பரிசோதிக்க வேண்டுமென்று சொன்னதும், உடனடியாக கடந்த மே 3ஆம் தேதி கர்ணன் தனக்கு சம்மன் அனுப்பிய நீதிபதிகளின் பாஸ்போர்ட்களை முடக்கி, கைது செய்யச்சொல்லி உத்தரவு போட்டார். மேலும் அவர்கள் மீது வன்கொடுமை வழக்கின் கீழ் வழக்குப் பதிவு செய்ய கொல்கத்தா டிஜிபிக்கு உத்தரவு போட்டார். இதனால் பிரச்னை வலுத்து வந்தது இரு தரப்புக்கும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உடனடியாக நீதிபதி கர்ணனின் மன நிலையை பரிசோதித்து, மே 8ஆம் தேதிக்குள் அறிக்கை அனுப்புமாறு உத்தரவிட்டனர்.

இன்று மே 4ஆம் தேதி கிழக்கு கொல்கத்தா நியூ டவுனில் உள்ள கர்ணனின் ஃபிளாட்டில் மேற்கு வங்க டிஜிபி, ஏடிஜிபி, ஐ.ஜி. மற்றும் கொல்கத்தா அரசு மருத்துவமனை டீன், ஆர்.எம்.ஓ, சில பெண் மருத்துவர்கள் மற்றும் நான்கு ஆண் மருத்துவர்கள் என மொத்தம் 25 பேர் அடங்கிய குழு நீதிபதி கர்ணன் வீட்டிற்கு வந்து கர்ணனின் உதவியாளரிடம் நீதிபதியை பரிசோதிக்க வேண்டும்; எத்தனை பேர் வரலாம் என்று கேட்டதும் அனைத்து நபர்களையும் உள்ளே அழைத்த கர்ணன், அனைவருக்கும் டீ, காபி, பிஸ்கட் கொடுத்து உபசரித்தார். ”நான் இந்த பரிசோதனைக்கு ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்று ரிட்டனாக எழுதிக் கொடுத்தவர், அவர்களிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாடலை நடத்தியிருக்கிறார்.

அந்த உரையாடலில் ‘கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி என்னை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்திவிட்டனர். இதனால் பல்வேறு முக்கியப் பணிகள், நிலுவையில் கிடக்கின்றன. தவிர, மக்கள் பிரச்னைகள், மாநிலத்தில் நடந்து வரும் பல்வேறு முக்கியப் பிரச்னைகள் நிலுவையில் இருக்கின்றன. நான் தலித் என்பதால் என்மீது இந்த நடவடிக்கை பாய்கிறது. என்னிடம் 20 நீதிபதிகளின் ஊழல் பட்டியல் இருக்கிறது. அதை நான் வெளியிடுவேன் என்கிற அச்சத்தில் என் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். ஜெகதீஷ் சிங் ஹேகர், தீபக் மிஸ்ரா, ஜஷ்டி செல்லமேஸ்வர், ரஞ்சன் ஹோகாய், பினாகி சந்திரகோஷ், மதன் லோகூர், குரியன் ஜோசப் உள்பட 7 பேர் அடங்கிய குழுதான் என்னை பைத்தியம் என்று சொல்கிறது. என்னைப் பார்த்தால் உங்களுக்கு பைத்தியம் போல தெரிகிறதா? நீங்களே சொல்லுங்கள்’ என்றவர், ’நான் சில ஊழல் நீதிபதிகளின் பெயரை வெளியிட்டால் இந்த 7 பேரில் சிலரது பெயர்களும் இருக்கிறது. ஆதலால் என்னை விலக்கி வைத்திருக்கிறார்கள். நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம், உங்கள் வேலையை பாருங்கள். ஆனால் நான் இந்த பரிசோதனைக்கு ஒப்புக்கொள்ள மாட்டேன்’ என்றவர் வந்திருந்தவர்களின் பெயர்களை சொல்லி அழைத்து அவர்களிடம் பேசினார். பதிலுக்கு சில மருத்துவர்களும் போலீஸ் அதிகாரிகளும் ‘இது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. ஆதலால்தான் வேறு வழியின்றி வந்தோம். எங்களைத் தவறாக நினைக்க வேண்டாம்’ என்று’ கோரிக்கை வைத்தார்கள்.

பிறகு அவர்களிடம் ‘நான் நலமாக இருக்கிறேன்; நீங்க என்ன ரிப்போர்ட் அனுப்புவீங்களோ அதை அனுப்பவும். நான் உங்களிடம் குறுக்கீடு செய்ய மாட்டேன்’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

இந்த நிலையில் வரும் ஜீன் 9ஆம் தேதி நீதிபதி கர்ணன் ஓய்வு பெறப் போகிறார்.

இனி அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்குமோ?

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon