மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

எட்டாம் வகுப்புவரை இந்தி: வழக்கு தள்ளுபடி!

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் எட்டாம் வகுப்புவரை இந்தி மொழி கட்டாயமாக்க வேண்டும் என்ற பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பாஜக-வின் டெல்லி செய்தித் தொடர்பாளர் அஸ்வினி உபாத்யாய், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை மே 4ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் அமர்வு விசாரித்தது. மனுவில் தேசிய ஒருமைப்பாட்டுக்காக பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும். மேலும், இந்தியை பரவலாக்க அரசியல் அமைப்புக்கு வேண்டுகோள் விடுப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். மனுதாரர் அஸ்வினி உபாத்யாய் சார்பில் வழக்கறிஞர் சூரி ஆஜரானார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், நாடு முழுவதும் எட்டாம் வகுப்புவரை இந்தி கட்டாயம் என்பது போன்ற உத்தரவை எங்களால் பிறப்பிக்க முடியாது. நாளைக்கு யாரேனும் சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று கூறலாம். அதேபோல, பஞ்சாபி மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று கூறலாம். ஏற்கெனவே இந்தியை பரவலாக்குவதற்கான முயற்சியை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. மேலும் இதெல்லாம் அரசின் கொள்கை சம்பந்தப்பட்ட முடிவுகள். இதில் நாங்கள் எப்படி உத்தரவிடமுடியும்? என்று கேள்வி எழுப்பியதோடு இந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன்பின்னர், வழக்கறிஞர் சூரி மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறினார். உச்சநீதிமன்றம் இந்த உத்தரவின்மூலம் ஒரு இந்தி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon