மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

வணிகர் தின விழா : கடைகள் அடைப்பு!

வணிகர் தின விழா : கடைகள் அடைப்பு!

வணிகர் தின விழாவை முன்னிட்டு, மே 5ஆம் தேதி ( நாளை) கடைகள் அடைக்கப்படுவதாக வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும் இரு சங்கங்களின் சார்பில் தனித்தனியாக மாநாடும் நடத்தப்படவுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 34வது வணிகர் தின விழாவை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் 'உரிமை பிரகடன மாநாடு' என்ற தலைப்பில் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கு பேரவையின் மாநிலத் தலைவர் வெள்ளையன் தலைமை வகிக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, பழ.நெடுமாறன், நீதிபதி சந்துரு உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

மாநாட்டில், உலக வணிக ஒப்பந்தத்தின் கேடான ஆன்லைன் வாணிப ஆபத்திலிருந்து சில்லறை வணிகத்தைக் காக்க உறுதிமாழி ஏற்பு, உலக வர்த்தக ஒப்பந்தத்திற்கு முடிவு கட்டுவது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. எனவே, மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான வணிகர்கள் தீவுத்திடலில் குவியவுள்ளனர்.

இதேபோல, வணிகர் சங்கப் பேரமைப்பின் சார்பில் விழுப்புரத்தில், 'இந்திய வணிகர் வளர்ச்சி மாநாடு' என்ற பெயரில் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

மேலும் வணிகர் தின விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மே 5ஆம் தேதி (நாளை) கடைகள் அடைக்கப்படுவதாக இரு வணிகர்கள் சங்கமும் அறிவித்துள்ளன.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon