மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

வருகிறார் அமித்ஷா!

வருகிறார் அமித்ஷா!

பா.ஜனதா தலைவர் அமித் ஷா, வருகிற 10ஆம் தேதி தமிழகம் வருகிறார். இதுகுறித்து மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் வியாழக்கிழமை (இன்று) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பா.ஜனதா கட்சியை பலப்படுத்த தேசியத் தலைவர் அமித் ஷா பல்வேறு மாநிலங்களுக்கு 95 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி, தமிழகத்துக்கு வருகிற 10, 11, 12 ஆம் தேதிகளில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.

10ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடக்கிறது. அதன்பின், 11ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகிறார். பின் கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜனதா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. 12ஆம் தேதி மாலை 4 மணிக்கு கோவை இந்துஸ்தான் கல்லூரியில் கொங்கு மண்டலத்தின் சமுதாய முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து தொழில் அதிபர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் சமுதாயத் தலைவர்கள் உள்பட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 2 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர். அமித் ஷாவின் வருகை தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

மேலும் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சி என்பதே எங்கள் லட்சியம். அந்த அடிப்படையில்தான் நாடு முழுவதும் அமித் ஷா கட்சிப் பணிகளை விரிவுபடுத்தியும் பலப்படுத்தியும் வருகிறார்.

கட்சியை பலப்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் முதன்மையான இடத்தில் இருக்கிறது. எனவேதான் இங்கு 3 நாட்கள் தங்கியிருக்கிறார். நாடு முழுவதும் கட்சிப் பணிக்காக 4 ஆயிரம் முழுநேர ஊழியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள். அதில், தமிழகத்துக்கு மட்டும் 150 பேர் வருகிறார்கள். 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் 15 நாட்கள் முழுநேர கட்சிப் பணியில் ஈடுபடுகிறார்கள்.

எங்களைப் பொருத்தவரை, வரவிருக்கிற உள்ளாட்சித் தேர்தல், 2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்வகையில் பணியாற்றுவோம். தமிழக அரசியலில் பா.ஜனதா தலையிடுவதாகக் கூறுவது தவறு. அதிமுக-வை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக மற்ற கட்சிகள்தான் கூறுகின்றன. ஆனால் அதிமுக தலைவர்கள் யாரும் கூறவில்லை. பா.ஜனதாவின் வளர்ச்சியைப் பார்த்து பயந்து அதை தடுப்பதற்காகவே இப்படி வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon